இதுவே உதுவே அதுவே!

சுட்டெழுத்துகள் என்பன அ, இ, உ. அ-சேய்மைச் சுட்டு; இ-அண்மைச் சுட்டு. இவ்விரண்டனுக்கும் இடைப்பட்டதைச் சுட்டுவது "உ'.
Published on
Updated on
2 min read

சுட்டெழுத்துகள் என்பன அ, இ, உ. அ-சேய்மைச் சுட்டு; இ-அண்மைச் சுட்டு. இவ்விரண்டனுக்கும் இடைப்பட்டதைச் சுட்டுவது "உ'. இச்சுட்டுகள் இடம் பெறுமாற்றைக் காட்டுவது போலமைந்த திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றைக் கீழே காண்க:

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்

தாம் அவர் இவர் உவர்அது இது உது எது

வீம் அவை இவை உவை அவை நலம், தீங்கு அவை,

ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (திருவாய்மொழி 1.1.1)

உலகில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் படைத்து அவற்றின் உள்ளீடாக இருப்பவன் இறைவனே என்பதைச் சொல்லுகிற பாசுரம் இது.

இன்று பெரிதும் வழக்கில் இல்லாத உவன், உவள், உவர், உது, உவை என்பன இதில் இடம் பெறக் காணலாம். பெரியாழ்வார், "மாணிக்கம் கட்டி' என்னும் திருத்தாலாட்டுப் பாடலில் இந்திரன், வயிச்சிராவணன் முதலானோர் சிற்றாயனான கண்ணனைக் காண்பதற்காகக் கொண்டு வந்த பொருள்கள் இன்னின்ன என்று பட்டியலிடுகையில், அவர்களைத் தனித்தனியே "உவன்', "உவன்' என்றே சுட்டுகிறார்.

எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்குச்

சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு

இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி

தந்து உவனாய் நின்றான்; தாலேலோ!

தாமரைக் கண்ணனே தாலேலோ! (46)

வயிச்சிராவணன் வருகை பற்றிப் பாடும்போதும், "தொழுது உவனாய் நின்றான்' (48) என்றே பாசுரமிடுகிறார். மானை ஊர்தியாகக் கொண்டுள்ள துர்க்கை பற்றிப் பேசுகையில், "வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்' (52) என்கிறார்.

இவ்வெடுத்துக்காட்டுகளால், "அவள், இவள்' போல "உவள், உவன்' ஆகியனவும் இலக்கிய வழக்கில் இடம் பெற்றிருந்தமை அறிகிறோம். "உவன்வரின் எவனோ பாண' (127:3) என்பது நற்றிணை. "ஐஇய! உது எம் ஊரே' (179:3); "வருவேம் என்ற பருவம் உதுக்காண்'(358:4); "...உதுக்காண் மடல்தாழ் புன்னை எம்சிறு நல்ஊரே' (81: 2 7) என்பன குறுந்தொகைப் பாடலடிகள்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்எம்

மேனி பசப்பூர் வது

என்பது திருக்குறள் (1185).

இனி, "இது, அது, உது' ஆகிய மூன்றையும் பயன்படுத்தித் தெளிவுறப் பொருள் உணருமாறு கோக்குளமுற்றனார் என்னும் புலவர் நெய்தல் திணையிற் பாடிய நற்றிணைச் செய்யுளையும் (96) அதன் கருத்தையும் பார்க்கலாம். தோழி கூற்று

இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்,

புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறை

புதுவது புணர்ந்த பொழிலே... (நற். 96: 13)

தோழி! நறுமணங் கமழும் மலர்களையுடைய புலிநகக் கொன்றையின் சிறந்த மலர்களும் புன்னையின் மலர்களும் உதிர்ந்து பரவிய சோலை இது.

...உதுவே,

பொம்மற் படுதிரை நம்மோடு ஆடிப்

புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்

துவரினர் அருளிய துறையே (நற். 96: 46)

பொலிவு பொருந்திய கடலில் நம்மொடு நீராடி என் முதுகிலே தாழ்ந்து இருண்டு விளங்கிய ஐந்து வகையாகப் பிரிக்கப்படும் கூந்தலைப் பிழிந்து துவட்டியவராய் (அவர்) அருளிய நீர்த்துறை உ(அ)துவே. வளைந்த தண்டுயர்ந்த நீண்ட காம்பினையுடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் (தமியராய்) தனியொருவராய்ச் சென்று விட்ட கடற்கரைச் சோலையும் (79) அதுவே.

...என்றாங்கு

உள்ளுதோறு உள்ளுதோறு உருகி

பைஇப் பையப் பசந்தனை பசப்பே! (நற். 96: 9 11)

என்று நினைக்கும் தோறும், நினைக்குந்தோறும் உள்ளம் உருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினாய்! தோழியே, நீ எங்ஙனம் பிழைப்பாய்? தலைவியின் நிலைகுறித்து இப்படிப் பேசி முடிக்கிறாள் தோழி. இதுவே, உதுவே, அதுவே என்பன ஓர் இசைப் பாடலின் தனித்துவம் மிக்க மூன்று பகுதிகள் போல நின்று தலைவி மனநிலையைப் பையப் பைய விவரிப்பனவாய் அமைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com