கற்பனையில் அழகோவியங்கள்

தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்Center-Center-Bhubaneswar
Updated on
2 min read

தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். 'வெண்பாவுக்கோர் புகழேந்தி' எனப் போற்றப்பட்டவர். ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். குலோத்துங்கச்சோழனது வேண்டுகோளுக்கிணங்க நளவெண்பாவைப் பாடினார்.

நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை

என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்

அலர்த்துங் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்

புலர்த்தும் புகைவான் புகுந்து.

தென்றலால் அசைகின்ற கொடிகளையுடையவை அந்நகர மாடங்கள். அவற்றில் ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகளை அணிந்த பெண்கள் தங்கள் கூந்தலை உலர்ந்த அகிற்புகை எழுப்புகின்றார்கள். அப்புகை வானத்தில் எங்கும் பரவுவதால், வானத்திலிருந்து மேகங்கள் பெய்த மழைத்தாரைகளிலெல்லாம் எப்போதும் அகிலின் நறுமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும்.

பெண்கள் அகில் புகையை பயன்படுத்தியமையால் மழைத் தாரைகள் கூட அகில் மணம் கொண்டிருந்ததாக சொல்லும் விதத்தில், அந்த நகர மாந்தரின் தாராள மனமும் வளமும் புலப்படுவதோடு வெண்பாவிலும் நம்மால் அகில் மணத்தை உணர முடியும். அத்தனை அழகான கற்பனை புகழேந்திப் புலவருக்கு இருந்தது.

இலக்கியத்தின் அழகு அதன் கற்பனையில் தான் அடங்கிஉள்ளதென கூறுவர். நளவெண்பாவின் கற்பனை வளத்திற்கு சற்றும் இளைத்ததல்ல முத்தொள்ளாயிரம் எனும் தொகை நூலின் கற்பனை வளம்.

நளவெண்பாவிற்கும் முத்தொள்ளாயிரத்திற்கும் உள்ள ஒற்றுமை யாதெனில் இரண்டுமே வெண்பாக்களால் அமைந்தவை. முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய அரசர்களைப் போற்றிப் பாடும் வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். பத்துப் பாடல்கள் பத்து கொண்ட நூல் பதிற்றுப் பத்து. நூறு பாடல்கள் ஐந்து கொண்ட நூல் ஐங்குறுநூறு.

அதுபோலத் தொள்ளாயிரம் பாடல்கள் மூன்று கொண்ட நூல் முத்தொள்ளாயிரம். இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் யாப்பருங்கலம் முதலான இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய பாடல்களைத் தொகுத்து இந்த நூலை அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒவ்வொன்றும் கற்பனை ஊற்று என்றால் அது மிகையாகாது. சேர நாட்டின் வளத்தினையும், மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஒரு சேரப் புகழும் ஆசிரியர் பின் வருமாறு பாடுகின்றார்:

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ

வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம்

கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கெளவை

உடைத்து அரோ

நச்சிலை வேல் கோக் கோதை நாடு

சேறு நிறைந்த பொய்கைகள் சேர மன்னன் நாட்டில் மிகுதி. அப்பொய்கைகளில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று எண்ணின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பாற்ற நினைத்துத் தம் கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேரநாட்டில் காண்பது அரிது என்கின்றார் புலவர்.

நம் கண் முன் ஒரு பொய்கையும் அதன் செந்நிற மலர்களும், பறவைகள் தன் சிறகுகளுக்குள் தத்தம் குஞ்சுகளை அணைத்துக் கொள்வதுமான அழகிய ஓவியம் ஒன்று நம் கண் முன் விரிகிறது. தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கும் இத்தகைய கற்பனைகள் தமிழரின் மனவளத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com