அன்புக்குண்டோ அளவு?

அன்பின் காரணமாக ஒருவர்க்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
Published on
Updated on
2 min read

அன்பின் காரணமாக ஒருவர்க்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், கையில் ஒன்றுமில்லை; நெஞ்சில் அன்பிருக்கிறது. போதாதா? என்ன செய்யலாம்? இதுதான் நவீனின் கதை. நவீன் சிதம்பரத்தில் ஓர் எளிய ஓட்டு வீட்டில் வாழ்பவன். அந்த வீடு வசதியானது. இயற்கையின் கொடையை முழுமையாகப் பெற்ற வீடு. அதாவது மழை வந்தால் ஒழுகும்; வெயில் வந்தால் வீட்டினுள்ளே கொதிக்கும்.

நவீனின் மனைவி அவளுடைய தாய் வீட்டுக்குப் போய் மூன்று மாதமாகிறது. விரைவில் வந்துவிடுவதாகத்தான் சொல்லிப் போனாள். ஏனோ வரவில்லை. அவள் போனதிலிருந்து அவன்தான் சமையல். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு என்று பருப்பில் பல வகை இருப்பது அவனுக்கு இதுவரை தெரியாது. எதற்கு எதைப் போட வேண்டுமென்றும் தெரியவில்லை. சாம்பார் வைத்தபோது கூட்டு வந்தது. கூட்டு வைத்தபோது அவியல் வந்தது. சமைத்துச் சாப்பிடப் போன போதுதான் எதற்கும் உப்புப் போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

எவ்வளவு நாளைக்கு இப்படியே போவது! மனைவி என்று வருவாளோ என்று ஏங்கினான் அவன். அப்போது அவனுடைய நண்பன் கவின் ஒரு நல்ல செய்தியை அவனுக்குக் கொண்டு வந்தான். 'நவீன் உன் மனைவியின் ஊருக்குப் போயிருந்தேன். அவர் இங்கு வருவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றார்!' என்றான்.

அதைக்கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் நவீன். இந்த நல்ல செய்தியைக் கொண்டு வந்த நண்பனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினான்.

'கவின்! உனக்கு யார் சொன்னார்கள்? நீயே தெரிந்துகொண்டு சொல்கிறாயா? என் மனைவியே சொன்னாளா? உண்மைதானா? இந்த நல்ல செய்தி சொன்ன உனக்கு என்ன கொடுத்தாலும் தகும். உனக்கு நான் இந்த சிதம்பரம் நகரையே தருகிறேன்! அம்பலத்தில் ஆடும் நடராசர் கோயிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் உட்பட இந்தத் தில்லையம்பதியையே நீ பெற்றுக் கொள்!' என்றான்.

கவின் சிரித்துக் கொண்டே, 'அது எப்படியப்பா சிதம்பரத்தையே எனக்கு நீ தர முடியும்?' என்றான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.

பொருள் தேடச் சென்ற தலைவன் வருவான் வருவான் எனப் பார்த்துப் பார்த்துத் தலைவியின் விழிகள் பூத்துப் போயின. அப்போதுதான் வந்தான் அந்தப் பாணன். 'அம்மா! உங்கள் தலைவர் வருகிறார் அம்மா! சில நாளில் இங்கிருப்பார் அம்மா!' என்கிறான்.

'உண்மையாகவா சொல்கிறாய்! நீ சொல்வது உண்மையாக இருக்குமானால் நான் உனக்கு பாடலிபுத்திரத்தையே தருவேன் பாணனே!' என்கிறாள் தலைவி.

பாடலிபுத்திரமா! அது எங்கிருக்கிறது அம்மா? பாணன் கேட்டான்.

'பாணா! அது மகத நாட்டின் தலைநகர். அங்கு கங்கை ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் அடியில் நந்த வம்சத்தவர் பெரும் பொன்னைப் புதைத்து வைத்துள்ளனர். அங்கே சோணை என்னும் நதியில் வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நீராடும். அந்த பாடலிபுத்திரம் உனக்குத்தான்!' என்றாள் தலைவி.

'அம்மா! என்ன சொல்கிறீர்கள்? பாடலிபுத்திரம் உங்களுடையதா? நீங்கள் அங்குப் பிறந்தீர்களா? வாழ்ந்தீர்களா?'

'பாணனே! அதொன்றுமில்லை! அது மௌரியருடையது. நான் அதனைப் பார்த்ததுமில்லை. உனக்கு ஏதாவது பெரிதாகக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் படிக்கும் காலத்திலிருந்தே கேள்விப்பட்ட பொன்நிறைந்த பாடலிபுத்திரத்தை உனக்குக் கொடுத்துவிட எண்ணினேன்' என்றாள் தலைவி.

'அம்மா! உங்களுக்கு தாராளமான மனசு; உங்கள் அன்புக்கு அளவு ஏது?' என்று வாழ்த்திவிட்டுப் போனான் பாணன்.

இதைப் படித்தவருள் ஒருவராகிய நவீன் தில்லையம்பதியையே தாரை வார்க்கத் துணிந்ததில் என்ன வியப்பிருக்கிறது!

நீ கண்டனையோ? கண்டார்க்

கேட்டனையோ?

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ!

வெண்கோட்டு யானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்!-

யார் வாய்க் கேட்டனை, காதலர் வரவே?

- குறுந்தொகை 75

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com