இந்த வாரம் கலாரசிகன் - (01-01-2023)

அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த வாரம் கலாரசிகன் - (01-01-2023)

அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்னும் ஆறு நாள்களில், கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது சென்னை புத்தகக் கண்காட்சி. ஜனவரி 6-ஆம் தேதி முதல்வர் தொடக்கி வைக்க இருக்கும் இந்த நிகழ்வுகளை "பபாசி' பதிப்பாளர்கள் சங்கம் முழுமூச்சுடன் முன்னெடுத்து வருகிறது. வழக்கத்தைவிட வரவேற்பு இருப்பதால், கூடுதலாக அரங்குகள் (ஸ்டால்கள்) அமைக்கப்படுவதாக பபாசியின் தலைவர் வயிரவன் தெரிவித்தார்.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். புத்தகக் கண்காட்சியில் "இந்த வாரம்' தொகுப்பு நமது "தினமணி' அரங்கிலும், ஏனைய முக்கியமான பதிப்பாளர்களின் அரங்குகளிலும் கிடைக்கும் என்பதுதான் அந்த செய்தி. 

2008 முதல் 13 ஆண்டுகள் நடந்த இலக்கிய நிகழ்வுகள், வெளிவந்த புத்தகங்கள், கவிஞர்கள் பலரின் கவிதைகள் அடங்கிய 2,216 பக்கங்கள் கொண்ட "இந்த வாரம்', ஆறு புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.


--------------------------------------


மகாகவி பாரதியாரின் "தமிழை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்கிற கனவை நனவாக்குவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களில் ஜார்ஜ் எல். ஹார்ட் முக்கியமானவர். அமெரிக்கரான அவர், தமிழ்ப் பெண்மணியான கெளசல்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். அவரது தமிழ் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் முதன்மை பெருகின்றன.

ஜார்ஜ் எல். ஹார்ட் எழுதிய ஆங்கிலப்  புத்தகம் "தமிழ்ச் செவ்விலக்கியங்கள்' என்கிற பெயரில் முனைவர் பு. கமலக்கண்ணனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நூலைப்பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இ. அண்ணாமலை எழுதிய அறிமுகவுரை, புத்தகம் குறித்தும், ஜார்ஜ் ஹார்ட் குறித்தும் தெள்ளத் தெளிவாக, அதே நேரத்தில் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் வந்து தங்கி, தமிழ் படித்து, ஆய்வு நிகழ்த்தி ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றில் தெரிவு செய்யப்பெற்ற பாடல்களையும், அகநானூறு, புறநானூறு முழுமையையும், கம்ப ராமாயண ஆரண்ய காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தவர் ஜார்ஜ் ஹார்ட். 

"தமிழ்ச் செவ்விலக்கியங்கள்' என்கிற நூலில், அவை தோன்றிய சூழலும் சம்ஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் குறித்த விரிவான ஆய்வை நடத்தி இருக்கிறார் அவர். சங்க இலக்கியத் தன்மைகள் சில தமிழைக் கடந்து பிராகிருதம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இருப்பதைக் காட்டுவதே இந்த நூலின் நோக்கம்.

"செவ்வியல் தமிழ் இலக்கியங்களாக நாம் கொண்டிருப்பவற்றுள் பெரும்பான்மையானவை, உ.வே. சாமிநாதைய்யர் (1855 -  1942) என்பவரின் முயற்சி இல்லாவிட்டால் அழிந்து போயிருக்கும். மாறாக, நவீன இந்தியவியலாளர்கள் யாவருள்ளும் மிகச் சிறந்தவரான அவர், நம்ப முடியாத வகையிலான பல்வேறு இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு, தனது வாழ்வையே அர்ப்பணித்துத் தன்னால் இயன்ற அளவிலான ஓலைச்சுவடிகளைத் திரட்டியும், திருத்தியும் மீட்டுருவாக்கம் செய்துள்ளார்' என்று "தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வுக்கு  நன்றி செலுத்தும் வகையில் செய்திருக்கும் பதிவு, ஜார்ஜ் ஹார்ட்டின் திறந்த மனதின் வெளிப்பாடு.

"நான் செய்துள்ளதன் போதாமையை நன்கறிந்த போதிலும், எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய ஆய்வுகளுக்குக் குறைந்தபட்சம் சிறப்பான அடிப்படையைத் தருவதாய் இது அமையுமென நம்புகிறேன்' என்கிற ஜார்ஜ் ஹார்ட்டின் கூற்றும்,  "அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழாக்கம் பெறும் இந்நூல் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குத் தமிழ் இலக்கிய ஆய்வு செய்வதற்கான பாதையைப் பழைய தரவுகளை மீள்பார்வை செய்தும், புதிய தரவுகளைச் சீர்தூக்கியும் துவக்கி வைக்கிறது எனலாம்' என்கிற பேராசிரியர் இ. அண்ணாமலையின் கருத்தும் மறுக்க முடியாதவை.

தமிழ் இலக்கிய ஆய்வில் முக்கியமான இந்த நூலைத் தமிழாக்கம் செய்திருக்கும் முனைவர் பி. கமலக்கண்ணனின் முனைப்பும், முயற்சியும் மட்டுமல்ல, அவரது உழைப்பும், மொழி ஆளுமையும் வணக்கத்துக்குரியவை. 

தமிழ் மாணவர்கள், தமிழாசிரியர்கள் மட்டுமல்ல, நூலகங்களிலும் இடம் பெற்றாக வேண்டிய முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்று.


--------------------------------------

இப்போது பரவலாகப் புதுக்கவிதை என்று சொல்கிறோமே, அந்தச் சொல்லைத் தமிழுக்குத் தந்தவர் க.நா.சு. அதற்கு முன்னர் லகு கவிதை, வசன கவிதை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

"மயன்' என்கிற பெயரில் சரஸ்வதி, எழுத்து இதழ்களில் கவிதைகள் பல எழுதியிருக்கும் க.நா.சு. "சூறாவளி' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர்.

"எல்லைகளை மீறி முயலுகிறபோதுதான் கவிதையேயாகிறது'' என்று கருதும் கவிஞர், விமர்சகர், எழுத்தாளர் க.நா.சு.வுடன் செய்தி ஆசிரியர் பாவை சந்திரன், கவிஞர் இளையபாரதி போன்றவர்களைப்போல எனக்குத் தொடர்பு இருந்ததில்லை. அவரை நான் சந்தித்ததில்லை. நான் அவருக்கு அறிமுகமாகவில்லை. ஏன் என்று கேட்டால் தெரியவில்லை, அமையவில்லை என்றுதான் என்னால் சொல்ல முடிகிறது.

இப்போது எதற்கு க.நா.சு. பற்றிய இந்தக் குறிப்புகள் என்று நீங்கள் கேட்கலாம். அவரது "உயில்' என்கிற கவிதையைப் படித்தேன். நான் ரசித்ததை நீங்களும் ரசிக்க வேண்டும் என்பதால், அதிலிருந்து சில வரிகள் - 

என் உயிலை எழுதிவைக்க 
        வேண்டிய
நாள் வந்துவிட்டது.
சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும்.
அது புருஷ லட்சணம்.
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள
கிழிசல் காகிதங்களை எல்லாம்
உலகத்துச் சர்வகலா சாலைகளுக்குத்
தந்து விடுகிறேன்
அதைவிடச் சிறப்பாக
அவர்களால் கிழிக்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com