
"பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்' என்று ஒரு திரைப்பாடலில் கண்ணதாசன் எழுதியிருப்பார். பறக்க வேண்டும் என்னும் ஆசை, நூற்றாண்டுகளாகவே மனிதனுக்கு இருந்திருக்கிறது. டாவின்சி 15 -ஆம் நூற்றாண்டில் வரைந்த ஓவியம் ஒன்றில், பறக்கும் இயந்திரம் உள்ளதாகக் குறிப்புகள் உண்டு.
கோவலன் இறந்த பதினான்காம் நாள், வைகையாற்றின் கரையில் ஒரு வேங்கை மர நிழலில் நின்றிருந்த கண்ணகியை நோக்கி விண்ணக விமானம் ஒன்று வந்ததாகவும், அதில் கோவலன் இருந்ததாகவும், கண்ணகி அந்த விமானத்தில் ஏறிச் சென்றதாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது. "வலவன் ஏவா வான ஊர்தி' என்று குறிப்பிடும் புறநானூறு, "நல்ல செயல்களைச் செய்வோர், ஆளில்லா ஊர்தியில் சொர்க்கம் செல்வார்கள்' என்று கூறுகிறது.
இறந்த பின்னர், தயரதன் விண்ணில் இருந்து பூமிக்கு வந்து, இராமன் முதலியோரைக் கண்டு பேசிவிட்டு மீண்டும் விமானத்தில் விண்ணுக்குச் சென்றான் என்று ஒரு குறிப்பு கம்பனிலும் உண்டு. இவை அனைத்துமே, விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்து, மீண்டும் விண்ணுக்கே செல்லும் பறக்கும் ஊர்திகளைக் கூறுகின்றன.
அறிவியல் வளர்ச்சியில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த "ரைட் சகோதரர்கள்' 1903-ஆம் ஆண்டு உருவாக்கிய விமானம் 260 மீட்டர் தூரம் பறந்ததே முதல் முயற்சி. 1920-களில், விமானத் தயாரிப்புகளும் பயன்பாடுகளும் வளரத் தொடங்கின. ஹெலிகாப்டர் அதன் பின்னரே பயன்பாட்டுக்கு வந்தது. விமானம், ஓடுதளத்தில் ஓடி விண்ணில் ஏறுவதும், ஹெலிகாப்டர் நின்ற இடத்திலிருந்தே விண்ணுக்கு எழுவதும் நாம் அறிந்த செய்திகள். இந்த இரண்டு வகையான வானூர்திகளையும் தனது கதைப்போக்கில் கம்பன் சொல்லிக் கொண்டு போகிறான்.
மாயமானைப் பிடிக்கப் போன இராமனும், இராமனைத் தேடிப் போன இலக்குவனும், தங்கள் குடிலுக்குத் திரும்பியபோது சீதை அங்கில்லை. அவளை இருவரும் தேடிச் சென்றபோது, ஓரிடத்தில், சக்கரம் மண்ணில் உருண்டோடிய தடம் இருந்தது.
இராமனிடம் அதனைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், "அந்தச் சுவடு செல்லும் பாதையில் செல்லலாம்' என்று சொல்ல இராமனும் உடன்பட்டான். தேர்ச்சுவடு சென்ற பாதையில் இருவரும் சென்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பின்னர், அந்தச் சுவடு இல்லை. கம்பன் பாடலின் இரு வரிகளை மட்டும் காணலாம்.
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து, விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; இராவணன் வந்த தேர், இன்றைய விமானம் போல ஓடு தளத்தில் ஓடி, பின்னர் விண்ணில் எழும்பிச் சென்றது என்பது கருத்து. மற்றொரு காட்சியில், இலங்கைப் போர் முடிந்த நிலையில், உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தில் இராமனும் மற்றவர்களும் இருந்தார்கள். இலங்கைக்கு மன்னனாகிவிட்ட வீடணனிடம், "விரைந்து போக ஊர்தி உள்ளதா?' என்று இராமன் கேட்க, "விமானம் இருக்கிறது' என்றான் அவன்.
அவனது ஆணைக்கிணங்க உடனே புட்பக விமானம் ஒன்று வந்து தரையில் இறங்கியது. மிகப் பெரிய அந்த விமானம், உலக உருண்டையைப்போல இருந்தது. "அண்டமே போன்றது ஐயன் புட்பகம்' என்கிறான் கம்பன். எல்லோரும் ஏறிக்கொள்ள அந்த விமானம் கிளம்பியது. அது கிளம்பிய முறையைக் கம்பன் சொல்லும் வரிகள் இவை; வடதிசை அயனம் முன்னி வருவதே கடுப்ப, மானம், தடை ஒருசிறிது இன்றாகித் தாவி வான்படரும் வேலை இராமன் முதலியோர் பயணம் செய்த இந்த விமானம், மண்ணில் இருந்து, தாவி வானில் படர்ந்தது என்று கம்பன் குறிப்பிடுவது, இன்றைய ஹெலிகாப்டரை நினைவூட்டுகிறது. இலங்கையில் இருந்து பறந்து வந்த அந்த விமானம், வழியில் இருந்த பரத்துவாச முனிவர் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கிச் செல்வதற்காக, அங்கு தரையிறங்கியது. மறுநாள் விடியற்காலை எல்லோரும் விமானத்தில் கிளம்பினார்கள். விரைவில், அயோத்தி நகரத்தின் மதில் சுவர், விமானத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது என்றான் கம்பன். தாவி வான் படர்ந்து மானம் தடை இலது ஏகும் வேலை, தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி, ஓவியம் உயிர் பெற்றென்ன, உம்பர் கோன்நகரும் ஒவ்வா மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. இலங்கையில் இருந்து வந்து முனிவன் ஆசிரமத்தில் இறங்கிய அந்த விமானம், முன்னர் சொன்னதுபோலவே, நின்ற இடத்தில் இருந்து தாவி வானில் சென்றது என்பது குறிப்பு. மண்ணில் சக்கரத்தால் உருண்டோடி, விண்ணில் ஏறிப் பறக்கும் வானூர்தியையும், நின்ற இடத்தில் இருந்தே தாவி விண்ணில் ஏறும் வானூர்தியையும் சிந்தித்திருக்கும் கம்பன் கற்பனை, இன்றைய விமானத்தையும், ஹெலிகாப்டரையும் நினைவூட்டி நம்மை வியக்க வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.