கண்ணபுரத்தார் கண்டெடுத்த கருந்தனம்

கண்ணபுரத்தார் கண்டெடுத்த கருந்தனம்

எட்டுத்தொகை நூல்களில் குறுந்தொகைக்குத் தனிச்சிறப்பு உண்டு. அதுவே உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல். குறுந்தொகை உரையோடு கூடிய பதிப்புகளில் சிறந்து ஒளிர்வது உ.வே.சா. பதிப்பே ஆகும். எனினும், அதனை முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரம் திருமாளிகைச் செளரிப்பெருமாள் அரங்கசாமி ஐயங்கார் ஆவார்.

அரங்கசாமி ஐயங்கார் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் என்னும் திருமால் உகந்தருளின நிலத்தில் பிறந்தவர். அவர் பிஞ்சுப் பருவத்தில் தமது ஐந்து வயதில் தாயை இழந்தவர், பதினைந்து வயதில் தந்தையை இழந்தவர். இளம்பருவத்தில் இருபது வயதில் மனைவியை இழந்தவர். இத்துணை சொல்லொணாத் துயரத்தில் உழன்ற போதும் தமிழ்மீது கொண்ட காதலை மறந்தார் அல்லர். அவரது ஆறாத்துயரத்திற்கு அன்னைத் தமிழே அருமருந்தாயிற்று.

மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் சேர்ந்து படிக்க விழைந்தார். வாய்ப்புக் கிட்டவில்லை. சோழவந்தான் என்னும் ஊரில் வாழ்ந்த கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளைத் தஞ்சம் அடைந்தார். ஒரே வாரத்தில் நன்னூல் முழுவதையும் மனப்பாடம் செய்து ஒப்பித்து அவருடைய நன்மதிப்பைப் பெற்றார்.

பல நூல்களைத் தாமே முயன்று கற்றுத் தம் ஐயங்களைச் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் வினவித் தெளிவு பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டித வகுப்பில் தேறினார்.

வேலூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் இடைக்காலத் தமிழாசிரியராய்ச் சில மாதங்கள் பணிபுரிந்தார். பின்பு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் புலவராய் வேலை பார்த்துவந்தார். தொல்காப்பியப் பொருளதிகார உரையினைப் படித்தபோது அதில் இடம் பெற்றிருந்த குறுந்

தொகைப் பாடல்களின் சுவையில் ஈடுபட்டு அந்

நூலின் பிற பாடல்களையும் தேடிப் பதிப்பிக்க விழைந்தார்.

பள்ளி அரையாண்டு விடுமுறையில் சென்னையை அடைந்து அரசு புத்தக சாலையில் இருந்த சுவடியினைப் படியெடுத்துக் கொண்டார். அவருடைய நண்பர் ய. முத்துசாமி ஐயர் தங்குவதற்கும் படியெடுப்பதிலும் உதவிசெய்துள்ளார். மணக்கால் ஐயம்பேட்டை எஸ். முத்துரத்ந முதலியார் ஓர் ஓலைச்சுவடியினைத் தேடி அவருக்கு அளித்தார். மிதிலைப்பட்டி, செவ்வூர் முதலிய இடங்களுக்குச் சென்று சுவடிகள் கிடைக்கலாம் என்று தேடியுள்ளார். வேறு சுவடி யாதும் கிடைக்க வில்லை. தம்மிடம் இருந்த இரு சுவடிகளைக் கொண்டே குறுந்தொகைக்கு உரை வரைந்து பதிப்பிக்கலானார்.

பொருள் வசதி இல்லை. நூற்பதிப்புக்குப் பொருள் உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்துப் பலரின் உதவியைப் பெற்றார். அவர்களுள் ஏலகிரி ஜமீன்தார் பொன்னேரி முகுந்த மாதவ முனிபாபு ரூபாய் ஐம்பதும் இஸ்லாமியா மதரúஸ முதல்வர் மஹமத் இப்ராஹிம் குரைஷி ரூபாய் இருபத்தைந்தும் பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் ரூபாய் பத்தும் தந்துள்ளார்கள்.

நூலின் சில பகுதிகள் தமக்கு விளங்கவில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அப்பாட்டில் நிலவும் மெய்ப்பாடு, அப்பாட்டின் பயன் இரண்டினையும் குறித்துச் சென்றுள்ளது இவரது தனிச்சிறப்பு.

அரங்கசாமி ஐயங்கார் குறுந்தொகையைப் பதிப்பிக்கத் தொடங்கிய போது ஒருபாட்டுக் குறைவாக இருப்பதைக் கண்டார். அதனைத் தேடிக் கண்டறிந்ததைச் சுருக்கமாகத் தம் குறுந்தொகைப் பதிப்பில் குறித்துள்ளார்.

