அன்பின் வழியது உயிர்நிலை என்ற கொள்கை உடையவர்கள் தமிழர்கள். தமிழின் தொன்மை இலக்கியமான சங்க இலக்கியங்களில் 2,381 பாடல்களில் 1,862 பாடல்கள் அகத்திணைப் பாடல்கள்.
தாங்கள் அனுபவித்த இன்பம் இத்தகையது என்று சொல்ல முடியாமல் தமக்குள் நினைந்து இன்புறுவதே அகம். இவ்வுலகில் உயிர்களின் அடிப்படை உணர்வாக இருப்பது காதல். சங்க இலக்கியத்தில் பேசப்படும் காதல் மிகத் தெளிவாக ஒன்றை வெளிப்படுத்துகிறது. நமது பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் நுட்பத்தில் அவர்களின் நாகரிகம், உளவியல் வெளிப்படுகிறது. பெண் புலவர்கள் காதல் பாடல்கள் இயற்றியுள்ள விதத்தைக் காணும் பொழுது ஆண்- பெண் பேதமற்ற சமூகமாக நமது சமூகம் இருந்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெண் தனது காதலைச் சொல்லும் அழகிய காட்சி அவர்களின் காதலோடு கற்பு நெறியை வெளிப்படுத்துகிறது. காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கிறாள் தலைவி. தலைவன் வரும் நாளை எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். ஒரு நிலையில் தன் வாழ்வைப் பற்றிய நம்பிக்கையையும் இழந்து விடுகிறாள். காதலனைக் காணாமலேயே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று அஞ்சுகிறாள். இந்த மனநிலையில் தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கிறாள்.
''தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்துவிடுவேனோ! என்றுதான் அஞ்சுகிறேன்'' என்கிறாள்.
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே
(நற்றிணை 397)
என்ற பாடல் வரிகள் இதனை விளக்குகின்றன. பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையோடு அடுத்தடுத்த பிறவிகளிலும் இந்தக் காதல் தொடர வேண்டும் என்ற சிந்தனை தமிழ்ப் பெண்களிடம் இருந்தது என்பதை மெல்லிய உணர்வின் வழியாகப் புரிந்து கொள்கிறோம்.
தலைவியின் காதல் மென்மை இப்படி இருந்ததென்றால் தலைவனின் காதல் சற்று மாறுபட்டது என்றாலும் உணர்வின் அடிநாதம் ஒன்றாகவே இருக்கிறது. இல்லறக் கடமையை ஏற்று பொருள்தேடிப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனின் காதலையும், அவன் தலைவி மேல் கொண்டுள்ள பேரன்பையும் நற்றிணை முல்லை நிலப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.
தலைவன் பொருள்வயின் பிரிந்து சென்றான். கடமையை முடித்து வெற்றியோடு தேரில் வீடு திரும்புகின்றான். திரும்பும் வழி, காடும் காடு சார்ந்த முல்லை நிலமாகும். அந்த நிலத்தில் வரும்பொழுது லேசாக மழை பெய்திருக்கிறது. காட்டுக்கோழி ஒன்று விடியற்காலையில் தன் அலகால் கொத்திய இரையை எடுத்து தன் துணையான பெட்டைக்குக் கொடுக்கும் காதல் காட்சியை கண் இமைக்காமல் பார்க்கிறான். உள்ளம் நெகிழ்ந்து போகிறான். உடனே தேர்ப்பாகனைப் பார்த்து, தேர்ப்பாகனே! நம்மோடு வரும் வீரர்கள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். இதோ! இந்த கண்கவரும் காட்டுக் கோழியின் காட்சியைப் பார். இனி சிறிதும் தாமதிக்கக் கூடாது. விரைவாக குதிரையைச் செலுத்துவாயாக உடனே வீட்டுக்குப் போக வேண்டும் என்கிறான். இளநாகனார்,
விரைப்பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெலவருக
தீண்டா வைமுள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உதுக்காண்
உறுக்குறு நறுநெய் பால்விதிர்த்தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக்
காமறு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல்நெடும்புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி
நாள் இரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே !
(நற்றிணை 21)
என்று வினைமுடித்து மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லுவதாகப் பாடியுள்ளார்.
நற்றிணைத் தலைவி மரணத்திற்கப்பாலும் தனது காதலை சிந்தனை செய்கிறாள். தலைவனோ, காண்பன யாவற்றிலும் காதலை உணர்கிறான். சங்கக் காதலோ மானுடத்தின் செம்மையை வரைந்து காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.