

நவம்பர் மாதம் தொடங்கியது முதலே எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு குறித்து பாரதி அன்பர்கள் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். சிற்றுந்து ஒன்றை ஒப்பந்தம் செய்து கம்பத்திலிருந்து எட்டயபுரத்துக்கும், அதைத் தொடர்ந்து நடைபெறும் 'தினமணி'யின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவுக்கும் வரவிருக்கிறோம் என்று கவிஞர் பாரதன் இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் அனுப்பிவிட்டார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் நண்பர் ஒருவருடன் எட்டயபுரம் வரவிருப்பதாகவும், அங்கே பாரதியாரின் இல்லத்தில் வைத்து அவரது நண்பர் ஒருவரின் கவிதைத் தொகுப்பை வெளியிட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். நண்பர் ராஜ்கண்ணன் எட்டயபுரம் நிகழ்வுக்காக ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்துவிட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
நெல்லையிலிருந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதியார் பிறந்த நாளுக்கு நான் எட்டயபுரம் வரும்போது, திகசியின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய எனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறார் கவிஞர் ராஜேந்திரன். இவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலக்கிய அமைப்புகளும், பாரதி அன்பர்களும், தினமணி வாசகர்களும் எட்டயபுரம் பாரதி பிறந்த நாள் விழாவில் பங்குபெறுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
'அமுதசுரபி' இதழின் நிறுவன ஆசிரியர் 'கலைமாமணி' விக்கிரமன் இதையெல்லாம் பார்ப்பதற்கும், மகிழ்வதற்கும் நம்மிடையே இல்லை என்கிற குறை என்னுள் எழுகிறது. தொடர் ஓட்டப் பந்தயத்தில் 'பேட்டன்' எனப்படும் குச்சியைக் கைமாற்றுவதுபோல, எட்டயபுரத்தில் பாரதியின் பிறந்த நாள் விழாவில் ஆண்டுதோறும் கலந்துகொள்ளும் பெரும் பாக்கியத்தை எனக்கு வழங்கிய ஆசிரியர் விக்கிரமனை எப்படி மறந்துவிட முடியும்? எட்டயபுரம் பாரதி விழாவானாலும், 'அமுதசுரபி' என்கிற இதழானாலும் 'கலைமாமணி' விக்கிரமன் என்கிற ஆளுமையின் தாக்கம் இல்லாமல் இருக்காது.
வழக்கம்போல இந்த ஆண்டும் அதிகாலையில் எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்தில் கூடி, அங்கிருந்து மகாகவி பாரதி மணிமண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்று, அங்கிருக்கும் பாரதியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த தமிழகத்திலுள்ள எல்லா இலக்கிய அமைப்புகளும் ஒருங்கிணைய வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். டிசம்பர் 11 காலையில் எட்டயபுரத்தில் சந்திப்போம்...
=================
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் குறித்த பதிவை எழுதும்போது, சமீபத்தில் நான் மீண்டும் படித்த ரா.அ.பத்மநாபன் எழுதிய 'புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி' புத்தகம் நினைவுக்கு வந்தது. கி.வா.ஜகந்நாதனின் முகவுரையுடன் 1979-இல் வெளியான அந்தப் புத்தகம் மறுபதிப்புக் காண்பதற்கு புதுக்கோட்டை 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது மனைவி டோராவுக்கும் தமிழகம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
விடுதலைப் போராட்ட காலத்தில் புரட்சி வீரராகத் திகழ்ந்து பின்னாளில் 'புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்' என்பதை உணர்ந்த, முற்றும் துறந்த சந்நியாசியாக 85 வயதுவரை வாழ்ந்து மறைந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியார், வ.உ.சி., சுப்ரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் ஆகியோர் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர்.
அவர் குறித்து எழுதப்பட்டிருக்கும் ரா.அ.பத்மநாபனின் பதிவுக்கு ஒரு சிறப்பு உண்டு; அவருடன் நேரில் பேசி, வரலாற்றில் பிழை ஏற்படாமல் ஆய்வு செய்து, நூலாகப் படைத்திருக்கிறார் அவர். கவிஞர் திருலோக சீதாராமின் 'சிவாஜி' மாதப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து நூலாக்கம் பெற்றது நீலகண்ட பிரம்மச்சாரி குறித்த இந்தப் பதிவு.
'புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி' அச்சாகும் தருணத்தில் ஆன்மிகவாதியாக மாறி கர்நாடக மாநிலம் நந்தி என்கிற சிற்றூரின் அருகில் மலைச்சாரலில் ஆசிரமம் அமைத்து ஸ்ரீ சத்குரு ஓம்கார் என்கிற பெயரில் துறவு பூண்டிருந்தார் அவர். தமது ஆசிரமத்தில் 1978 மார்ச் 4-ஆம் தேதி அவர் சித்தி அடைந்தபோது, 1908 சுதேசி காலத்துடன் இருந்த கடைசி நேரடித் தொடர்பும் மறைந்தது.
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியின் சாதனைகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவில் கவனம் பெறாதது துரதிருஷ்டம். தன்னைப் பற்றியோ, தனது சாதனைகளைப் பற்றியோ உலகம் அறிய வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் துறவறம் மேற்கொண்டவர் என்பதால் வெளி உலகிலிருந்து விலகி வாழ்ந்துவிட்டார் அவர்.
இந்திய விடுதலைக்காக 20,000 நாயக்க வீரர்களையும், 3,000 மறவர்களையும் கொண்ட விடுதலைப் போர் படையைத் தயாரித்தவர் அந்தப் புரட்சி வீரர் என்பதைப் பதிவு செய்யும் ஆவணமாக நமக்கு கிடைத்திருப்பது ரா.அ.பத்மநாபனின் இந்தப் பதிவு.
திருநெல்வேலி சதி வழக்கு என்று அறியப்படும் ஆஷ் கொலை வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட பிரிட்டிஷ் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில் எதிரிகள் 14 பேர். இவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் 25 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள்; முதல் எதிரி நீலகண்ட பிரம்மச்சாரிக்கு வயது 21. சதியாலோசனை செய்து கலெக்டர் ஆஷைக் கொன்றார்கள் என்பதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்தார்கள் என்பதும் குற்றச்சாட்டுகள்.
திருநெல்வேலி சதி வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் 1912-ஆம் ஆண்டு முடிந்து பிப்ரவரி 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சர்.சங்கரநாயர் மற்றவர்களிலிருந்து மாறுபட்டு எழுதிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
நீலகண்ட பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும் தினமணிக்கும் தொடர்பு உண்டு. அவரது நெருங்கிய நண்பராக இருந்து ஆஷ் கொலை வழக்கில் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய உறவினர், தினமணி நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம். பாரதியாரைப் போலவே நீலகண்ட பிரம்மச்சாரியும் டி.எஸ்.சொக்கலிங்கத்துடன் பழகியவர்.
மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழகத்தின் விடுதலை வேள்வி வரலாறு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்ற ஆவணப் பதிவு ரா.அ.பத்மநாபன் எழுதிய 'புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி'!
=================
படித்த மாத்திரத்தில் 'சபாஷ்' போட வைத்தது 'ஊர்க்குருவி' கவிதைத் தொகுப்பில் இருந்த சதீஷ் கணேசனின் 'காடு = பறவை' கவிதை. சிந்திக்கவும் வைக்கிறது...
எந்தப் பறவையும்
காட்டை வெட்டுவதில்லை
கூடு கட்ட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.