நந்திச் செங்கோல் ஏந்தும் நடேசர்
By நா. கணேசன் | Published On : 28th May 2023 05:55 PM | Last Updated : 28th May 2023 05:55 PM | அ+அ அ- |

தென்னிந்தியாவில் கல்லால் கட்டிய திருக்கோவில்களை முதலில் அமைத்தவர்கள் சாளுக்கிய மன்னர்கள். ஐஹொளெ, பட்டதக்கல், வாதாபி போன்ற தலங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த கற்றளிகளை ஆறாம் நூற்றாண்டில் இருந்தே கட்டத் தொடங்கினர்.
தெய்வம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கொடிக்கம்பம் அமைந்திருக்கும். சிவபிரானுக்கு நந்தி, மகாவிஷ்ணுவுக்கு கருடன், பிரம்மாவுக்கு அன்னம், துருக்கைக்குச் சிங்கம், முருகனுக்கு மயில், இந்திரனுக்கு யானை, மன்மதனுக்கு மகரம், சனிக்குக் காக்கை வாகனமாகும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
உத்திரமேரூர் உள்ளிட்ட பல கோவில்களில் மகரத் துவசத்துடன் மன்மதனும், ரதிதேவியும் காட்சி தருவர். உத்திரமேரூரில் உள்ள குடவோலைத் தேர்தல் முறை பற்றிய விரிவான சோழர் காலக் கல்வெட்டு உலக வரலாற்றாசிரியர்களே வியப்பதாகும்.
"பொதியம் பொருப்பன்' என்பது பாண்டிய மன்னர்களின் பெயர், மலயத்துவச பாண்டியன் மதுரை மீனாட்சிக்குத் தந்தை என்பது இதனால்தான். பொதிகை மலை அருகிலே உள்ள பெருங்குளம் என்ற ஊரில் செங்கோல் ஆதீனம் உள்ளது. பாண்டியர்களுக்குச் செங்கோல் வழங்கும் உரிமை உடைய ஆதீனம் என்பர். "வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி' என்பது திருக்குறள்.
ஆனந்த நடராஜ மூர்த்தி என்ற புகழ்பெற்ற வடிவம் சோழப் பேரரசர்கள் ஆட்சியில், பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் வடிவமாக ஐம்பொன்னில் வார்க்கப்பட்டதாகும்.
நடராஜர் அல்லது ஆடல்வல்லான் என்னும் பெயர் இவ்வடிவத்திற்கு மட்டுமே வழங்கும் சிறப்புப் பெயர். மற்ற நடன வடிவங்களில் ஆடும் சிவபிரானை "நடேசர்'என்று அழைப்பது மரபு.
பட்டதக்கல் விரூபாக்ஷர் ஆலயம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகும். பட்டதக்கல் கோவில் சுவரில் உள்ள நடேச மூர்த்தி "நந்திச் செங்கோல்' ஏந்திக் கொண்டுள்ளமை கலைவரலாற்றில் அரிய வடிவமாகும். நடேசருக்கு பூமாரியை வித்யாதரர் பொழிகின்றனர்.
முன்புறமாக, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், ஒரு கை பாதத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. பின்புறக் கைகள் உடுக்கையும், நந்திச் செங்கோலும் ஏந்துகின்றன.
நந்தி தண்டம், முயலகனின் தலைக்குச் சற்று மேலே உள்ள அமைப்பு, செங்கோலால் நீதியை நாட்டத் தீமையை அடக்குவது போலத் தோற்றம் அளிக்கிறது.
நடேசனின் நடனம் கண்டு மகிழ்ந்து, சிவகணம் ஒன்று குடம் போன்ற முழவையும், இன்னொன்று புல்லாங்குழலையும் வாசிக்கின்றன. இந்த நடனத்தை ஊர்த்துவஜானு எனப் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் வகைப்படுத்துகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...