பாமரர் மெட்டிலெல்லாம் பாடிய பாரதி

மனிதர்கள் பாடுகிற அல்லது கருவி வழி இசைக்கிற இசையில் மட்டுமல்ல, உலகத்தின் பல்லுயிர்களும் எழுப்பும் ஓசைகளையும், உழைப்போரின் பாடல்களயும் அவர் தேடி நாடி நல்லிசையாகக் கேட்டு ரசித்திருக்கிறார்.
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்
Updated on
3 min read

ரவிசுப்பிரமணியன்

'ஓசை ஒலியெலா மானாய் நீயே;

உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே;

வாச மலரெலா மானாய் நீயே...''

என்று நாவுக்கரசர் பெருமான் திருவையாற்றின் ஐயாறப்பனை பாடித் தொழுத வரிகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. நம் வித்வான்கள் பாடும் கீர்த்தனைகள், ஆலாபனை, ராகம், தானம், பல்லவி போன்றவை தாண்டி இன்னும் இசை எங்கெங்கெல்லாம் இருக்கிறதென பாரதியார் குயில்பாட்டில் பட்டியலிட்டது நினைவுக்கு வந்தது.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,

காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்

நீலப் பெருங்கடல் எந்நேரமுமே தானிசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்

ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,

நெல்லிடிக்கும்

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும்

ஒலியினிலும்

சுண்ணமிடிப்பார் தம் சுவைமிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள்

தாமொலிக்கக்

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப்

பாட்டினிலும்

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம்

நன்றொலிக்கும்

பாட்டினிலும், நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன்.

மனிதர்கள் பாடுகிற அல்லது கருவி வழி இசைக்கிற இசையில் மட்டுமல்ல, உலகத்தின் பல்லுயிர்களும் எழுப்பும் ஓசைகளையும், உழைப்போரின் பாடல்களயும் அவர் தேடி நாடி நல்லிசையாகக் கேட்டு ரசித்திருக்கிறார். உருகி உருகி பாட்டு எங்கெல்லாம் இருக்கிறது என்று தாம் எழுதிய அவ்வரிகளுக்கேற்ப தானும் பல வெற்றிகரமான பாடல்களை இயற்றியிருக்கிறார்.

பாரதிக்கு கீர்த்தனை, ஜாவளி போன்ற கர்நாடக சங்கீத பாடல்கள் இயற்றுவதைக் காட்டிலும் பாம்பாட்டி, செம்படவர், வண்ணார், உழவர், நெல் குத்தும் பெண்கள், நாடோடிகள், குறிசொல்பவர்கள் போன்றோர் பாடும் பாடல் வழிகளிலும் கும்மிப்பாட்டு, கிளிப்பாட்டு, விளையாட்டுப்பாட்டு, காவடிச் சிந்து போன்றவற்றின் வகைப்பாட்டிலும் மெட்டுக்கட்டுவதே பெரும் உவப்பாக இருந்திருக்கிறது. ஒரு வகையில் இவற்றாலெல்லாம் தமிழிசையின் பரப்பை அவர் விஸ்தரித்திருக்கிறார் என்பதையே அவரது கணிசமான பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அதே சமயம் கர்நாடக இசைமீது அவருக்கிருந்த அளவற்ற ஆசையையும் அதன் வழி அவர் இயற்றிய பாடல்களையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 'பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட'' விருப்பம் கொண்டிருந்த பாரதி, மகாவைத்தியநாத ஐயர், பூச்சி சீனிவாச அய்யங்கார் போன்ற வித்வான்களின் கச்சேரிகளையும், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் இசையையும், பலமுறை கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கிறார். சரப சாஸ்திரியை அவர் 'ஆரிய சம்பத்து' என்று குறிப்பிடுகிறார்.

கேள்வி ஞானத்தால் அவருக்குள் இயல்பாக உருவாகியிருந்த இசை ஞானத்தை விருத்தி செய்துகொள்ள அவருக்கு வசதி வாய்ப்பும் சரியான குருவும் அமையவில்லை எனினும் கடையத்தில் இருக்கும்போது கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள கடையம் நாகஸ்வர வித்வான் சண்முகத்தை வீட்டுக்கு அழைத்து அவரிடம் லயம், ஸ்வரம் சார்ந்த சங்கீத விஷயங்களைத் தெரிந்துகொண்டுள்ளார். அந்த நேரத்தில் அதற்காக சரளி வரிசை, ஜண்ட வரிசை சங்கீதப் பாடப் புத்தகங்களும் வாங்கியுள்ளார்.

