இருதுறை அமைந்த ஓர் அகப்பாடல்

சங்கப்பாடல்கள் திணை, துறை தோன்ற அமைந்திருப்பது மரபாகும். ஒரு பாடலுக்கு ஒரு திணை ஒரு துறை அமைவதும் அவ்வாறே.
இருதுறை அமைந்த ஓர் அகப்பாடல்

சங்கப்பாடல்கள் திணை, துறை தோன்ற அமைந்திருப்பது மரபாகும். ஒரு பாடலுக்கு ஒரு திணை ஒரு துறை அமைவதும் அவ்வாறே. விதிவிலக்காக ஒரே பாடலுக்கு இருவேறு துறைகள் அமைந்திருப்பதற்கு நற்றிணையில் பரணர் பாடிய பன்னிரு பாடல்களில் முந்நூறாவது பாடல் சிறந்த சான்றாகும். இருவேறு துறைகளுக்குப் பொருந்தும் வகையில் பாடல் அமைத்திருப்பது புலவரின் புலமைத் திறத்திற்குச்  சான்றாகக் கொள்ளலாம்.
மருதத் திணையின் கீழ் அமைந்த அப்பாடல் வாயில் மறுத்தது, வரைவு கடாயது ஆகிய இருவேறு துறைகள் அமையும் வகையில் பாடப் பெற்றுள்ளது.
முதலில் வாயில் மறுத்தது என்பதற்கு உரைகாரர் "பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனால் விடப்பட்டு காமக்கிழத்தியிடத்து தூதாக வந்த பாணனை, அவட்குப் பாங்காயின விறலி நோக்கி ஊரனாவான் சிறிய வளையையுடைய இவட்கு இஃது ஈடென்று தனது தேரை அலங்கரித்து என்முன்றிலின் கண்ணே நிறுத்திவிட்டு வேறாவா ளொருத்திபாற் சென்றனன் கண்டாய். அவனது தேரோடு வந்த நீயும் அவனோடு போகாது எமது அட்டிற் சாலை கூரையைப் பற்றி நிற்கின்றனை. அப்படியே நீ நிற்பாயாகவென வெகுண்டு கூறா நிற்பது' என விளக்கம் தருகிறார்.
அதாவது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் காமக்கிழத்தியிடம் பாணனைத் தூது விடுகிறான். தூது வந்த பாணனைக் காமக்கிழத்தியின் விறலி நோக்கி "சிறுவளையணிந்த இவட்கு வழங்கத் தகுதியுடையது என்று அலங்கரிக்கப்பட்ட தேரை எம் முன்றிலில் நிறுத்திவிட்டு வேறொரு பரத்தைபால் தலைவன் சென்றுவிட நீயோ அவனோடு போகாது எமது அட்டில் சாலை கூரையைத் தொட்டு நிற்கிறாய். அப்படியே நில் வராதே' என வெகுண்டு வாயில் மறுப்பதாக துறை அமைகிறது.
மற்றொரு துறையாவது வரைவுகடாயது. "மாற்றோர், நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு' என உரையாசிரியரால் கூறப்படுகிறது.
அதாவது மணம் புரியும் நோக்கமின்றி நாடோறும் வந்து நிற்கும் தலைவனை நோக்கி தோழி, "ஐயனே.. வரைவு (திருமணம்)  வேண்டி வந்த அயலான் ஒருவன் இச்சிறு வளையுடையாளுக்கு இதுவே விலை (கையுறை) என்று தன் தேரை எம் முன்றிலில் கொண்டு நிறுத்திச் சென்றுவிட்டான். நீயும் அவ்வாறு செய்யாது மணம் புரிந்து கொள்' என வரைவு கடாவுகிறாள். 
இவ்விரு துறையும் அமைந்த நற்றிணைப் பாடலைக் காணலாம்:
சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
மடத்தகை ஆயங் கைதொழு தாஅங்கு
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்
முன்கடை நிறீகிச் சென்றிசி னோனே
நீயுந், தேரொடு வந்து போதல் செல்லாது
நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நாம்பின்
இரும்பா ணொக்கல் தலைவன் பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சைசூழ் பெருங்களிறு போலவெம்
அட்டில்ஓலை தொட்டனை நின்றே
(நற்றிணை: 300)
பாடலின் பொருளாவது: நெய் வடிந்தாலொத்த பிசின் கொண்ட நரம்பு பூட்டிய யாழைக் கொண்ட பெரிய சுற்றத்தை உடைய பாணர் தலைவனே, விளங்குகின்ற தொடியணிந்த தலைவி சினங்கொண்டவுடன் மடப்பத்தன்மைமிகு தோழியர் கூட்டம் அவளைக் கைதொழுது இறைஞ்சி நிற்பது போல, மிகுந்த காற்று வீசுவதால் ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் சாய்ந்து வணங்கி நிற்கிறது. 
