கம்பனின் தமிழமுதம் - 24: சூலையின் திருக்கு!

இராவணனுக்கு வீடணன் நீதிகளைச் சொன்னபோது, இரணியன் என்னும் அசுரனைப் பற்றி கூறியதாக, 'இரணியன் வதைப் படலம்' என்ற தலைப்பில் ஒரு படலத்தையே அமைத்திருக்கிறான் கம்பன்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

இராவணனுக்கு வீடணன் நீதிகளைச் சொன்னபோது, இரணியன் என்னும் அசுரனைப் பற்றி கூறியதாக, 'இரணியன் வதைப் படலம்' என்ற தலைப்பில் ஒரு படலத்தையே அமைத்திருக்கிறான் கம்பன். படலம் என்பது, காப்பியப்போக்கில் நிகழும் ஒரு குறிப்பிட்ட கதைப் பகுதியைச் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. இரணியன், ஏராளமான வரங்களைப் பெற்று எவரும் எதிர்க்க முடியாதவனாக வாழ்ந்த ஓர் அரசன்.

அவனுடைய ஒரே மகன் பிரகலாதன் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவன். இரணியன், நாத்திகன் அல்லன். 'இறைவனைவிட நான் பெரியவன்' என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டவன். அதையே பூரணமாக நம்பியவன். 'நமோ இரணியாய' என்று மட்டுமே நாட்டில் எவரும் சொல்ல வேண்டும். 'நமோ நாராயணாய' என்று இறைவன் பெயரைச் சொல்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும்.

தனது மகன் வேதங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, வேதத்தை நன்கு கற்றுணர்ந்த ஓர் அந்தணரை, மகனுக்கு ஆசிரியராக நியமித்தான் இரணியன். ஆசிரியர், 'நமோ இரணியாய' என்று சொல்லி பாடத்தைத் தொடங்கச் சொன்னார். பிரகலாதன் மறுத்தான். 'நமோ நாராயணாய' என்னும் இறை நாமமே வேதத்தின் மூலம் என்று சொல்லி, வேறு எதையும் சொல்ல மறுத்தான்.

ஆசிரியர், இரணியனிடம் ஓடி, 'பிரகலாதன் வேறு ஒரு பெயரைச் சொல்கின்றான்; நான் சொல்வதைச் சொல்ல பிடிவாதமாக மறுக்கிறான்' என்றார். 'என்ன வேறு பெயரைச் சொல்கிறான்?' என்று கேட்டான் இரணியன். 'அவன் சொன்ன பெயரைச் சொன்னால் நான் நரகத்துக்குத்தான் போவேன். என் நாக்கு வெந்து உதிர்ந்துவிடும்' என்று சொல்லிவிட்டார் ஆசிரியர்.

பிரகலாதனை வரச் சொன்னான் இரணியன். 'நமோ நாராயணாய மட்டுமே வேத மந்திரச் சொல். அதையே எப்போதும் சொல்வேன். உறுதியாக வேறு எந்தப் பெயரையும் சொல்ல மாட்டேன்' என்று தந்தையிடம் சொன்னான் பிரகலாதன். கோபம் கொண்ட இரணியன், மகனையே கொல்ல ஆணையிட்டான். பல்வேறு வகையில் அவனைக் கொல்ல ஏவலாளர்கள் முயன்றும் முடியவில்லை. 'இவன் மாய வித்தைக் கற்றுக்கொண்டு தப்பிக்கிறான். இவனை நானே கொல்கிறேன்' என்று முனைந்தான் இரணியன்.

'தந்தையே, இறைவன் விரும்பினால் அன்றி, இந்த உடலில் இருந்து உயிரை எடுக்க உங்களால் முடியாது' என்றான் பிரகலாதன். முரண்பட்ட சிந்தனைகள் கொண்ட அவர்கள் இருவருக்கிடையில் பேச்சும் எதிர்ப் பேச்சும் வளர்ந்தன. இந்தப் பின்னணியில், இந்த பூமிப்பந்தின் எந்த மூலையிலும் வாழும் எல்லா மனிதருக்கும் என்றும் பயன்படும் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறான் கம்பன்.

'காலையில், மணம் பொருந்திய மலர்கள் மலர்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தோற்றமும் மாறுபட்டு இருக்கிறது. ஒவ்வொன்றின் மணமும் தனித்தனியே இனிமையானது. எல்லாவற்றிலும் வேறுபட்ட இந்த மலர்களை வைத்தே மாலை செய்யப்படுகிறது. மலர்கள் பல என்றாலும் மாலை ஒன்றுதான்.

அது போலவே, இறைவனை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு மனநிலைகளில் மனிதர்கள் வணங்கினாலும், இறைவன் ஒருவனே. கடல் நீரில் அலைகள் தோன்றுகின்றன. 'இது கடலாக இருக்கும் நீர்; இது அலையாக வந்த நீர்' என்று கடல் நீரைப் பிரித்துப் பார்க்க முடியுமா? கடல் நீராகப் பார்ப்பதும் அலையாகப் பார்ப்பதும் ஒரே நீர்தான்.

இறைவனும் அப்படியே. மனிதர்கள் எந்த உருவில் பார்த்தாலும் அவன் ஒருவனே. இது பெரியது, அது சிறியது; இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று பேசுவதெல்லாம் சமயவாதிகளின் மன எரிவு அல்லது வயிறு எரிவு காரணமாகத்தான். ஆனால், ஞானிகள் இறைவன் ஒருவனே என்பதை உணர்வர்' என்று ஓர் ஆழமான கருத்தினை இங்கு வைத்திருக்கிறான். கம்பனின் பாடலைக் காணலாம்.

காலையின் நறுமலர் ஒன்றைக் கட்டிய

மாலையின் மலர்புரை சமய வாதியர்

சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம்

வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்.

சூலை நோய் என்பது ஒருவகையான, தாங்கமுடியாத வயிற்று வலி. வயிற்று எரிவு. இப்படிப்பட்ட வயிற்று எரிவு உடைய சமயவாதிகளே, இறைவனைப் பிரித்துப் பார்க்கிறார்கள்; பிற நம்பிக்கை உடையவர்களைக் குறை சொல்கிறார்கள் என்று பிரகலாதன் சொல்வதாக அமைக்கிறான் கம்பன். 'சூலையின் திருக்கு' என்னும் சொற்கள், வியந்து பார்க்க வைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com