கம்பனின் தமிழமுதம் - 6: துமியும் கோணும்!

துமி, கோண் எனும் இரண்டு சொற்களின் அறிமுகம் உங்களுக்கு உண்டா? இந்த இரண்டையும் கம்பன் ஒவ்வோர் இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

துமி, கோண் எனும் இரண்டு சொற்களின் அறிமுகம் உங்களுக்கு உண்டா? இந்த இரண்டையும் கம்பன் ஒவ்வோர் இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.

ஜூன் மாதம் தொடங்கி, குற்றாலம் பகுதிகளில் நீர்த்துளிகளே சிதறி இன்னும் சிறியதாக விழும். அதுவே சாரல். சாரல் மழையின்போது, நம் உடம்பில் மிகச் சிறியதாக வந்து அமரும் நீருக்கும் தமிழில் பெயருண்டு. அதுவே துமி. சிதறிய ஒரு துளியின் பகுதி. துமி என்னும் சொல்லைக் கம்பன் பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, செவிவழிக் கதை ஒன்றுண்டு.

கம்பன் காப்பியத்தில் பயன்படுத்திய இந்தச் சொல், பொருளே இல்லாதது என்று புலவர்கள் எதிர்த்தார்கள். ஒரு நாள் தெரு வழியே அவர்கள் நடந்து செல்லும்போது, ஒரு வீட்டுத் திண்ணையில் பெண் ஒருத்தி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

'எல்லோரும் தள்ளிப்போய் விளையாடுங்கள்; தயிர் கடையும்போது துமி தெறிக்கும்..' என்று குழந்தைகளை விரட்டினாள் அவள். அதைக் கேட்ட பின்னரே, புலவர்கள் துமி என்னும் சொல்லை ஒப்புக்கொண்டனர் என்பது இந்தச் சொல்லுக்காக சொல்லப்படும் கதை.

காப்பியத்தில் 'துமி' என்னும் சொல் வரும் இடம் சிறப்பானது. இலங்கைக்குள் நுழைய சேதுப்பாலம் கட்டும் வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது. வானரங்கள், கிடைத்த கற்களையெல்லாம் கடலில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருந்தன. குமுதன் என்னும் பெயருடைய ஒரு வானரன், மலை ஒன்றைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்தான். அந்த மலை கடலுக்குள், 'திமி, தம்' என்று பேரொலியை எழுப்பியவாறு நீருக்குள் விழுந்தது. அந்த வேகத்தில் வானுலகம்வரை நீர் தெறித்தது. கடலைக் கடைகிறார்கள்: நமக்கு மீண்டும் அமிழ்தம் கிடைக்கும்' என்று வானுலகில் இருந்த தேவர்கள் துள்ளினார்கள்... இது கம்பனின்

கற்பனை.

குமுதன் இட்ட குலவரை கூத்தரின்

'திமிதம்' இட்டுத் திரியும் திரைக்கடல்

துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்;

அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்

கடலில் இருந்து தெறித்து வானுலகத்துள் வீழ்ந்த மிகச் சிறிய நீர்த்துளியை, 'துமி' என்று குறிப்பிடுகிறான் கம்பன்.

'கோண்' என்னும் சொல், பயன்பாட்டில் இல்லாத, தமிழுக்குக் கம்பன் தந்த புதிய சொல் என்றே சொல்ல

வேண்டும்.

பிரகலாதன், ஆழ்ந்த இறைப்பற்று கொண்டவன். அவனது தந்தை இரணியன், கடவுள் இல்லை என்று சொல்பவன் அல்லன். கடவுளைவிட நான் பெரியவன் என்று சொல்லிக் கொண்டவன். 'நீ சொல்லும் கடவுள் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, பிரகலாதன் சொன்ன பதில் இது:

சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை

காணுதி விரைவின்' என்றான்; 'நன்று' எனக் கனகன்

சொன்னான்.

இப்பாடலின் இரண்டாம் வரியில், முதல் சொல் 'கோண்' என்பது. 'ஓர் அணுவினை நூறு துண்டாகக் கூறிடு; அந்தத் துண்டுகளில் ஒன்று கோண். அந்தக் கோணிலும் இறைவன் இருக்கிறான்' என்று பிரகலாதன் சொன்னதாஓ கம்பன் பாடல்.

அணுவைக் கூறுபோட முடியும் என்று சொன்னது மட்டுமன்றி, அணுவை நூறாகப் பிரித்தால் வரும் மிகமிகச் சிறிய பகுதிக்குக் 'கோண்' என்றும் பெயர் சூட்டிய கம்பனின் சிந்தனை வியக்கவே வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com