சித்திரைத் திங்களின் சிறப்பு!

சித்திரை மாதத்தின் தொன்மையும் சிறப்பும்

தொன்று தொட்டு தமிழில் வழங்கி வரும் சித்திரை, வைகாசி முதலிய பன்னிரு மாதங்களுக்கும் தொல்காப்பியர் இலக்கணவிதி கூறியுள்ளார். இப்பன்னிரு மாதங்களும் இகர ஈறு, ஐகார ஈறு பெற்று முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார் (தொல்: எழுத்து, உயிர்மயங்: 46, 84).

இப்பன்னிரு மாதங்களுள் சித்திரை மாதம் ஐகார ஈற்றில் முடியும் மாதமாகும். மேலும், தொல்காப்பியர் ஓர்ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஆறு பெரும்பொழுதுகளாகப் பகுத்துள்ளார்.

அவற்றுள் சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்களை இளவேனில்காலம் எனக் குறிப்பிட்டுள்ளார் (தொல்: பொருள், அகத், 5). இக்கருத்துகளைக் கூர்ந்து நோக்கின் சித்திரை முதலிய மாதப்

பெயர் வழக்கு தொல்காப்பியர் காலத்திலிருந்தே இருந்துள்ளது என அறியலாம்.

அக்காலத் தமிழர்கள் சூரியனை அளவு கருவியாக வைத்துக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுள்ளனர். இவ்வாறு காலத்தை அளக்கும் முறையைச் செளரமானம் (செளரம் } சூரியன்; மானம் } அளவு) என்பர்.

சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசி வரை பயணம் செய்யும் காலத்தைச் செளரமான ஆண்டு எனக் குறிப்பர். அதாவது, சித்திரைத் திங்கள் முதல்நாள் தொடங்கிப் பங்குனித் திங்கள் கடைசிநாள் வரையிலுள்ள ஒருகாலக் கூறினைச் செளரமான ஆண்டு எனக் குறித்துள்ளனர்.

மேடம் முதலான பன்னிரு இராசிகளில் ஏதேனும் ஓர் இராசியில், சூரியன் தங்கும் காலத்தைச் செளரமான மாதம் என்பர். சூரியன் சித்திரை மாதம் மேட ராசியில் தங்கினால் மேட ஞாயிறு என்றும் இடப ராசியில் தங்கினால் இடப ஞாயிறு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சூரியன் மேடம் முதலான பன்னிரு இராசிகளில், இயங்குவதை நெடுநல்வாடை, "திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து' என்று குறிப்பிடுகிறது (161).

நிறைமதியாகிய பெளர்ணமி வரும் நாளில் எந்த நட்சத்திரம் நிகழ்கின்றதோ அந்த நட்சத்திரப் பெயரால் அம்மாதப் பெயர் வழங்கப்பட்டு வந்தது.

இதற்குச் சான்றாக சிலப்பதிகாரம், சித்திரை மாதத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நின்றது என்ற குறிப்பை, "சித்திரைத் திங்கள் சேர்ந்தென'

எனக் குறித்துள்ளது (இந்திரவிழவூர் எடுத்தகாதை, 64).

காற்றைப் பற்றிய நாட்டுபுற மக்களின் பழ

மொழிகள் பலவுண்டு. அவற்றிலொன்று, "சித்திரைக் காற்றுச் சிலம்பி அடிக்கும்' என்பதாகும். சிலம்பி என்பதற்குச் சிலவாய் (கொஞ்சம்) என்று பொருள் கூறுவர். அதாவது, சித்திரை மாதத்தில் காற்று குறைவாய் வீசுமென்க.

தொன்று தொட்டு தமிழர்கள் சித்திரை முதல்நாளைத் தமிழ்வருடப் பிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இருக்கும் நாளை, "சித்ரா பெளர்ணமி' என்பர். தமிழர்கள் இந்நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அன்று திருக்கோயில்களில் சித்திரகுப்தன் என்னும் கடவுளுக்கு விழாஎடுத்து வழிபட்டு வருகின்றனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் திருநாவுக்கரசர், திருக்குறிப்புத் தொண்டர், சிறுத்தொண்டர், இசைஞானியார், விறன்மிண்டர், மங்கையர்க்கரசியார் ஆகிய ஆறு நாயன்மார்கள் சித்திரை மாதத்தில் அவதாரம் செய்தவர்களாவர்.

இவ்வாறு இன்று தொடங்கும் சித்திரை மாதம் எத்தனையோ சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com