பத்துவகை பொருள்தரும் ஒரு பாட்டு!

பத்துவகை பொருள்தரும் ஒரு பாட்டு!

ஓர் இலக்கியப் படைப்பைப் படைப்பாளன் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகவும் காரணங்களுடனும் படைப்பான். ஆனால், பல்லாண்டுகளுக்குப் பின்னர் அதனை வாசிக்கும் ஒரு வாசகன் படைப்பாளியின் நோக்கங்களைத் தாண்டியும் சிந்தித்துப் பொருள் கொள்வான்; அப்பொருள் மூலப் பனுவலை விடவும் சிறப்பாக அமைந்து விடுவதும் உண்டு .

சங்க இலக்கியங்களுக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர் முதல் இன்றைய உரையாசிரியர் பலரும் இதானாலேயே மிகுதியும் மதிக்கப்படுவதுண்டு. மூல நூலாசிரியர் எண்ணியிருந்த பொருளைக் கடந்த புதிய பொருளைச் சிலநேரங்களில் உரையாசிரியரின் பொருள் அமைந்து விடுவதுண்டு; திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை இன்றளவும் போற்றப்படுவதற்குக் காரணம் இதுதான்!

இரா. இராகவையங்கார் குறுந்தொகையின் ஒரு பாடலுக்கு எழுதியுள்ள உரை, மூலப் பனுவலுக்குப் புதிய பொருளைத் தருவதாக அமைந்திருக்கிறது. கவிதையில் சொற்களின் பயன்பாடு மிகக் கவனமாக உற்றுநோக்கப்பட வேண்டிய கூறாகும். இரா. இராகவையங்கார் தாம் உரை வரைய எடுத்துக்கொண்ட குறுந்தொகைப் பாடலில் சொற்கள் வைக்கப்பட்டிருக்கும் முறையை நன்கு உற்றுக் கவனித்துப் புதிய பொருள்களைக் கூறுவது சிறப்பான வாசிப்பு முறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

குறுந்தொகைப் பாடல் பின்வருமாறு அமைகிறது :

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறு: - 3)

இப்பாடலின் பொதுப்பொருள், "மலைப் பகுதியிலுள்ள கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களின்று தேனைச் சேகரிக்கும் வண்டுகள் நிறைந்த மலை நாட்டின் தலைவனுடன் யான் கொண்ட நட்பு இந்நிலத்தை விட அகலமானது; வானத்தை விட உயரமானது; கடலை விட ஆழமானது' என்பதாகும். இது தலைவியானவள், தலைவனைக் குறித்துத் தன் தோழியிடம் கூறியதாக அமைந்திருக்கின்றது.

தலைவன் தலைவியை வரைந்து (மணந்து) கொள்ளாமல் காலத்தை நீட்டித்துக் கொண்டே செல்கிறான். தலைவன் ஒரு குறிப்பிட்ட நாளில் தலைவியைக் காண வந்திருக்கிறான்; தக்க தருணத்திற்காக வேலிப்புறத்தே மறைந்து காத்திருக்கிறான். தலைவன் காத்திருப்பதை அறிந்த தோழி தலைவியிடம் தலைவன் வரைந்து கொள்ளாமல் இருப்பது குறித்து வருந்திக் கூறுகிறாள். அதற்குப் பதில் கூறும் முறையில் தலைவி தலைவனின் மீது தான் கொண்ட காதலின் தன்மை குறித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

இப்பாடலின் பொருளை விளக்கும் இரா. இராகவையங்கார் இச்சிறிய பாடலுக்குப் பத்து வகையான பொருள்களை வருவித்துக் கூறுகிறார்.

இப்பாடலில் உள்ள "பெரிதே', "ஆரளவின்றே', "உயர்ந்தன்று' என்ற சொற்களால் தலைவியின் காதலுணர்வின் மேன்மை அளவிட முடியாதது என்ற கருத்து பெறப்பட்டது .

