ஒளவை சொன்னது அர்த்தம் உள்ளது!

அரச குடும்பத் திருமணத்திற்குச் சென்ற ஒளவையார், மணமக்களை நோக்கி "வரப்புயர' என்று வாழ்த்தியதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. எப்படி இது மணவாழ்த்தாகும்?
ஒளவை சொன்னது அர்த்தம் உள்ளது!


அரச குடும்பத் திருமணத்திற்குச் சென்ற ஒளவையார், மணமக்களை நோக்கி "வரப்புயர' என்று வாழ்த்தியதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. எப்படி இது மணவாழ்த்தாகும்?

வரப்புயர நீர் உயரும்;
நீர்உயர நெல் உயரும்;
நெல்லுயரக் குடி உயரும்;
குடிஉயரக் கோன் உயர்வான்
என்பது இந்த வாழ்த்துமொழியின் விளக்கம் என்பர்.
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு   (நல்வழி-12)

என்று உழவுத் தொழிலை உயர்த்திப் பாடிய ஒளவைதான், எல்லார்க்கும் விளங்கும் எளிய முறையில் மக்கள் மொழியில் உலகாள்கின்ற வேந்தனையும் உயரச்செய்யும் உழவின் பெருமையை இப்படி எடுத்துரைத்தார்.
புறநானூற்றில் வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் போது, "நின் போர்ப்படை தந்த வெற்றியும் உழுபடையால் உண்டாவதே' என்னும் பொருள்படப் பேசுவதைக் கேட்கலாம்.

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கில் ஈன்றதன் பயனே (35:25-26)
என்பன அப்பாடலடிகள்.
பலகுடை நீழலுந்  தங்குடைக்கீழ் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)

என்னும் திருக்குறளிலும் இதைப் போன்றதொரு கருத்தே இடம் பெற்றுள்ளது.
உழவுத்தொழிலால் நெல்லினை உடையவராகிய தண்ணளியுடைய உழவர்கள், வேந்தர் பலரின் குடைநிழலுக்கு உரியதாகிய மண் முழுதினையும் தம்மரசன் குடைக்கீழ்க் காண்பவர்கள் ஆவார்கள் என்பது இதன் பொருளாகும். 
இதனையே,

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் (10:149-50)

என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் வலியுறுத்துகின்றார்.

இங்ஙனம் செவ்வியல் இலக்கியங்களில் கற்றோர்க்கு மட்டுமே விளங்குமாறு சொல்லப்பட்டுள்ள கருத்தினை மணிச்சுருக்கமாக மக்கள் மொழியில், "வரப்புயர' என்று இரண்டு சொற்களால் சுருக்கிச் சொன்னவர் ஒளவையார். இதனை மக்களின் பேச்சு மொழியிலிருந்து தான் அவர் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு என்ன ஆதாரம்?

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்; அதில் உள்ள ஒரு பாடல், "வரப்புயர' என்பதன் விரிவு அனைத்தையும், "உலகு, ஓவாது உரைக்கும் உரை' என்று குறிப்பிடுகிறது. 

முதலிற் பாடலைப் பார்க்கலாம்.

வார்சான்ற கூந்தல்! வரம்புஉயர வைகலும்
நீர்சான்று உயரவே, நெல்உயரும்; சீர்சான்ற
தாவாக் குடி உயர, தாங்கருஞ்சீர் கோஉயர்தல்
ஓவாது உரைக்கும் உரை     (44)

"நீண்ட கூந்தலையுடைய பெண்ணே! வரப்பு உயர நாளும் நீர் நிறைந்து உயரும்; நீர் உயரவே நெல் உயரும்; நெல்லுயரப் பெருமை பொருந்திய கெடுதலில்லாத குடியும் உயரும்; குடிஉயரத் தடுக்க வியலாத அரும்பெருமையையுடைய அரசனும் உயர்வான். இது இடையீடின்றி உலகோர் உரைக்கும் உரை அல்லவா' என்பது இப்பாடலின் பொருள்.

மக்களிடம் இப்படிப் பெருவழக்காக நிலவிய பேச்சையே, "உலகு ஓவாது உரைக்கும் உரை' என்கிறார் காரியாசான்.  அவ்வுரையை ஒரு வெண்பாவில் பொன்போற் பொதிந்து வைத்தார். 

ஒளவையார், பேச்சு மொழியை அப்படியே வாய்ச்சொல்லாக வழிமொழிய, காரியாசான் மட்டும் வெண்பா யாப்புக்குத்தகச் சீரும் தளையும் சிதையாமல் அக்கருத்துகளைப் பொருத்தி ஒரு வெண்பாவாகப் பாடியிருக்கிறார்.

சிறுபஞ்ச மூலப் பாடல் ஒவ்வொன்றும் ஐந்தைந்து கருத்துகளைக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இங்கும் வரப்புயர என்பது முதல் கோன் உயர்தல் என்பது ஈறாக ஐந்து கருத்துகள் கூறப்பட்டிருப்பதால் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் இப்பேச்சு வழக்குக்குத்  தம்நூலில் இடமளித்துப் பாடினார் என்றும் தெளியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com