அகப்படாத அப்பாட்டு முந்நூறாவது பாட்டிற்கு மேல் இருப்பதாக உணர்ந்தார். மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டில் இருக்கலாம் என்று கருதி மதுரைத் தமிழ்ச் சங்கம் சென்று சங்கத்தின் தலைவர் இசைவைப் பெற்று, அங்கிருந்த சுவடியினோடு தம்முடைய படியினைத் தாம் ஒருவராகவே ஒப்புநோக்கியுள்ளார். அதுவரை தமக்குக் கிடைக்காமல் இருந்த அப்பாட்டுக் கிடைத்தது.

அது குறுந்தொகையின் 316-ஆம் பாட்டாகும். அதனை அடைந்தபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தார். "கருந்தனம் பெற்றார் போல மகிழ்ச்சி மிக்கவனானேன்' என்று குறித்துள்ளார்.

அது,

ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்நிற்பவும்

நோய்மலி வருத்தம் அன்னை அறியின்

உளனே வாழி தோழி! விளியாது

உரவுக் கடல்பொரு விரவுமணல் அடைகரை

ஓரை மகளிர் ஓராங்குக் காட்ட

வாய்ந்த வலவன் துன்புறு துனைப்பரி

ஓங்குவரல் அருவி விரிதிரை களையும்

துறைவன் சொல்லோ பிறவா யினவே

என்னும் தும்பிசேர் கீரன் பாடிய பாட்டாகும்.

தலைமகன் வாராமையால் வருத்தமுற்ற தலைமகளிடம் "எதற்காக வருந்துகிறாய்?' என்று தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகள், "கடற் பகுதிக்குச் சொந்தமான தலைமகன் இன்னும் வரவில்லை. அவன் சொன்ன சொற்கள் பொய்யாய்ப் போய்விட்டன. என் கைகளில் உள்ள அழகிய வளையல்கள் கழல்கின்றன. உடம்பில் அயர்வு நிலையாகத் தங்கிவிட்டது. இந்த என் துன்பத்தை அன்னை அறிந்தால் யான் உயிரோடு இருப்பேனோ? இருக்க மாட்டேன். அவள் என் நிலையினை அறிவாளோ என்று அஞ்சி வேறுபட்டேன்' என்கிறாள்.

அரங்கசாமி ஐயங்கார் பாட்டின் இக்கருத்தினைச் சரியாகக் குறித்துள்ளார். ஆனால் அவரால் தலைவனைப் பற்றிக் கூறும் பகுதிக்குச் சரியான பொருள் காணமுடியவில்லை. "கடற்கரையில் ஓரை மகளிர் ஒருங்கே காட்ட விரைந்த குதிரையின் செலவை அலைகள் அகற்றும் துறைவன் சொற்களோ வேறாயின' என்று உரை வரைந்துள்ளார். இதில் தெளிவு இல்லை.

உ.வே.சா. பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடியில் இப்பாட்டு இருந்துள்ளது போலும். அவர் இது கிடைத்தது குறித்து யாதும் எழுதவில்லை. ஆனால், ஐந்தாம் அடியில் "ஓராங்குக் காட்ட' என்பதற்குப் பதிலாக "ஓராங்கு ஆட்ட' என்னும் பாடத்தைக் கொண்டுள்ளார்.

ஆறாம் அடியில் உள்ள "வாய்ந்த வலவன்'என்பதனை "வாய்ந்த அலவன்' என்று படித்துள்ளார். ஏழாம் அடியை நேரிசை ஆசிரியப்பாவிற்கு ஏற்ப, அருவி என்னும் சீர் இல்லாத முச்சீரடியாகக் கொண்டுள்ளார்.

பிற்பகுதிக்கு, "மணல் விரவிய கடற்கரையில் விளையாட்டுப் பெண்கள் ஒரு தன்மையாக அலைக்கும்போது, நண்டு அவர்க்கு அஞ்சி ஓடியது. அந் நண்டினது வருத்தம் மிக்க ஓட்டத்தை விரைந்த அலைகள் அதனை அடித்துக்கொண்டு சென்று நீக்கின.

அத்தகைய துறையையுடையவன் தலைமகன். அவனுடைய சொற்கள் வேறுபாடு உடையன ஆயின' என்று தெளிவான உரை கண்டுள்ளார்.

இப்பாடங்களும் பொருளுமே தக்கனவாய் அமைந்துள்ளன. இப்பாட்டினை அரங்கசாமி ஐயங்கார் தேடிக் கண்டுள்ளார். உ.வே. சாமிநாத ஐயர் தெளிவுபடுத்தி உரையிட்டுள்ளார். நாம், கண்ணபுரத்தார் முயன்று தேடிக் கண்டெடுத்த கருமணியை உத்தமதானபுரத்தார் பட்டை தீட்டி ஒளிரச் செய்துள்ளார் என்று கொண்டாடி மகிழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com