நிலம், வான் , நீர் முதலிய பொருள்கள் மனித உயிர்களுக்கு நன்மை செய்வதில் ஒப்பற்றுத் திகழ்கின்றன; அதே போல் தலைவனுடன் தலைவி கொண்ட நட்பும் தலைவிக்கு ஒப்பற்ற நன்மையைத் தருவது

நிலம் , நீர், வானம் போன்றவை தனித்தனியாகப் பயன்தருவதை விட இணைந்து தரும் பயன் மிகுதி என்பதால் இவற்றை இணைத்துக் கூறினாள் தலைவி என்பது ஒரு பொருள்.

வான், நிலம், கடல் ஆகியவை இணைந்து பயன் தருகின்றன. வானமானது கடல் நீரை உண்டு நிலத்தில் மழையாகப் பொழிகிறது. மனித இனத்திற்கு இப்பொருள்கள் பயன்படுவதைப் போலத் தலைவனும் பயன்படுகிறான்.

நிலம் மக்கட்க்கு உணவை நல்குகிறது; நீர் தாகத்தைத் தணிக்கிறது; கடல் நுகர்பொருள்களான முத்து, பவளம் போன்றவற்றைத் தருகிறது. இப்பொருள்கள் மனிதனுக்கு இன்பம் தருபவை; அதே போன்று தலைவனின் நட்பும் இன்பம் தரக்கூடியது.

"கருங்கோற் குறிஞ்சி' என்பது குறிஞ்சிச் செடியின் கிளைகள் வலிமை பொருந்தியவை; எத்தகைய சுமையையும் தாங்கக்கூடியவை என்ற பொருளைத் தருகின்றன; தலைவனும் அத்தகைய வலிமை பொருந்தியவன் என்ற பொருள் தோன்றுகிறது.

குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக் கூடிய அரிய வகை மலர். தலைவியின் காதலும் அரிதானது என்பது ஒரு பொருள் .

தலைவன் தலைவி இருவரும் தனித்திருத்தலால் பயன் ஏதுமில்லை; இல்லறம் சிறக்க இருவரும் மனத்தால் இணைய வேண்டும்; அதேபோல் குறிஞ்சி மலரின் தேனும் வண்டுகளால் சேகரிக்கப்பட்டுத் தேனடையாக மாற வேண்டும் என்ற கருத்து "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும்' என்ற அடிகளில் கூறப்படுகிறது .

தலைவன், தலைவியின் காதல் பால்வரை தெய்வத்தால் உருவாக்கப்பட்டது; அதேபோல் தேனைச் சேகரித்த வண்டும் புலப்பட்டுத் தோன்றாமல் தேனைச் சேகரித்தது; தெய்வம் கண்ணுக்குப் புலப்படும்படியாக என்றும் தோன்றுவதில்லை.

நிலம், நீர், வானம் முதலியன பொய்த்தாலும் காதல் பொய்யாகப்போவதில்லை என்பதைப் "பெரிதே', "உயர்ந்தன்று', "ஆரளவின்றே' என்ற சொற்கள் உணர்த்துகின்றன .

மேற்கூறப்பட்ட பொருள்களுடன் பிறிதொரு இன்றியமையாத கருத்தையும் இரா. இராகவையங்கார் கூறுகிறார். நிலம், வான், நீர் போன்றவை குறிப்பட்ட பருவ காலத்தில் ஒன்றாக இணைந்து பயன் நல்குவதைப் போலத் தலைவனும் தலைவியும் குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இணைந்து இல்லறம் நடத்த வேண்டும் என்ற கருத்தும் குறிப்பாக உணர்த்தப்பட்டதாகக் கருத வேண்டும் என்று இரா. இராகவையங்கார் கூறுகிறார். அவரின் இந்த நயவுரை

சிந்தனையைத் தூண்டவல்லது.

குறுந்தொகையின் மூன்றாவது பாடலான இப்பாடலை எழுதிய தேவகுலத்தார் இத்தனை பொருள்களையும் மனத்திலிருத்திப் பாடினாரா என்ற வினாவிற்கு விடையில்லை. ஆனால், நன்கு சிந்திக்கக்கூடிய வாசகர் ஒருவர் இப்பாடலைப் பற்றிச் சிந்தித்துத் தனது அறிவின் திறத்தால் மூலப் பனுவலுக்கு இத்தனை பொருள்களைக் கூறியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com