இந்த வாரம் கலாரசிகன் - (14-01-2024)

47-ஆவது சென்னை புத்தகக் காட்சி தற்போது நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (14-01-2024)
Published on
Updated on
2 min read

கவிதா பப்ளிகேஷன் சொக்கலிங்கம், நாதம் கீதம் புக்ஸ் முருகன் தலைமையிலான புதிய குழுவினரின் மேற்பார்வையில் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி தற்போது நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. 900 அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் என்று வழக்கத்தைவிடக் கோலாகலமாக இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை மாநகரில், ஏன் தமிழகத்திலேயே குறிப்பிடத்தக்க முக்கியமான நிகழ்வு என்றுதான் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியைக் குறிப்பிட வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் பல தமிழ் ஆர்வலர்களும், தமிழமைப்புகளும் விரும்பிப் பங்கேற்கும் நிகழ்வாக இது மாறி இருக்கிறது. இசை ரசிகர்களுக்கு சென்னை மார்கழி சங்கீத சீசனைப் போல, இலக்கிய ஆர்வலர்களின் வேடந்தாங்கல் என்று சென்னை புத்தகக் காட்சியைக் குறிப்பிட்டாலும் தகும்.

சென்னையின் மையப் பகுதியில், ஏராளமான வாகனங்களை நிறுத்துவதற்கும், ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளை அமைப்பதற்கும் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் நல்லதொரு தேர்வு என்பதில் சந்தேகமில்லை. இடவசதி என்று பார்த்தால் சரியான தேர்வு என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால், புத்தகக் காட்சிக்கு ஏற்றதோர் தேர்வா என்று கேட்டால், அதை மகிழ்ச்சியுடன் வரவேற்க இயலவில்லை.

கடந்த வாரம் மழை பெய்தபோது, ஒரு நாள் புத்தகக் காட்சியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விளையாட்டுக்கான மைதானம் என்பதால், மழை பெய்தால் சேறும் சகதியுமாக அது மாறிவிடுகிறது. புத்தகங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஆறுதலடையலாமே தவிர, புத்தகக் காட்சிக்கு வந்தவர்கள் பட்ட அவஸ்தையைச் சொல்லி மாளாது.

ஒன்று இரண்டல்ல, தொடர்ந்து 47 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த 47 ஆண்டுகளில் இதுவரை 8 முதலமைச்சர்களின் ஆட்சிகள் நடந்திருக்கின்றன. பல ஆண்டுகளாகவே, சென்னை புத்தகக் காட்சிக்காக நிரந்தரமான அரங்கு தேவை என்கிற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் அன்றைய எம்.ஜி.ஆர். அரசிலிருந்து இன்றைய மு.க. ஸ்டாலின் அரசு வரை, அது குறித்து ஒரு முடிவெடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

நல்லாட்சியின் அடையாளம் இலக்கியமும், இலக்கியவாதிகளும் போற்றப்படுவது என்பதை நமது தமிழ்ச் சமூகம்தான் உலகுக்கு முதன்முதலில் எடுத்துரைத்து பெருமை பெற்றிருக்கிறது. அதிக அளவில் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் ஏற்படவும், புதிய படைப்புகள் உருவாகவும் பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களைச் சந்தைப்படுத்த முறையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம்.

தமிழர்களின் வீர விளையாட்டு என்று ஜல்லிக்கட்டுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது அரசு; மதுரையில் பிரமாண்டமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல, புத்தகக் காட்சிக்காக நிரந்தரமான அரங்கு ஒன்றை சென்னையின் மையப் பகுதியில் நிறுவுவது என்பது இயலாததா என்ன?

48-ஆவது புத்தகக் காட்சி நிரந்தர அரங்கில் நடைபெற வேண்டும். மன
மிருந்தால் மார்க்கம் உண்டுதானே...

