தேவகுலத்தாரும் நம்மாழ்வாரும்

தேவகுலத்தாரும் நம்மாழ்வாரும்
Published on
Updated on
2 min read

நிலத்தினும் பெரிதே என்னும் குறுந்தொகைச் செய்யுளைத் தமிழ் கற்றார் பலரும் நன்கு அறிவர். தோழியிடம் தலைவனுடைய நட்பினைத் தலைவி சிறப்பித்துக் கூறுமுறையில் அப்பாடல் அமைந்துள்ளது.

நிலத்தினும் பெரிதே; வானினும்

உயர்ந்தன்று;

நீரினும் ஆரளவின்றே, சாரற்

கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும்

நாடனொடு நட்பே!

என்பது பாடல். பாடியவர் தேவகுலத்தார் என்னும் பெயரினர்.

"மலைப் பக்கத்தில் உள்ள கரியகொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய மலைநாடு அது. அந்த மலை நாட்டுக்குரியவன் தலைவன். அவனொடு நான் கொண்ட நட்பானது இந்த நிலத்தைக் காட்டிலும் அகலமானது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது' என்பது இவ்வடிகளின் பொருளாகும். இங்கே நட்பின் பரப்பு, உயர்வு, ஆழம் முதலியவற்றிக்கு முறையே நிலம், விசும்பு, கடல் முதலியவை உவமையாக்கப்பட்டுள்ளன.

இதனை வேறுமொழி நடையில் சற்றே மாற்றிச் சொன்னது போலத் திருவாய் மொழிப் பாசுரம் ஒன்றுள்ளது. இறைவன் திறத்துக் காதல் கொண்ட தலைவி தோழியிடம் கூறுவதாகவே அதனைப் பாடியிருக்கிறார் நம்மாழ்வார்.

பாசுரப்பகுதி வருமாறு:

கொண்ட என் காதல் உரைக்கில் தோழி!

மண்டிணி ஞாலமும் ஏழ்கடலும்

நீள்விசும்பும் கழியப் பெரிதால் (7}3}8)

மண்ணாலே நெருங்கின பூமியும் அதனைச் சூழ்ந்த கடலும் அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும் என்னும் இவ்வத்தனைக்கும் மேலே பெரிதாயிருப்பது தன் காதல் என்கிறாள் தலைவி.

எனினும் திருவாய்மொழி ஈட்டுரைகாரர் இந்த இடத்தில் நிலத்தினும் பெரிதே என்னும் குறுந்தொகைச் செய்யுளை மேற்கோள் காட்டவில்லை. மாறாக, வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ என்னும் திருவாய்மொழியில், தகவிலை தகவிலையே நீ கண்ணா என்னும் பாசுரத்துக்குப் பொருள் விரிக்கையில் (3690) இச்செய்யுளைக் காட்டுகிறார்.

தகவிலை தகவிலையே நீ கண்ணா!

தடமுலை புணர்தோறும் புணர்ச்சிக்கு

ஆராச்

சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை

மூழ்க்கச்

சூழ்ந்து அது கனவென நீங்கி ஆங்கே

அகஉயிர் அகம் அகம் தோறும் உள்புக்கு

ஆவியின் பரம் அல்ல வேட்கை

அந்தோ!

மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்

வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே!

"கண்ணா நீ மிகக் கொடியவன். பெண்களை வருத்தக் கூடாது என்கிற பொதுவான அருள் உடையவனும் அல்லை; அதிலும் நோவுபட்டாரை நலியத் தகாது என்ற சிறப்பான அருளும் உன்னிடத்தே இல்லை. என் பெரிய மார்பகங்களை நீ தழுவும் போதெல்லாம் அந்தத் தழுவுகைக்கு உள்ளடங்காமல் பெருகிய இன்ப வெள்ளம் ஆகாசத்தையும் கடந்து அறிவை அழுந்தும்படியாகச் சூழ்ந்து, அப்போதே அது கனவாகக் கழிகின்றது.

அந்த நிலையிலே ஆசையானது மனத்தின் இடந்தோறும் உள்ளே புகுந்து உயிரால் பொறுக்க முடியாதபடி பெருகுகின்றது. அந்தோ, உன்னைப் பிரிவதற்குக் காரணமாக இருக்கிற பசு மேய்க்கப் போவதை நீ தவிர்ப்பாயாக' என்பது இதன் பொருள்.

நாயகி பாவத்திற்பாடும் ஆழ்வாரின் சுகவெள்ளம் ஆகாயத்தையும் கடந்து பரவி அறிவை மூழ்கச் செய்யும் அனுபவம் இதில் பேசப்படுகிறது. இதனை விளக்கும் பொருட்டே, நிலத்தினும் பெரிதே என்னும் குறுந்தொகைச் செய்யுள் முழுவதையும் ஓர் அடி விடாமல் எடுத்துக் காட்டுகிறார் நம்பிள்ளை.

அவர், ஆழ்வார் பாசுரங்களை, "அறியக் கற்றுவல்ல வைணவராக'த் திகழ்ந்தவர்; அத்துடன் சங்க நூற்பயிற்சியுடையவராகவும் ஈட்டுரை நமக்கு அவரை அடையாளம் காட்டுகிறது. அதனால்தான் ஆகாயத்தையும் கடந்து பரவி அறிவை மூழ்கச் செய்யும் நம்மாழ்வாரின் காதல் அனுபவத்துக்கு மிகப் பொருத்தமாக இக்குறுந்தொகைச் செய்யுளை அவரால் அடையாளம் காட்ட முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com