நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

பன்னூறு ஆண்டுகளைக் கடந்த செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.
நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!
Published on
Updated on
2 min read

பன்னூறு ஆண்டுகளைக் கடந்த செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.

'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந. ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், செளந்தரராசன். தனித்தமிழ் இயக்கம் கண்ட பொதுநிலைக்

கழக ஆசிரியர் மறைமலையடிகளாரின் மனங்கவர்ந்த நன் மாணவரானதால் ஆசிரியர் போலவே, தம் பெயரையும் முருகவேள் என்று மாற்றிக் கொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் (1947) பட்டமும், பண்டிதர் (1948) - மதுரை தமிழ் சங்கத்திலும், பி.ஓ.எல் (1951) மற்றும் எம்.ஓ.எல் (1957) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 1958-இல் எம். ஏ. பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது தமிழ்த் திருமணம் தவத்திரு. அழகரடிகள் தலைமையில் 11-07-1947 அன்று நடந்தது. சரசுவதி அம்மையார் வாழ்க்கைத் துணையானார்.

புலவரேறு முருகவேள் 16 ஆண்டுகள் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 'திருக்கோயில்' இதழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இருபத்து இரண்டரை ஆண்டுகளாகத் (1962 செப்டம்பர் முதல் 1985 மார்ச் வரை) 'திருக்கோயில்' திங்களிதழில் இவர் எழுதியதுபோல் இனி யார் எழுத வல்லார்? இதழ் வரலாற்றில் இது பெருங்கொடையன்றோ?

குமரகுருபரன், ஞானசம்பந்தம், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், திருப்புகழ் அமிர்தம், இராமகிருஷ்ண விஜயம், கலைமகள், வீரகேசரி, ஈழகேசரி, இந்து சாதனம், ஞான பூமி ஆகிய இதழ்களில் தனித்தனியே பல ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் கொள்கைகளையும், நூற் கோட்பாடுகளையும் கசடறக் கற்றுத் தெளிந்தவர். தமிழுக்கும் சிறப்பாக சைவம், வைணவத்துக்கும் இடையறா எழுத்துத் தொண்டாற்றிய தோன்றாத் துணையாவார்.

'திருக்கோயில்', 'சித்தாந்தம்' ஆகிய இதழ்களில் செந்தமிழ் சைவமணி எழுதிய மெய்ப்பொருட் கட்டுரைகளும், உரைகளும், வரலாறுகளும், பிறநூல் மேற்கோள்களும் 'முருகவேளுக்கு நிகராவார் மற்றொருவர் இல்லை' என்ற உண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, சைவத் துறைப் பேராசிரியராக வருமாறு முருகவேளை அழைத்த போது, தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையினர் நடத்தும் 'திருக்கோயில்' இதழுக்கு இறுதிவரை பணி செய்கிறேன் என்ற நிறைவே போதும் என்று பணிவோடு மறுத்த புகழ்மையர்.

சிறுவை நச்சினார்க்கினியரால், 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'நக்கீரர் கழகம்' என்ற இலக்கிய அமைப்பிற்கு ஊன்றுகோலாய் விளங்கி, 'மறைமலையடிகளார் மாட்சி' எனும் புகழ் மலிந்த சொல்லோவியத்தைப் புனைந்தமையால், அவர்தம் புலமை நலம் குன்றின்மேல் இட்ட விளக்கென ஒளிவீசியது. அந்நூலின் முன்னுரையில் புலவரேறுவின் புலமைநலத்தைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பாராட்டியது பொற்குடத்திற்கு பொட்டு வைத்தாற் போன்றதாகும்.

புலவரேறு முருகவேள் எழுதிய 50-க்கும் மேற்பட்ட தனி நூல்கள் பல்வேறு அமைப்புகள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், சங்க இலக்கிய மாண்பு, தமிழ் ஞானசம்பந்தன், இலக்கணத்தில் எழிற் கற்பனைகள், மெய்கண்ட நூல்களின் வாழ்வியல் உண்மைகள், திருப்பாவை உரை நயங்களின் தொகுப்பு, சைவ சித்தாந்தமும் தமிழர் பண்பாடும், திருவாசக கதிர்மணி விளக்க ஆய்வு நூல், சிவஞான போதம் (மூலமும் விளக்க உரையும்), திவ்விய பிரபந்த செழுங்கனிகள் உள்ளிட்ட நூல்கள் செந்தமிழ்ச் சிகரமென விளங்குகின்றன.

பல்கலைக்கழகங்கள் முருகவேளாகிய நம் தமிழவேளை அழைத்து அறக்கட்டளைப் பொழிவுகளை நிகழ்த்த வேண்டினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை சிவனடியார் திருக்கூட்டம், தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையம், திருப்பனந்தாள் காசிமடம், திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம், காஞ்சி காமகோடி பீடம், குன்றக்குடி ஆதீனம், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை,

திரிசிரபுரம் சைவசித்தாந்த சபை, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சபை, கொழும்பு விவேகானந்த சபை, ஈழத்துத் திருநெறி மன்றம், யாழ்ப்பாணம் சேக்கிழார் மன்றம் ஆகிய சமய நிறுவனங்களில் சிறப்புச் சொற்பொழிவுகள், தொடர் சொற்பொழிவுகள், பேரவைகள், கவிதையரங்குகள், கோடைகாலச் சமய வகுப்புகள் எனத் தொண்டாற்றினார். திருமடங்கள் தம் தமிழ்ப்பணிக்கென இவரை அழைத்தன. சைவ சித்தாந்த மாநாடுகள், கல்லூரிகள், உயர்பள்ளிகள் விழாக்கள் இவரை நாடின.

சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் 'சித்தாந்தம் ' இதழின் ஆசிரியராக 12 ஆண்டுகள் பணி செய்தபோது, சைவ சித்தாந்த மகா சமாஜம் வெளியிட்ட விழா மலர்கள், ஞானியர் சுவாமிகள் நூற்றாண்டு விழா மலர் எனப் பல நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக அருந் தொண்டாற்றினார்.

இம்மண்ணுலகில் அகவை அறுபத்தொன்று வரை (7.4.1985) வாழ்ந்த ஆங்கிலமும் அருந்தமிழும் அறிந்த அன்புச் செல்வர் புலவரேறு முருகவேளின் அருமை பெருமைகளை அவரது நூற்றாண்டுத் திருவிழாவில் தமிழுலகம் நினைந்து போற்றுவதோடு, இதழ்களில் அவர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடுகிற பணி, வருங்காலச் சைவ உலகிற்கு நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத அரும்பணியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com