
அகப்பொருளில் தலைவன், தலைவியர் பிரிவு களவிலும் கற்பிலும் நிகழ்கின்றன. பொருளுக்காகப் பிரியும் பிரிவு களவிலும் அமையும். கற்பிலும் அமையும். ஆனால் பரத்தையர் காரணமாகப் பிரியும் பிரிவு, கற்பில் மட்டுமே நிகழ்வதாகும்.
பொருள்வயிற் பிரிவு, பரத்தையர் பிரிவு ஆகிய இவ்விரு பிரிவுகளைக் குறுந்தொகையில் இரு பாடல்கள் சிறப்பாக சித்திரிக்கின்றன. இரு பாடல்களும் தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைந்திருப்பதும் குறிக்கத்தக்கது. காமஞ்சேர்குளத்தார் (பாடல் 4) அள்ளூர் நன்முல்லையார் (பாடல் 202) ஆகியோர் இப்பாடல்களின் ஆசிரியர்களாவர்.
காமஞ்சேர் குளத்தாரின் பாடல் பிரிவிடை ஆற்றாள் என கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது எனும் துறையின்கீழ் அமைகிறது. தலைவன் பிரிவை ஆற்றாது வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு, தலைவி, 'தலைவன் தன்னோடிருக்கும் காலத்து அன்பு மிக்கவனாயிருந்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன், என்பது 'புலப்படக் கூறியது' என உரையாசிரியர் விளக்கம் தருவது பாடலின் சூழலை விளக்க துணை செய்கிறது.
'என் நெஞ்சு நோகிறது என் நெஞ்சு நோகிறது, தலைவன் பிரிவால் என் கண்களின் இமைகளை எரியச் செய்யும் வெம்மையான கண்ணீரைத் துடைத்து ஆறுதல்படுத்த வேண்டிய நம் காதலர் அவ்வாறு செய்யாது பிரிந்திருத்தலால், என் நெஞ்சு நோகின்றது' என்ற பொருளில்,
நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநம் காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே..
என்று பாடல் அமைகிறது.
தலைவியோடு சேர்ந்திருந்த நாட்களில் தண்ணளியோடு இருந்த தலைவன், இப்பொழுது அவ்வாறு இல்லாமல் போனானே என்ற ஆற்றாமை இப்பாடலில் தொனிக்கக் காணலாம். பாடலில் துறையின் பிரிவு எது என கூறப்படாது போனாலும் பொருள் வயின் தலைவன் பிரிந்திருப்பதாக இப்பாடலைக் கொள்ளலாம். நல்ல காரணத்துக்காக தலைவன் பிரிவு அமைந்திருந்தாலும் அவன் பிரிவு அவளின் நெஞ்சை நோகச் செய்கிறது.
அதுபோலவே, பிரிவாற்றாது வருந்தும் மற்றொரு தலைவியைக் குறுந்தொகையில் (பா. 202) அள்ளூர் நன்முல்லையார் எனும் புலவர் சித்திரிக்கிறார். 'வாயிலாக புக்கத் தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்ததாக' இப்பாடலின் துறை அமைகிறது. இப்பாடலும் தலைவன் பிரிவாற்றாமை காரணமாக அமைகிறது. அவனுக்காக தோழி தலைவியிடம் தூது வருகிறாள். அப்போது தலைவி அவளை நோக்கி 'தலைவன் எனக்குக் கொடுந்துயர் இழைத்துவிட்டான். என் நெஞ்சு நோகின்றது. அதனால் அவனை ஏற்றுக்கொள்ளேன்' என்று வாயில் மறுப்பதாக பாடல் அமைகிறது.
நோமென நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த நோமென் நெஞ்சே.
என்று பாடல் அமைகிறது.
இப்பாடலில் தலைவன் தன்னிடம் முன்பு அன்போடு ஒழுகியதையும் நாளாக நாளாக, அந்த அன்பு அற்றுப் போனதையும் பொருத்தமான உவமை மூலம் தோழிக்குத் தலைவி உணர்த்துவது அருமை.
சிறிய இலைகளை உடைய நெருஞ்சியின் புதுமலர் கண்ணுக்கு இனிமை தந்தது போல் முன்பு தலைவன் தன்னிடத்து அன்புமிக்கவனாக இருந்தான்; அதே நெருஞ்சி மலர் பின்னர் முள்ளாக மாறியதும் காலில் குத்தி துன்பம் தருவதுபோல் இப்போது ஒழுக்கம் பிறழ்ந்து பரத்தையிடம் சென்று துன்பத்தைத் தருகிறான் என்பதைச் 'சிற்றிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந்தாங்கு' என்று உவமையால் விளக்குவது தலைவனது ஒழுக்க முரண்பாட்டை சித்திரிக்கத் துணை நிற்கிறது.
இருவேறு புலவர்கள் தலைவியின் பிரிவுத் துயரை 'நோமென் நெஞ்சே' எனப் பாடலின் முதலடியிலும் இறுதியடியிலும் குறிப்பது கற்றறிந்ததா! அல்லது சான்றோர் சிந்தனை ஒன்று போல் அமைந்திருக்கும் என்ற உண்மை உணர்த்த வந்ததா? என ஐயம் கொள்ள வைக்கிறது. நோகின்ற தலைவியின் நெஞ்சைக் கற்போர்க்கு மடைமாற்றம் செய்ய இவ்வாறு வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.