------------------------------------------


நீண்ட நாள்களாகவே மகாகவி பாரதியாருக்கு "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையர் உரிய மரியாதை தரவில்லை என்கிற கருத்து என்னில் நிலவியது. ஒருநாள் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை தலைவர் முனைவர் ய. மணிகண்டனின் சொற்பொழிவுக்குப் போயிருந்தேன். அந்த சொற்பொழிவில் தமிழ்த் தாத்தாவுக்கும், மகாகவிக்கும் இடையே நிலவிய பரஸ்பர மரியாதை குறித்து அவர் பேசியபோது எனக்குப் பெருமகிழ்ச்சி. தவறான கருத்தொன்று நிலைபெற்று விட்டதே என்று வருந்தி, அது குறித்து உடனடியாக "தினமணி' நாளிதழுக்கு ஒரு கட்டுரை எழுதித்தர வேண்டினேன்.

முன்னோட்டமாக அந்தக் கட்டுரை தினமணியில் வெளிவந்தது. இப்போது, அதன் விரிவான பதிவு "பாரதியும் உ.வே.சா.வும்' என்கிற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கும் வந்துவிட்டது.

பாரதியும் உ.வே.சா.வும் என்று மேலெழுந்தவாரியாகப் பதிவு செய்யாமல், அந்த இருவருக்கும் இடையேயான உறவு குறித்த விரிவான புத்தகம் இது. பாரதி வாழ்க்கையில் தமிழ்த் தாத்தா; உவேசா பார்வையில் மகாகவி; அவர்களுக்கு இடையேயான உறவு குறித்த விவாதங்கள்; அவற்றின் பின்னணியும் உண்மை நிலையும் என்று ஆய்வு நோக்கில் கடந்த நூற்றாண்டுத் தமிழின் ஆகச்சிறந்த இரண்டு ஆளுமைகள் குறித்து முனைவர் ய. மணிகண்டன் ஆழமாகவும், அகலமாகவும் உழுது, உண்மை நிலையை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இருவரும் சமகாலத்தவர்கள்; நேரடியாகப் பழகியவர்கள்; தமிழரசர் என்று உ.வே. சாமிநாதையரைத் தொடக்கத்திலேயே கொண்டாடியவர் பாரதி. பாரதியின் பேராளுமை வெளிப்படாத பருவத்திலேயே பாரதியில் இருந்த கவிஞனை அடையாளம் கண்டவர் உ.வே.சா. எனினும் பாரதியாரை உ.வே. சாமிநாதையர் அங்கீகரிக்கவில்லை என்கிற கருத்து எதனால் பரவியது என்பதற்கு விடை தருகிறது இந்த ஆய்வு.

பாரதியியலில் விடையளிக்க வேண்டிய தவறான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், வினாக்கள் என இப்படிப் பல உள. தமிழுலகில், பாரதியியலில் தெளிவுகொள்ள வேண்டிய களங்களுள் ஒன்றாகப் பாரதியையும், உ.வே.சா.வையும் மையமிட்ட களம் காட்சி தருகிறது. தெளிவுக்கு இந்நூல் வழிகோலும். பாரதியின் முழுமைகாண இந்நூல் ஆதாரபூர்வமான கை விளக்கு!

------------------------------------------


ஐரோப்பியக் கூட்டமைப்பு குடியேற்றத்தைத் தடுப்பதற்காகச் சட்டம் இயற்றி இருக்கிறது. உலகின் பல நாடுகளிலும், மண்ணின் மைந்தர்கள் புலம்பெயர்ந்து அடைக்கலம் தேடுபவர்களுக்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கி இருக்கின்றனர், அவர்களது உழைப்பால்தான் தங்களது பொருளாதாரம் வளர்ந்தது என்பதை மறந்துவிட்டு...

"காற்றில் அசைகிற காலம்' இளைஞர் அ. சுந்தர செல்வனின் முதலாவது கவிதைத் தொகுதி. அதில் இடம் பெற்றிருக்கும் இந்த ஹைக்கூ, உலகளாவிய உணர்வை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் வீட்சிக்கிறது...

"வந்தேறிகளே வெளியே போ'
ஒலித்தது குரல்
முடிந்திருந்தன
மெட்ரோ ரயில் 
வேலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com