அவர் இசை குறித்தும் இசைக் கருவிகள் சிலவற்றைக் குறித்தும் எழுதிய கட்டுரைகளை, உரையாடல்களில் பகிர்ந்தவற்றை, கவிதைகளில் வடித்தவற்றையெல்லாம் ஒரு சேர தொகுத்துப் பார்க்கையில் இசையியல் சார்ந்த விற்பன்னர் ஒருவர், சளைக்காமல் எழுதி செயல்பட்டதை போல் இயங்கியதை ஏராளமான சான்றுகளுடன் அறிய முடிகிறது.

நாட்டார் கலைகள் தவிர்த்து, திரும்பத் திரும்ப பக்திப் பாடல்களில் சிருங்காரம், சோகம் இப்படிக் குறிப்பிட்ட வெகுசில ரசங்களிலேதான் அந்நாட்களில் பாடல்கள் அதிகமாக எழுதப்பட்டுள்ளன. வேறு எவ்வளவோ பாவங்கள் உள்ளன அதிலெல்லாம் ஏன் எழுதப்படவில்லை என்பதே அவருடைய எழுத்திலும் பேச்சிலும் உள்ளீடாக வெளிப்படுகிறது. அதற்கு அவரே முன்னுதாரணமான காரியங்களையும் செய்கிறார். அப்போதே பல பாடல்களில் எதிரெதிர் உணர்ச்சிகளை இணைத்து ஒரு வித ஃப்யூஷனை பல பாடல்களில் செய்து பார்க்கிறார்.

'ஜய பேரிகை கொட்டடா கொட்டடா...'' என்ற பாடலில் பக்தி, வீரம் களிப்பு, இயற்கையின் மீதான காதல், பெருமிதமென சில வகையான உணர்ச்சி பாவங்கள் கலந்துதுலங்குகின்றன.

இன்னொரு மிகப் பிரசித்தி பெற்ற பாடலான, 'மோகத்தைக் கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு' என்ற பாடல் வழியாக மோகாவஸ்தையையும், கையறு நிலையையும், பக்தியையும் ஒரு வித மெல்லிய வலியோடு நமக்குக் கடத்திவிடுகிறார்.

கர்நாடக பக்தி ரஸப் பாடல்களை இயற்றுகையில் அவர் மற்ற கடவுள்களைவிடவும் வேய்ங்குழல் இசைத்து நடமிடும் கண்ணனிடமே எல்லா விளையாட்டுகளையும் விளையாடுகிறார். சம்பாஷணைகளை நிகழ்த்துகிறார். தாளத்தைப் பற்றியெல்லாம் பலவிதமாக எழுதியுள்ள பாரதி அதைத் தன் பாடல்களிலும் பின்பற்றியுள்ளார். பாரதியின், ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - என்ற பாடல் - தகிட தகிட தகிட என்று மூன்று மூன்றாக வரும் திஸ்ரகதிக்கு ஒரு சரியான உதாரணம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிச் செல்லலாம்.

பாரதியார், சீனிவாச்சாரியார், வ.வே.சு. ஐயர், சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள் மற்றும் நாகசாமி எல்லோருமாய் ஒரு நாள் குளியலுக்காக பாண்டிச்சேரி கடற்கரைக்குச் செல்லும் வழியில் கௌர்ள வீதியில் ஒரு பாம்பாட்டி நிலத்தில் ஒரு பாம்பை விட்டு வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்திருக்கிறார். இவர்களைக் கண்டதும் பாம்பாட்டி மறுபடி குழலை ஊத ஆரம்பிக்க பாம்பும் சந்தோஷமாக ஆடியுள்ளது. இந்த குறிப்பு யதுகிரியம்மாள் புத்தகத்தில் காணக்கிடைக்கிறது.

அதன் பின்னோ முன்னோ இப்படி பாரதி இப்படி எழுதியிருக்கக் கூடுமோ?

பாம்புப் பிடாரன் குழலூதுகிறான்

குழலிலே இசை பிறந்ததா

தொளையிலே பிறந்ததா

பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா

அவனுள்ளத்திலே பிறந்தது

குழலிலே வெளிப்பட்டது

உள்ளம் தனியே ஒலிக்காது

குழல் தனியே இசை புரியாது

உள்ளம் குழலிலே ஒட்டாது

உள்ளம் மூச்சிலே ஒட்டும்

மூச்சு குழலிலே ஒட்டும்

குழல் பாடும்

இஃது சக்தியின் லீலை

அவள் உள்ளத்திலே பாடுகிறாள்

அது குழலின் தொளையிலே கேட்கிறது

பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து

அதிலே இசையுண்டாக்குதல் சக்தி.

