நான்கு நூல்களின் தொகுப்பான நாலைந்திணை!

நான்கு நூல்களின் தொகுப்பான நாலைந்திணை!

சி.வை. தாமோதரம்பிள்ளையால் 1887}ஆம் ஆண்டு முதல் முதலாகக் கலித்தொகை பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் பதிப்புரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைச் சுட்டுமிடத்தில் ஐந்திணை என்பது ஐம்பது பாடலால் இயற்றப்பட்ட மாறன் பொறையனாருடைய நூலாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஐந்திணை குறித்து சி.வை. தாமோதரம்பிள்ளை கூறியதற்கு மறுப்பாக கொ. ஸ்ரீநிவாசராகவாசாரியார் நாலடியார் நூல் வரலாறு என்னும் நூலில் ஐந்திணை என்பது ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமொழியைம்பது, திணைமாலைநூற்றைம்பது என்னும் நான்கு நூல்களோடு இன்னும் கிடைக்கப்பெறாத ஒரு நூலையும் சேர்த்து ஐந்து நூல்களைக் குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சி.வை. தாமோதரம்பிள்ளை 1889}ஆம் ஆண்டு வெளியிட்ட இலக்கண விளக்கம் என்னும் நூலின் பதிப்புரையில் கொ. ஸ்ரீநிவாசராகவாசாரியார் கூறியதற்கு விளக்கம் தர முனைந்தார். தாம் கூறிய ஐந்திணை என்பது ஒரு நூல் என்பதை மறுத்து கொ. ஸ்ரீநிவாசராகவாசாரியார் கூறிய நான்கு நூல்களின் பெயர்களை ஐந்திணைக்கு உரியதாக ஏற்றுக் கொண்டார். ஆனால் ஐந்திணை என்பது ஐந்து நூல்களைக் குறிக்கும் என்பதை மறுத்து அது நான்கு நூல்களை மட்டுமே குறிக்கும் என்பதைத் தெளிவாகச் சுட்டினார்.

இதனால் ஐந்திணையில் நான்கு நூல்கள் இடம்பெறுமா அல்லது ஐந்து நூல்கள் இடம்பெறுமா என்ற நிலை ஏற்பட்டபொழுது அது நான்கு நூல்களை மட்டும்தான் குறிக்கும் என்று இலக்கண ஆதாரத்தோடு விளக்க முற்பட்டவர் தி. செல்வக்கேசவராய முதலியார்.

இந்த நிலையில்தான் ரா. இராகவையங்கார் 1903}ஆம் ஆண்டு ஐந்திணையைம்பது என்னும் நூலினை முதல் முதலில் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1912}ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் முகவுரையில் "நாலடி' எனத் தொடங்கும் பதினெண்கீழ்க்கணக்கிற்குரிய வெண்பாவைக் கொடுத்ததுடன் அவ்வெண்பாவிற்கு மூன்றாம் அடியிலுள்ள "மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி' என்பதற்கு "இன்னிலைய காஞ்சியுட னேலாதி' என்றும் இறுதி அடியிலுள்ள "கைந்

நிலைய வாங்கீழ்க் கணக்கு' என்பதற்கு

"நன்னிலைய தாகுங் கணக்கு' என்றும் பாட

வேறுபாடுகள் உடைய மற்றொரு வெண்பாவையும் சுட்டியுள்ளார்.

ஐந்திணைக்கு ஐந்து நூல்கள் என்ற கருத்தை எம். சேஷகிரி சாஸ்திரியார் ஏற்றுக் கொண்டாலும் ரா. இராகவையங்காரால் குறிப்பிடப்படும் கைந்நிலையை ஐந்திணையின் ஐந்தாவது நூலாக ஏற்காமல், அதற்கு வேறொரு நூலாகத் திணைமாலையைம்பது என்பதைச் சுட்டியதோடு அந்நூலைக் கண்ணஞ்சேந்தனார் இயற்றினார் என்றும் கருதினார்.

கோ. இராமசாமி பிள்ளை, சிவபாதம் ஆகியோர் ஐந்திணைக்கு ஐந்து நூல்கள் என்ற கருத்தை ஒத்துக் கொண்டதோடு ஐந்திணையின் ஐந்தாவது நூலாகத் திணைமாலை என்ற புதிய நூலையும் குறிப்பிட்டுள்ளனர்.

கைந்நிலை, திணைமாலையைம்பது, திணைமாலை ஆகிய நூல்களை ஐந்திணையில் ஐந்தாவது நூலாகக் கூறிவந்த நிலையில் அந்நூல்களை ஏற்காதவர்கள் "நாலடி' வெண்பாவில் இடம்பெற்றுள்ள "இன்னிலை' என்னும் சொல்லைத் தனியொரு நூலாக ஏற்றுக் கொண்டனர்.

அவர்கள் ஐந்திணை என்பது நான்கு நூல்களை மட்டுமே குறிக்கும் என்றனர். அவர்களில் வ.உ. சிதம்பரம்பிள்ளை, ஞா.சா. துரைசாமி பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர தேசிகர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஏற்கனவே ஐந்திணையில் ஐந்திணையைம்பது வெளிவந்திருந்த நிலையில் ரா. இராகவையங்காரால் 1904}ஆம் ஆண்டு திணைமாலைநூற்றைம்பதும் சோமசுந்தர தேசிகரால் 1918}ஆம் ஆண்டு திணைமொழியைம்பது, 1926}ஆம் ஆண்டு ஐந்திணையெழுபது ஆகிய நூல்களும் முதல் பதிப்புகளாக வெளியிடப்பட்டன.

ஐந்திணை நூல்கள் அனைத்தும் வெளிவந்த பின்னர் அந்நூல்கள் குறித்து ஆராய்ச்சி செய்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை நூல்களைப் போல் செம்மையாகப் பதிப்பிக்கவில்லை எனக் கூறி அந்நூல்கள் தொடர்பாக ஓலைச்சுவடிகள் பலவற்றைக் கொண்டு ஆய்வு செய்து ஒவ்வொரு நூலாக வெளியிடத் தொடங்கினார்.

அந்த வகையில் 1944}ஆம் ஆண்டு திரிகடுகம் சிறுபஞ்சமூலம் ஆகிய இரு நூல்களை ஒன்றாக இணைத்து ஒரு வெளியிடாகக் கொண்டு வந்தார். அந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் ஒரு நூலாகக் கைந்நிலையை ஏற்றுக் கொண்டதோடு அக்கைநிலையானது "ஐந்திணை', "கைந்நிலையு மாகுங் கணக்கு' ஆகிய இரு இடங்களில் எதில் கொள்வது என்பதை விளக்கியுள்ளார்.

"கைந்நிலைய' என்பது கீழ்க்கணக்கிற்கு அடையாக வருதல் வேண்டும் என்றதோடு இதற்கு "நன்னிலைய தாகுங் கணக்கு' என்னும் மாற்றுப் பாடமுள்ளதைச் சுட்டி இறுதியாக ஐந்திணை நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலை இடம்பெறவேண்டும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

"கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு' என்னும் வெண்பாவின் பாடத்தைக் கொண்டு கைந்நிலையை ஐந்திணை ஒழுக்கங்கள் குறித்த தனியொரு நூலாக ஏற்றுக் கொண்டதையும் காணமுடிகிறது.

எனவே, கார் நாற்பது உள்ளிட்ட நான்கு நூல்களின் தொகுப்பை நானாற்பது என்பது போல ஐந்திணையைம்பது உள்ளிட்ட நான்கு நூல்களின் தொகுப்பை ஐந்து திணைகளின் பொருள் உணர்த்தும் நாலைந்திணை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com