ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே! 

ஆன்மீகம், ஆகமம் எனும் இரு சொற்கள் பழந்தமிழில் இல்லாததால் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்று பலர் கூறுகின்றனர்.
ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே! 

ஆன்மீகம், ஆகமம் எனும் இரு சொற்கள் பழந்தமிழில் இல்லாததால் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்று பலர் கூறுகின்றனர்.  ஆனால் இவை மானுடம் நோக்கிய கருத்தாடல் மிக்கவை. "ஆன்' என்றால் பசு. "ஆன்மிமுலை அறுத்த' எனும் சொல்லாட்சி புறநானூற்றில் (34) வருகிறது. பசுவைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழியான "ஆ' என்பதே "ஆனினம்', "ஆநிரை' என மொழி நடைப்படும்.

பசுவைக் குறிப்பதான ஆ- உயிர் என்பதைக் குறித்து உணரப்படுவதால், பதி, பசு, பாசம் எனும் மெய்யியலின் முப்பொருள்படி பசு எனும் ஆன்மா உயிரைக் குறித்த தமிழ்ச் சொல். இந்தத் தமிழ்ப் பொருள்நுட்பத்தின்படியே "ஆகமம்' எனும் சொல்லும் அமைந்துள்ளது.

ஆ+ கமம் =ஆகமம். ஆ- உயிர், கமம்- நிறைவு. கமம் நிறைந்தியலும் எனும் தொல்காப்பியத்தின் உரிச்சொற்பொருளில் ஆ+ கமம் இயைய உயிர்த் தொடர்பான நிறைந்த கருத்தாடலைக் கூறுவது ஆகமம் என்பது ஒரு பொருள்.

இதுவே ஆகம்+ அம் என்ற சொற்பிரிப்புக் கூட்டுப் பொருளில் ஆகம்- உடலைக் குறிக்க, அம் என்பது கோட்பாடுகளால் அழகுபடுத்திக் கொள்ளும் நுட்பத்தைக் குறிக்கும் அளவில் ஆகமம் ஆகிறது என்பது மற்றொரு கருத்துப் பொருள்.

எனவே ஆ+ கமம் மற்றும் ஆகம்+ அம் என்ற இரண்டும் மெய்யியல் சாத்திர நுட்பத்தில் உயிர், மெய் எனும் அகபுற அமைப்புகளைத் துல்லியமாக உணர்த்தவல்லதான சொற்களால் உள்ளன எனலாம்.

முன்னதாக, ஆ+கமம் என்பது அக உடம்பான உயிர் பற்றிய முப்பத்தாறு தத்துவம் உடையது. பின்னதான ஆகம்+ அம் என்பது புற உடம்பான மெய் பற்றிய அறுபது தத்துவம் உடையது. 

இங்ஙனம் மனித உயிர் உடல்களின்படி, அக உறுப்பு புற உறுப்புகள் 96 தத்துவங்கள் கொண்ட உயிர்க்கூறும் (úஸால்) மெய்க்கூறும் (அனாட்டமி) பற்றிய கருத்தாடலை (டிஸ்கோர்ஸ்) கற்பிப்பதே ஆகமம்.

இவ்வாறு நுட்பமாய் அறிந்ததை நம் முன்னோர் எளிமையான வாய்மொழிக் குறிப்பில் உடம்பை "எண்சாண் உடம்பு' என்றதற்குள் அடக்கிக் கூறினர். 12 விரற்கிடை கொண்டது ஒரு சாண். 8 சாணுக்கு, தொண்ணூற்றாறு விரற்கிடை என்றது "96' தத்துவத்தைக் குறிக்கும்.

இந்த உயிர் உடல் பற்றிய விசாரணை நுட்பத்தையே திருமூலர், "சரீர உபாயம்' என்ற தலைப்பில் "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' (724) என்பதாய்க் கூறினார்.

மேற்காண் கருந்தாடல் உத்திப்படி, "ஆன்' என்னும் உயிர், தன்னை உலகியலாலும் மெய்யியலாலும் மேம்படுத்திக் கொள்வதே "ஆன்மீகம்' ஆகும் எனலாம்.

மிக, மிகு, மிகை என்ற சொற்கள் மிகுதிப்படுத்திக் கொள்ளும் உயர் கருத்தைக் குறிக்கும் சொல். மிகு + அம் என்ற நடையில் மிகும் என்ற சொல் அமைய அதுவே மிகம் எனலாயிற்றாம். மிசை- மீசை ஆவது போல் மிகம்- மீகம் ஆனது.

தமிழில் உள்ள "மீமிசைப் பதம்' என்ற சொல்லாடல் படியும், மீ என்றது மேலான என்ற கருத்தை உணர்த்துவதால் ஆன்மாவாம் உயிர் தன்னை உய்வித்துக்கொள்ளும் மேலாம் தரத்திற்குரியதை அமைத்ததன் வழி அறியப்படுவதால் ஆன்மீகம் பிறந்தது எனலாம்.

இப்படியாக உயிர், உடல் கூட்டுப் பொருள்நுட்பம் உடையனவே ஆன்மிக ஆகமமாம் என்பதைத் திருமூலரே,
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழும்
தான்கண்ட வாயுவும் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே  (738)
என்பதாய்க் கூறினார். 

புற உடல் உணரும் தேவாமிர்தம் போன்ற மருந்துண்டு ஆன்மாவாம் சீவன் சிவத்தோடு  ஐக்கியப்பட்டு மனித உடலுக்குள்ளே வளர்கிறதாம்.

ஈண்டு உயிரை "மான்' என்றதும் மிக நுட்பமானது.  எல்லா விலங்கிற்கும் துள்ளும் இயல்புண்டு. ஆனால் மானுக்கு அது சிறப்பு. அதனால்தான் ஆன்மாவைச் சார்ந்ததன் வண்ணமாய் மெய்ப்பொருள் வரையறுத்தது. துள்ளும் ஆன்மாவுக்கு மெய் உணர்வு என்னும் அமுதப்புல்  தந்துவிட்டால் ஆன்மா இவ்வையத்துள் வாழ்ந்ததன் அடையாளச் சுவட்டைப் பதித்துவிடும்.

இத்தகுச் செஞ்சொற்பொருளின்பச் சொற்களாம் "ஆகமம்', "ஆன்மிகம்' என்பன. அவை பழந்தமிழில் இல்லை என்பதால் அவற்றை வடசொற்கள் என்பர் பலர்.

"கடிசொல் இல்லைக் காலத்துப்படினே' என்ற தொல்காப்பியத்தின்படிக் காலத்தின் கருத்துத் தேவையை நிறைவிக்கக் கண்டறியப்படும் சொற்களைத் தமிழில்லை எனத் தள்ளுவது ஒவ்வாதாம்.

ஏனெனில் சொற்கள் தேவை கருதிய பொருளுக்கேற்பக் கிளைக்கக் கிளைக்கவே மொழி உருவாகிறது என்பதைத் தொல்காப்பியர் உணர்ந்ததால்தான் சொல்லதிகாரத்தின் தொடக்கத்தைக் கிளவி ஆக்கம் என மொழி உருவாவதன் உண்மையை உணர்த்தியதன் மூலமாகவும் 
"ஆன்மீகம்', "ஆகமம்' தமிழாம் எனலாம்!
- தமிழாகரர் தெ. முருகசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com