
சங்க காலத் தலைவன் ஒருவன் தலைவியொருத்தியுடன் எவரொருவரின் தூண்டுதலுமின்றி, ஓர் இயற்கைச் சூழலில் ஊழ் கூட்டுவிக்க, இணைந்தனர். அவ்வாறு இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைச் சந்தித்துவிட்ட அவன், தன் மனத்தின் உந்துதலால் மீண்டும் அவளைச் சந்தித்துவிட வேண்டும் என எண்ணுகின்றான்.
எண்ணியவாறு தலைவியை மிண்டும் சந்திப்பதற்கு "வாயில்' (தலைவன் } தலைவியைச் சேர்க்கத் துணை நிற்கும் நட்பு) வேண்டும். சங்ககாலச் சமுதாயத்தில் இத்தகைய "வாயில்" இல்லாமல் தலைவனும் தலைவியும் சந்தித்தல் அரிது. இத் தலைவனுக்கோ பெண்ணொருத்தி வாயிலாக அமைய வாய்ப்பு கிட்டுகிறது.
இத்தலைவன் பார்த்த வேளையில், தான் முன்னர்கூடிய தலைவியானவள் ஆற்றில் தோழியர் புடைசூழ நீராடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆயர் (தோழியர்) கூட்டத்துள் தலைவிக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடியவள் யார் என்பதை மிகக் குறைந்த நேரத்தில் கணித்துத் தலைவன் முடிவு செய்ய வேண்டும்.
முடிவு செய்தபின், தோழியாக இருக்கும் தகுதியுடைய ஒருத்தியை "இவள்தான் தலைவியின் உற்ற தோழி' என்று தேர்ந்து, அவளிடம் "குறையிரத்தல்' (தலைவியுடனான தனது நெருக்கத்தைக் கூறி, அவளிடம் தன்னைச் சேர்க்கத் துணைநிற்க வேண்டுதல்) செய்ய வேண்டும் தலைவன்.
இந்தச் சூழலில் தலைவியும் அவளது தோழிகள் பலரும் மிதக்கும் சிறிய புணையை (தெப்பத்தை) வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அதன் மீது தாவித்தாவி ஏறி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களெல்லோரையும் ஒருகணம் நோட்டமிடுகிறான் இத்தலைவன். நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் தலைவியோ, இவனது கண்களுக்கு மிகவும் அழகாகத் தோன்றுகிறாள். எவ்விதமெனின், மாட்சிமைப்பட்ட மழைக்காலத்தில் மலரும் "பிச்சி'யினது, நீரொழுகி விளங்கும் தளிர்போன்ற மேனியையும் செவ்விய புறத்தையுடைய அதனரும்பு போன்ற கொழுவிய கடைக் கண்களையும் உடையவளாய் இருக்கின்றாள்.
நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, மிதந்து கொண்டிருக்கும் தெப்பத்தின் தலைப் பகுதியை குறிப்பிட்ட பெண்களுள் ஒருத்தி பிடிக்க, அவளைப் பின்பற்றித் தலைவியும் அத்தலைப்புப் பகுதியைக் கையால் பற்றிக்கொள்கிறாள். அதே பெண் தெப்பத்தின் கடைப்பகுதியைக் கையால் பற்றிக் கொண்டாலோ, தலைவியும் அக்கடைப்பகுதியையே தாவிப் பற்றிக் கொள்கிறாள்.
அக்காட்சியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் தலைவன் சிந்திக்கிறான். ஒருகால் அத்தோழி தெப்பத்தை நழுவவிட்டு, நீரோட்டத்தால் ஈர்க்கப்பட்டு, மூழ்கி இறந்துவிடுவாளாயின், தலைவியாகிய இவளும் அவ்வாறே சென்று இறந்து விடுவாள் போலும்! என்று நினைக்கிறான் இவன். "செயல்' என்பது "மனத்தின்' வழித்தே நடக்குமாதலால், இவ்விரு பெண்களின் செயலொப்புமையால், இவர்களது நெஞ்சின் ஒப்புமையைக் கண்டுபிடிக்கிறான் இத்தலைவன்.
அங்கு தலைவியுடன் நீராடிக் கொண்டிருந்த பல பெண்களுள், இவளொருத்தியின் அடியொற்றியே நம் தலைவி செயல்பட்டாள். ஆதலால், இப்பெண்ணே நம் தலைவிக்கு நெருங்கிய தோழியாக இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வருகிறான் தலைவன்.
பிறரின் செயலால் அத்தகையோரின் குணத்தை எடைபோடத் தெரிந்த தலைவனின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் பாங்கில் அவனது கூற்றாக, சிறைக்குடி ஆந்தையார் என்ற புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்.
தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே (222)
இதன் கருத்தழகும் கவிதையழகும் இன்புறத் தக்கதாய் உள்ளமை குறிக்கத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.