உ.வே.சா. பதிப்பித்த தமிழ்ப் புதையல்

உ.வே.சா.வின் தமிழ் இலக்கண நிகழ்ச்சி - புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பு
உ.வே.சா. பதிப்பித்த தமிழ்ப் புதையல்

"ஐயர் இல்லையேல் தமிழில்லை; தமிழில்லையேல் ஐயர் இல்லை' என்பார்கள். அவ்வகையில் தமிழையும் உ.வே.சாவையும் பிரிக்க இயலாதென்க. தமிழில் மிகச்சிறந்த நூல்கள்

பலவுள. அவற்றுள் ஒன்று புறப்பொருள் வெண்பாமாலை. இந்நூல் இலக்கண நூலாகும்.

புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றியவர் ஐயனாரிதனார் என்னும் பெரும்புலவராவர். இந்நூல் நூற்பாக்களையும், அவற்றிற்கு இலக்கணமாக வெண்பாக்களையும், அவ்வெண்பாக்களின் கருத்தைத் தனித்தனியே புலப்படுத்த கொளுவையும் கொண்டு இயற்றப் பெற்றுள்ளது.

இந்நூலை டாக்டர் உ.வே. சாமிநாதையர் சென்னை கமர்சியல் அச்சுக்கூடத்தின் வழியாக இரக்தாட்சியாண்டு வைகாசித் திங்களில் (1924) மூன்றாம் பதிப்பாகப் பதிப்பித்துள்ளார். இந்நூலின் முதற்பதிப்பு 1895-ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 1915-ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளன. ஆனால், நமக்குக் கிடைத்துள்ள மூன்றாம் பதிப்பு இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1924) இருநூற்றுப் பதினான்கு பக்கங்களில் பதிப்பிக்கப் பெற்ற அரிய பதிப்பாகும்.

உ.வே.சா., புறப்பொருள் வெண்பாமாலையை ஒன்பது பகுதியாகப் பிரித்து வகைப்

படுத்திக் கொண்டு பதிப்பித்துள்ளார். முதல் பகுதியில், எடுத்துக்காட்டு நூல்களின் அகவரிசைப் பட்டியலும், அடுத்த பிரிவில், அவரது முகவுரையும், மூன்றாம் பிரிவில் புறப்பொருள் வெண்பாமாலையின் மூலமும் உரையும் இடம் பெற்றுள்ளன. அதற்கடுத்து ஆறுபிரிவுகளில் இடம்விளங்கா மேற்கோள் பகுதியோடு ஐந்து வகையான அகராதிக்கூறுகளும் இடம் பெற்றுள்ளன.

மேற்கூறப்பெற்ற பதிப்பு வகைப்பாட்டில் முதலாவதாக அமைந்திருப்பது எடுத்துக்காட்டு நூல்களின் அகரவரிசைப் பட்டியலாகும். இப்பட்டியலில் இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அறுபது நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இம்மேற்கோள் நூல்களின் ஒப்பீடுகளை நோக்குகின்றபோது உ.வே.சா.வின் நுண்மாண் நுழைபுலம் தெற்றெனத் தெரிகின்றது. அத்துடன் அறுபது தமிழ் நூல்களின் தோழமையும் நமக்கு உண்டாகின்றது.

உ.வே.சா. பதிப்பித்த இப்பதிப்பில், சூத்திர அகராதி, துறை அகராதி, கொளுவின் முதற்

குறிப்பு அகராதி, வெண்பாவின் முதற்குறிப்புஅகராதி, அரும்பத அகராதி ஆகிய ஐந்து அகராதிக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. நூற்பாஅகரவரிசை அகராதி உருவாக்கல் எல்லோராலும் இயலுகின்ற பணியாகும். ஆனால், உ.வே.சா.வோ, மேற்குறித்த பலவிதமான அகராதிக் கூறுகளை இப்பதிப்பில் கையாண்டுள்ளார்.

இந்த அகராதி முறைகள் பிறரால் எளிதில் செய்ய இயலாத அருஞ்செயலாகும். மேலும், நூலைப் பயில்வோர் அகராதிக் கூறுகளை மட்டும் ஆழமாகப் பயின்று விடுவார்களேயானால் நூலின் உள்ளே நுழையாமலே நூலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இஃது எப்படியெனில், கடலில் மூழ்காமலேயே முத்தெடுப்பதைப் போன்றதாகும்.

டாக்டர் உ.வே.சா. இந்நூற் பதிப்பின் முகவுரையில் (பக்: 10) "இதில் காணப்படும் பிழை

களைப் பொறுத்துக் கொள்ளும்படி பெரியோர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றேன். குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உ.வே.சா. பதிப்பித்த "பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும்' என்னும் (1935) பதிப்

பிலும், "நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும்' என்னும் (1925) பதிப்பிலும், "முதுமை, மறதி, அயர்ச்சி முதலியவற்றால் பிழைகள் நேர்ந்திருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறியவற்றை நோக்கின் உ.வே.சா., முதுமையில்கூட அயராது தமிழ்ப்பணி செய்தார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

நாளை (பிப். 19) - டாக்டர் உ.வே.சா. பிறந்தநாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com