
பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்கிற குறையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆண்டுதோறும் பாரதியாரின் பிறந்த நாளில் நடைபெறும் விழாக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டுகளைவிடவும் அதிக அளவில் இந்த ஆண்டு எட்டயபுரத்தில் வந்து குவிந்த பாரதி அன்பர்களின் கூட்டம் திகைக்க வைத்தது. உணர்வால் உந்தப்பட்டு, தமிழகம் எங்கிருந்தும் பாரதி அன்பர்கள் அங்கே வந்திருந்தனர்.
பாரதியார் மணிமண்டபம் இன்னும்கூட ஒரு பூஞ்சோலையாக மாறவில்லையே; அங்கிருக்கும் நூலகம் மிகப் பெரிய பாரதியியல் ஆராய்ச்சி மையமாக உருவாகவில்லையே; மண்டபத்தின் பின்னால் இருக்கும் அரங்கம் நவீன அரங்கமாகவில்லையே உள்ளிட்ட எனது ஆதங்கத்தை இந்த ஆண்டும் பதிவு செய்கிறேன். இது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல. பாரதி அன்பர்களின் ஆதரவைக் கோருவதற்காக...
நல்லி குப்புசாமி செட்டியாரைத் தவிர, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் இருக்கும் நூலகத்துக்கு வேறு யாரும் அதிக அளவில் புத்தகங்கள் அளிக்கவில்லை என்கிற தகவலைத் தெரிவித்தார் அந்த நூலகத்தின் காப்பாளர். பாரதியார் குறித்த புத்தகம் எழுதுபவர்களும், அதன் பதிப்பாளர்களும் தங்களது காணிக்கையாக எட்டயபுரம் மணி மண்டப நூலகத்துக்கு ஒரு பிரதியை அனுப்பித் தரலாகாதா? என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
சென்னை சில்க்ஸின் அதிபர் திரு.சந்திரன் பாரதியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தனது தூத்துக்குடி மேலாளர் திரு.சிவா மூலம் மாணவர்களுக்கு பாரதியார் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி இளைய தலைமுறையினர் மத்தியில் பைந்தமிழ் தேர்ப்பாகனின் சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார். பாரதியார் மணிமண்டபத்தில் நல்லதொரு பூங்காவை உருவாக்கி, அவர்கள் அதைப் பராமரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி மனது வைத்தால், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மணி மண்டபத்தையொட்டிய அரங்கத்தை பிரம்மாண்டமாக வடிவமைக்க முடியும் என்பதை அவரது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
உலகுக்கு தமிழகம் அளித்த தனிப்பெரும் இலக்கியப் பெருங்கொடை மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு கவிஞனுக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், உலகிலேயே அது பாரதியாருக்கு மட்டும்தான். அந்த மகாகவி பிறந்த இடம் தமிழகத்தின் முதன்மையான இலக்கிய மையமாக உருவாக வேண்டாமா?
உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஒன்றுகூடி பாரதியார் புகழ்பாடும் டிசம்பர் 11-ஆம் தேதிக்காக நான் மட்டுமல்ல, பாரதியை நேசிக்கும் ஒவ்வொரு பாரதி தாசரும் ஏங்குகிறார்கள். கனவு மெய்ப்படும்!
---------------------------------------------------------------------------------------
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகச் சிறப்பாக பாரதி விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பாரதி விழாவில், பாரதியியல் ஆய்வாளர் முனைவர் கிருங்கை சொ.சேதுபதி, 'பாரதி விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார். தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது என்பது தோழர் ஸ்டாலின் குணசேகரனுக்குக் கைவந்த கலை என்பது மீண்டும் உறுதிப்படுகிறது.
பாரதியையும், கம்பனையும் வாசிப்பதும், நேசிப்பதும், சுவாசிப்பதுமாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் முனைவர் சேதுபதி. இதுவரையில் 35-க்கும் அதிகமான புத்தகங்கள் பாரதியார் குறித்து மட்டும் எழுதியிருக்கிறார். அவரது பாரதி களஞ்சியம் (பத்து தொகுதிகள்), மகாகவி பாரதி வரலாறு, பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள், காரைக்குடியில் பாரதி உள்ளிட்டவை பாரதியியல் அன்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்.
பாரதியின் பெயரால் நிறுவப்பட்டு வழங்கப்படும் ஒவ்வொரு விருதும், விருதாளர்களுக்கு வழங்கப்படுவதல்ல; மகாகவி பாரதிக்கே வழங்கப்படுவதாகக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------
பாரதியார் குறித்த தேடலைத் தனது பிறவிப் பயன் என்று கருதி இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ய.மணிகண்டன், 2024 பாரதியார் பிறந்த நாளுக்காக வெளிக்கொணர்ந்திருக்கும் புதிய வெளிச்சம் 'பாரதியும் ஜப்பானும்'.
அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதியார் குறித்த செய்திகளும், அவரது புகழும் தமிழகத்துக்கு வெளியே மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியேயும் பரவி இருந்தன என்பதைத் தரவுகளைத் தேடிப்பிடித்து பதிவு செய்திருக்கிறார் முனைவர் ய.மணிகண்டன். அதேபோல, உலகளாவிய நிகழ்வுகளையும், தகவல்களையும் சுப்பிரமணிய பாரதி என்கிற பத்திரிகையாளர் எப்படி தமிழகத்துக்குத் தெரிவித்தார் என்பது குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார்.
பிரிட்டனைப் போலவே, பிரான்ஸ், ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் பாரதியாரின் பருந்துப் பார்வையில் இருந்து தப்பவில்லை. 'பாரதியின் ஜப்பானிய தரிசனம் அரசியல், இலக்கியம், பண்பாடு, தொழில்நுட்பம் எனப் பன்முகம் வாய்ந்தது' என்கிறார் முனைவர் ய.மணிகண்டன்.
ஜப்பான் தொடர்பான பாரதியாரின் பதிவுகள் அனைத்தையும் திரட்டி, 'பாரதியும் ஜப்பானும்' என்று புத்தக வடிவில் தந்திருக்கிறார் அவர்.
பாரதியாரின் சில கட்டுரைகளுக்கு ஆதாரமாக விளங்கிய ஆங்கிலக் கட்டுரைகளையும் தேடிப்பிடித்து இணைத்திருப்பது 'பாரதியும் ஜப்பானும்' நூலின் தனிச் சிறப்பு.
ஜப்பானிய ஹொக்கூ கவிதையின் முன்னோடியான வாஷோ
மத்ஸூவோவைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்!
எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது. குறித்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் விபத்துகள் குறித்த ஆசிரியர் உரை எழுதியபோது நினைவுக்கு வந்தது; அதைப் பகிர்ந்து கொள்கிறேன். எழுதிய கவிஞர் யாரென்று தெரிவித்தால் அடுத்த வாரம் பதிவு செய்கிறேன்.
24்x7 செய்திகளுக்காக
ஒவ்வொரு மணி நேரத்துக்கும்
மரணம் வேண்டியிருக்கிறது,
விபத்துகளுடன்;
விபத்து வேண்டியிருக்கிறது,
மரணங்களுடன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.