அத்தகு தண்ணிய ஊரையுடைய தலைவன், வேறொருத்தியைக் காணச் செல்லுவான், இடையே எம்மைக் கண்டதால் சிறியவளையுடைய தலைவிக்கு இது விலையென்று தன் தேரை எம் முன்றிலின் நிறுத்திவிட்டு வேறொரு பரத்தையின் மனை நாடிச் சென்றொழிந்தான். 
அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின் செல்லாது, போரிலே பெரிய புண்ணால் அழகு பெற்ற தழும்பன் என்பவனது, ஊணுரிடத்தில் பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்பது போல எமது அட்டில் சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றாய், என்று கோபத்தோடு கூறி வாயில் மறுக்கிறாள்.
இதே பாடல் வரைவு கடாயது துறைக்கும் பொருந்துமாறு காண்போம்.
"ஒளிபுகுந்த வளையணிந்த தலைவி சினம் கொண்டாள் என்று ஆயத்தார் அவளைக் கைதொழுது நிற்பது போல பெருங்காற்று அடித்தலால் ஆம்பல் குவிந்து தாமரைப்பூவை வணங்கி நிற்பது போல் தோன்றும் குளிர்ந்த நீர்த்துறைக்குத் தலைவன் நீ. 
எம் தலைவியை மணம் புரிய வந்த ஒருவன் அவளுக்கு விலையாக தன் தேரை  இவள் வீட்டு வாயிலில் கையுறையாக நிறுத்திச் சென்றுள்ளான். நீயும் தேரோடு வந்து போதல் செல்லாது தழும்பன் என்பவனது ஊணூரில் (உணவு வழங்கும் ஊர்) பிச்சைக்கு வந்த களிறு போல் இவள் சமையல் கூடக் கூரையின் ஓலையைத் தொட்டு நிற்கின்றனை. 
அயலானைப் போல நீயும் சென்றுவிடாமல் மணம் செய்துகொள்' என உரையாசிரியர் கருதுவது போல வரைவு கடாவுவதாகவும் அமைகிறது.
ஒரே பாடல் இருவேறு துறைக்கும் பொருந்தும் வகையில் அமைவது புலவரின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகும். சிலப்பதிகாரத்தில் மாதவியின் மடங்கல் (கடிதம்) கோவலனுக்கும் அவன் பெற்றோருக்கும் பொருந்துமாறு இளங்கோவடிகள் எப்படி அமைத்தாரோ அதுபோலவே பரணரும் அமைத்துத்திருப்பது பாராட்டத்தக்கது.  
வந்தவர்க்கெல்லாம் உணவளிக்கும் தயை அக்காலத்து இருந்ததையும் அத்தகு ஊருக்கு ஊணூர் என்றே பெயர் அமைந்திருப்பதும் இப்பாடலில் குறிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இன்றைக்கும் கிராமப்புறங்களில் பனையோலையாலாகிய இல்லங்களைக் காண முடிவது போல் அன்றும் பனையோலையால் ஆன கூடத்தை "அட்டில் ஓலை' 
எனக் குறிப்பதும் இன்று யானையைக் காட்டி யாசகம் பெறும் பழக்கம் போன்று அன்றும் யானையைக் காட்டி பிச்சையெடுக்கும் வழக்கம் இருந்ததை "பிச்சை சூழ் பெருங்களிறு' எனக் குறிப்பதும் ஈண்டு எண்ணத்தகும்.
இன்று போலல்லாமல் அன்று தலைவியை மணமுடிக்க தலைவனே பொருள் கொடுக்க வேண்டும் என்பதை "சிறுவளை விலை' என்ற சொற்றொடர் உணர்த்துவதும் குறிக்கத்தக்கது.
பரணரின் இந்நற்றிணைப் பாடல், நெய்தல் நில ஒழுக்கத்தை இருவேறு கோணத்தில் நமக்குக் காட்டி நிற்பது பாராட்டுக்குரியதாகும். சீர்செய்து தலைவியை மணம் கொள்ளும் பழக்கம் பெண்மையின் ஏற்றத்தை உணர்த்தி நிற்கிறது. தலைவன் ஒழுகும் பரத்தையர் ஒழுக்கம் அக்காலத்து ஒழுக்கக்கேடு என உணர்த்தப்படாதது குறிக்கத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com