தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கியவர் மகாலிங்கையர். அவர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்ததால் மழவை மகாலிங்கையர் என்று அழைக்கப்பட்டார்.

மழவை மகாலிங்கையர் அரிச்சுவடி, எண்சுவடி ஆகிய தொடக்கக் கல்விக்கான வாய்ப்பாடுகளைக் கற்ற பின்னர் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் திருத்தணிகை கந்தப்பையரின் புதல்வர்களான விசாகப்பெருமாளையரிடமும் சரவணப்பெருமாளையரிடமும் கற்றறிந்தார்.

தற்பொழுது மாநிலக் கல்லூரி என வழங்கப்படும் உயர்கல்வி நிறுவனத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கண இலக்கியங்களில் புலமை நிரம்பப் பெற்றிருந்த மழவை மகாலிங்கையரிடம் பலரும் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். அந்த வகையில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தமக்கிருந்த இலக்கண இலக்கியங்கள் தொடர்பான ஐயங்களை அவரிடம் கேட்டறிந்து வந்தார்.

மழவை மகாலிங்கையர் ஆராய்ச்சி செய்வதில் நடுவுநிலையோடு செயல்படுபவராக இருந்திருக்கிறார். அவர் காலத்தில் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் வேதாகமத்தை (பைபிள்) தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். அம்மொழிபெயர்ப்பைப் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தச் சூழலில் மழவை மகாலிங்கையர் ஆறுமுக நாவலருடைய வேதாகமத்தை ஆய்வு செய்து அது தமிழுக்கேற்ற சிறந்த வசன நடையில் எழுதப்பட்டுள்ளது என நற்சான்றளித்தார்.

சுவடியிலிருந்த நூல்களை அச்சில் பதிப்பித்தல் என்னும் காலச்சூழலில் தாம் வாழ்வதை உணர்ந்திருந்த மழவை மகாலிங்கையர், தமக்குக் கிடைத்த இலக்கண இலக்கியச் சுவடிகளை ஆராய்ந்து மூலபாடத்தை உறுதி செய்து அச்சில் கொண்டு வருவதில் கவனமாக இருந்தார். அந்த வகையில் 1838-ஆம் ஆண்டில்

நமச்சிவாய மாலை, வண்ணங்கள், தண்டலையார் சதகம் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள், காஞ்சிபுரம் சபாபதி முதலியார் ஆகியோரோடு நட்புடன் இருந்தவர். அதன் காரணமாகக் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்ற மாலை என்னும் நூலினைத் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகளோடும் திருவல்லிக்கேணி அந்தாதி என்னும் நூலினைக் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரோடும் இணைந்து பதிப்பித்தார்.

ஏற்கெனவே உரையில்லாமல் மூலம் மட்டுமே கொண்ட திருக்குறளைத் தாண்டவராய முதலியார் உள்ளிட்டோர் பதிப்புகளாகக் கொண்டு வந்திருந்தனர். ஆயினும் மழவை மகாலிங்கையர் 1842-ஆம் ஆண்டு திருக்குறளுக்குரிய சுவடிகள் பலவற்றை ஆராய்ந்து அதனை அச்சில் ஏற்றியுள்ளார்.

இவர் சில முழுமை பெறாத நூல்களையும் அச்சில் பதிப்பித்துள்ளார். 1,304 பாடல்கள் கொண்ட திருப்புகழினை வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பாகக் கொண்டு வருவதற்கு முன்பே 1839-ஆம் ஆண்டு திருப்புகழின் நூறு பாடல்களை மட்டும் முதல் முதலில் பதிப்பித்துள்ளார்.

கம்பராமாயணம் - பாலகாண்டம் மூலம் மட்டும் கொண்ட நூல் வேங்கடாசல முதலியரால் 1843-ஆம் ஆண்டு அச்சில் பதிப்பிக்கப்பட்டிருந்தது. அந்நூல் வெளிவந்த போதிலும் அதனை 1845-ஆம் ஆண்டு தமக்குக் கிடைத்த சுவடிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார் மழவை மகாலிங்கையர்.

இலக்கணங்களில் தனிச் சிறப்புக் கொண்ட தொல்காப்பியம் முழுமைக்கும் உரையுடன் முதல் முதலில் பதிப்பினைக் கொண்டு வந்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஆனால் அவருக்கு முன்பே 1847-ஆம் ஆண்டு தொல்காப்பிய எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியருரைக்கு மட்டும் முதல் பதிப்பினை வெளியிட்டிருந்தார் மழவை மகாலிங்கையர். இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மழவை மகாலிங்கையர், சுவடியிலிருந்த நூல்களை அச்சிட்டுப் பதிப்பாசிரியராக விளங்கிய

தோடு நூல்களுக்கு உரையெழுதியும் பதிப்பித்துள்ளார். அந்த வகையில் பெரியபுராணத்திற்குப் பொழிப்புரை எழுதி முதல் மூன்று சருக்கங்கள் 1845-ஆம் ஆண்டிலும் அடுத்த இரண்டு சருக்கங்கள் 1848-ஆம் ஆண்டிலும் பதிப்புகளாக வெளியிட்டதைக் குறிப்பிடலாம்.

அருணாசலபுராணம் முழுமைக்கும் முதல் முதலில் பொழிப்புரை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவரது உரையுடன் அருணாசலபுராணத்தை நேத்திரப்பாக்கம் சின்னையர், ஆறுமுக முதலியார், சிதம்பரம் கருணானந்த சுவாமிகள், திருநின்றயூர் அருணாசல சுவாமிகள், கோகுலாபுரம் அருணாசல முதலியார், திருவாலூர் தியாகராய சுவாமிகள், சிதம்பரம் காரியம் குருசாமி நாயக்கர், மணிமங்கலம் வடிவேலு முதலியார், திருவெண்காடு ஆறுமுக சுவாமிகள் ஆகியோர் பதிப்புகளாகக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிப்புப் பணியில் ஈடுபட்டுப் பெருமை சேர்த்த மழவை மகாலிங்கையர் நீதி வாக்கிய மஞ்சரி, மழைவைச் சிங்காரசதகம், போத வசனம், இலக்கணச் சுருக்கம் போன்ற நூல்கள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். அவற்றில்

இலக்கணச் சுருக்கம் என்னும் நூல் மாணவர்கள் தொடக்க நிலையில் இலக்கண விதிகளைக் கற்பதற்கு ஏற்றவாறு உரைநடையால் இயற்றப்பட்டதாகும்.

இவ்விலக்கண நூல் மாணவர்கள் பலராலும் கற்கப்பட்டது என்பதற்கு உ.வே. சாமிநாதையர் தொடக்கக் கல்வியைப் பயின்ற காலத்தில் தமது ஆசிரியரிடம் மகாலிங்கையரின் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன் என என் சரித்திரம் நூலில் கூறியுள்ளதால் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com