இந்த வாரம் கலாரசிகன் - (08-01-2023)

கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது சென்னை புத்தகக் காட்சி. அடேயப்பா, இந்தத் தடவை ஆயிரம் அரங்குகளுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (08-01-2023)

கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது சென்னை புத்தகக் காட்சி. அடேயப்பா, இந்தத் தடவை ஆயிரம் அரங்குகளுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியிட முடியாமலும், விற்பனைக்குக் கொண்டுவர முடியாமலும் தேங்கிக் கிடந்த நல்ல பல படைப்புகள் வாசகர்களின் வரவேற்புக்காக அந்த அரங்குகளில் காத்திருக்கின்றன.

புத்தகங்களை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கவும், தேடிச் சென்று வாங்கவும் புத்தகக் காட்சிகள் உதவுகின்றன. அக்டோபர் மாதம் ஜெர்மனியில் ஃபிராங்பர்ட் நகரில் நடக்கும் சர்வதேச புத்தகக் காட்சியில் தொடங்கி, ஜூன் மாதம் வரையில் ஆண்டின் 9 மாதங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும், நகரங்களிலும் நடக்கும் புத்தகக் காட்சிகள் வாசகர்களின் பார்வைக்குப் பல கோடி புத்தகங்களைக் காட்சிப்படுத்துகின்றன. அந்த வரிசையில், நமது சென்னை புத்தகக் காட்சியும் இடம் பெறுகிறது.

சென்னையில் இருக்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியிருக்கும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

"மொழியைக் காக்கும் கடமை, அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும்' என்கிற அவரது கருத்தில் எனக்குச் சிறிய கருத்துவேறுபாடு உண்டு. "அரசியல் இயக்கங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும்' என்பது எனது கருத்து. 

தமிழில் தவறின்றி பேசவும், எழுதவும் தெரியாத, தமிழ்ப் புத்தகங்களைப் படிக்காத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டு வருகிறது என்கிற அச்சம் மேலோங்குகிறது. அந்தப் போக்கை அரசியல் இயக்கங்களால் தடுத்துவிட முடியாது. ஆனால், நல்ல எழுத்தால் மாற்றம் ஏற்படுத்த முடியும். அதை சில எழுத்தாளர்கள் செய்தும் வருகிறார்கள். 

பெற்றோர் குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்குச் சென்று தங்களது குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பில் ஈர்ப்பு ஏற்படுத்துவதன் மூலம், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழை நேசிக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்க உதவ முடியும். சென்னையில் நிரந்தரப் புத்தகப் பூங்கா என்கிற முதல்வரின் வாக்குறுதி அதற்கு உரமேற்றும்.

ஜனவரி 22-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி  வரை நடக்கும் புத்தகக் காட்சி, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரைப் போலவே நானும் விழைகிறேன். 

பின் குறிப்பாக ஒரு தகவல். சென்னை புத்தகக் காட்சியில் கலாரசிகனின் "இந்த வாரம்' தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. நமது 'தினமணி' அரங்கில் மட்டுமல்லாமல், வேறு சில அரங்குகளிலும் கிடைக்கும். ஆறு தொகுதிகள் கொண்ட அந்தத் தொகுப்பின் விலை ரூ.2,400. தனிப்பிரதி விற்பனைக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-------------------------------------------------

"தமிழ்மணி'யில் கட்டுரை எழுதுங்களேன் என்று நான் பேராசிரியர் இராமச்சந்திரனை அழைத்து வேண்டுகோள் விடுப்பது முதன்முறையல்ல. கடந்த வாரம், ஒருநாள் நான் அவரை அழைத்துப் பேசினேன். அவரது பட்டிமன்ற, இலக்கிய மேடைப் பேச்சுகளின் ரசிகன் என்கிற முறையில் அவரது ஆழங்காற்பட்ட புலமை காற்றோடு கலந்து விடாமல், எழுத்தில் பதிவாக வேண்டும் என்கிற எனது விருப்பம்தான் காரணம். 

ஆங்கிலப் பேராசிரியர்கள் பலர், தமிழிலக்கியத்திலும் தேர்ந்த புலமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் சிறப்பிடம் பெறுபவர் பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன். பணி ஓய்வுக்குப் பிறகு தென்காசி மேலகரத்தில் குடியேறி இருக்கும் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் தனது "என் மேடை அனுபவங்கள்' என்கிற புத்தகம் குறித்துக் குறிப்பிட்டார். எங்கள் தென்காசி நிருபர் பிரகாஷிடம் உடனடியாக அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தைப் பெற்று எனக்கு அனுப்பித் தர விழைந்தேன்.

பட்டிமன்ற, இலக்கிய மேடைப் பேச்சாளர்களின் மேடை அனுபவங்கள் போல சுவாரஸ்யமான செய்திகள் வேறு எதுவும் இருக்க முடியாது. சிலம்பொலியார், ஒளவை நடராசனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, முனைவர் தெ. ஞானசுந்தரம், திருவாரூர் சண்முகவடிவேல் ஐயா உள்ளிட்டவர்களின் சில அனுபவங்களை அவர்கள் மேடைகளில் பேசும்போது கேட்டு ரசித்திருக்கிறேன். அதனால், பேராசிரியர் இராமச்சந்திரனின் மேடை அனுபவங்களை உடனடியாகப் படித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. 

தனது அரை நூற்றாண்டு மேடைப் பேச்சுப் பயணத்தில் பெற்ற 60 அனுபவங்களைப் படித்து நான் ரசித்ததைவிடக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததுதான் அதிகம். "சபை சரியாக வாய்க்காவிட்டால், பேச்சாளனைப்போல் பரிதாபம் பாரின்மிசை இல்லையடா' என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பதும் உண்மை. ""ஒரு பேச்சாளருக்கு இரண்டு சாதிகளோடுதான் தொடர்பு. அவை படித்த சாதி, பாமர சாதி இல்லை. ரசித்த சாதி, ரசிக்காத சாதி'' இரண்டும் தான் என்பது அதைவிடவும் உண்மை.

சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழகத்துக்கு நல்ல பல மாணவர்களை வழங்கி இருப்பதுபோல, தமிழுக்குப் பேராசிரியர் இராமச்சந்திரனை வழங்கி சிறப்புச் சேர்த்திருக்கிறது என்பேன். சிரிக்க வைத்தது என்றா சொன்னேன்? நிறையவே சிந்திக்கவும் வைத்தது, பேராசிரியர் இராமச் சந்திரனின் "என் மேடை அனுபவங்கள்'.

-------------------------------------------------

விஞர் பிருந்தா சாரதி கவிதைத் தொகுப்பு வெளிக்கொணர்ந்தால் மறக்காமல் உடனடியாக எனக்கு அனுப்பி விடுவார். அவரது சமீபத்திய தொகுப்பு, "பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்'. அதில் இடம் பெற்றிருக்கும் ஹைக்கூ இது - 
எவ்வளவு பெரிய சிறகுகள்
வானம் வசப்படா வாத்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com