ஒரு சமயம் பாரதியாருக்கு புதுச்சேரி வாசம் அலுத்துப் போனதால், தாடி மீசையை மழித்துவிட்டு மாறுவேடம் கொண்டு ஊர் சுற்றக் கிளம்புகிறார். போனவர் எங்கே போனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. எங்கோ ரயிலில் பிரயாணம் செய்துவிட்டு வீடு திரும்புகிறார். செல்லம்மாள் அவர் சென்றதிலிருந்து அழுது கொண்டு சாப்பிடாமல் வருத்தமாக இருந்திருக்கிறார்.

பாரதியாரின் இந்த அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு பத்து பதினைந்து நாள் கழித்து தன் வீட்டுக்கு வந்திருந்த அவரிடம் யதுகிரி, 'என்ன புதிய பாட்டு ஒன்றும் இல்லையா?' என்று கேட்க, 'அதெல்லாம் ரெயிலில் போகும்போதே கட்டியாய் விட்டது' என்று தனது புதிய பாட்டைப் பாடியுள்ளார். அது 'பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு' என்று ஆரம்பிக்கும் பாட்டு. அவர் பிரயாணமாகும்போது ஒரு ஹிந்துஸ்தானிப் பாட்டை ரெயிலில் ஒரு பிச்சைக்காரப் பெண் பாடியிருக்கிறாள். அதே மெட்டில் பாரதி இயற்றிய பாடல் இது.

கர்நாடக இசைப் பாடல்களில் இருந்து மட்டுமல்ல; எளிய மக்களின் இசைப் பாடல்களில் இருந்தெல்லாம் அவர் எப்படி உத்வேகம் பெற்று பாடலியற்றியுள்ளார் என்பது மிகமிக வியப்பாக உள்ளது.

தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், ராம நாடகம் போன்ற தமிழிசைப் பனுவல்களோடு மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதி, திரிகூட ராசப்பக் கவிராயர் ஆகியோர் எழுதிய அற்புதமான தமிழிசைப் பாடல்களும் நம்மிடம் இருக்கின்றன. அவற்றோடு வெகு இயல்பாக நாட்டார் பாடல்களையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டபடி அந்த இசை வரிசையில் வெகு இயல்பாக இணைந்துவிட்டன பாரதி பாடல்கள்.

நவீன கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல், கருத்துப் படம் போன்ற பலவற்றிற்கு மட்டுமல்ல; பாபநாசம் சிவன், கவியோகி சுத்தானந்த பாரதியார், தண்டபாணி தேசிகர், கீழ்வேளுர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்ற தமிழ்ப் பாட்டுக்காரர்களுக்கும் பாரதியே முன்னோடி. தமிழின் புதுவித புதுக்கவிதைப் பாடல்களுக்கும் அவரே தோற்றுவாய்.

செவ்வியல் இசையை நுகர்வோர், நாட்டார் இசை வடிவங்களை அப்படி உவந்து கேட்பதில்லை என்றொரு கருத்து சிலரிடம் நிலவுகிறது. சிறப்பும் நுட்பமும் வாய்ந்த பிற இசை வடிவங்களை அறியும்போது அவர்களும் அதை உணர்ந்து கேட்பதோடு மட்டுமல்ல, அதை வேறு வேறு ரூபத்தில் செவ்வியல் இசைக்குள் சுவீகரித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கு தற்போது அருணா சாய்ராம் மேடைகளில் பாடும் 'மாடு மேய்க்கும் கண்ணா' பாடல் ஒரு சரியான உதாரணம்.

அப்படி தரம் நிறைந்த நல்லிசை எல்லா வகையான இசை வடிவங்களிலும் ஒலியிலும் ஊடுருவி இழையுமொரு வெளி உருவாக்கப்பட வேண்டும். அன்று அது உருவாக மொழியிலும் இசையிலும் ஆழங்கால்பட்ட ஒருவர் தேவைப்படுகிறார். காலம் பாரதியை ஒரு கருவியாக்கி அதை நிறைவேற்றிக் கொண்டதோ என்று நாம் எண்ணிப் பார்க்கலாம்.

தமிழின் தன்னிகரற்ற ஆளுமையான பாரதி சொல்லிச் சென்ற பல விஷயங்கள் எக்காலத்துக்கும் பயனுள்ளவை. அவருடைய இவ்வார்த்தைகளை இன்றைய அரசு நிர்வாகத்தில் இருக்கும் காதுள்ளவர்கள் யாரேனும் கேட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தால், அது இடைத்தமிழுக்கான நல்நிகழ்வாய் அமையும்.

'பொதுப்பள்ளிக்கூடத்திலே சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மற்ற நாகரிக தேசங்களில் சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com