உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் தாய் வயிற்றில் பிறந்தவர்கள். பத்து மாதம் தாய் வயிற்றில் வளர்ந்து, உணர்ந்து, கற்றுத்தான் குழந்தை உலகிற்கு வருகிறது. உலகத்தில் காணும் முதல் முகமே தாய் உருவம்தான். தாய்தான் முதலாவது உறவு. அதுவே சிறந்த உறவு; அதைவிட வேறு உறவில்லை என்கிறது ("தாயின் சிறந்த தமரில்லை' } நான்மணிக்கடிகை (32).
ஒளவையாரின் கொன்றை வேந்தன், "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்றும், உலக நீதி, "மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்' என்றும் சொல்கின்றன. மாதா என்பது தாய்தான். அந்தத் தாயோடு, ஒப்பிட கடவுளும் இல்லை என்பதை நான்மணிக்கடிகையின்' ஈன்றாளோடு எண்ணக் கடவுளுமில்' (54) என்ற பாடல் சுட்டுகிறது. உண்மைதான், தாயோடு ஒப்பிட கடவுளும் இல்லை தான். அதனால்தான் ஆன்மிக ஞானிகள் இறைவனை தாயோடு ஒப்பிட்டார்கள்.
சிவனை தாயுமானவன் என்றார்கள். தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என உயர்த்தினார்கள். நம்மாழ்வார் "தாயும் நீ தந்தையும் நீ' என்றார்.
அந்தத் தாய் சுட்டித்தனம் செய்யும் குழந்தையை அடித்தாலும் அது தாயிடமே அடைக்கலமாகும் என நான்மணிக்கடிகை "குழவி அலைப்பினும் அன்னேயென் றோடும்' (23) என்ற வரியில் சொல்கிறது.
குழந்தை வளர்ப்பது தாயின் கடன் என்பதை "ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே' என்று புறநானூறு (312) சொல்கிறது. குழந்தையைப் பெற்ற தாய் அதைக் காத்துப் பேணி வளர்த்தாளே? இதனைப் பெரும் அறம் என்று சிறுபஞ்சமூலம் (72) இயம்புகிறது.
பெற்ற தாயே குழந்தை வளர்ப்பது சிறப்பானது என்றபோதும் சங்க இலக்கியம் நற்றாய் (ஈன்றதாய்) செவிலித்தாய், கைத்தாய், முலைத்தாய், ஊட்டுத் தாய் என ஐவகைத் தாய்களை அடையாளம் காட்டுகிறது.
சில இலக்கிய ஆய்வுகள் தாலாட்டுத் தாய், பாராட்டுத்தாய் என சேர்த்து எழுவகைத் தாய்களைச் சொல்கின்றன. ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் இந்த ஏழு வகைத் தாயாகவும் இருந்து குழந்தையை வளர்க்கிறார்கள். இத்தகைய தாய் ஒரு குழந்தைக்கு கிடைத்தல் "தாயென்பாள் முந்துதான் செய்த வினை' (நான்மணிக்கடிகை } 42) என்ற வரிகளில் "தாயெனப் படுபவள் முன் செய்த நல்வினையால் வந்தவள்' என்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.