தைத்திங்களின் தனிச்சிறப்பு!

தை என்பது நல்ல தமிழ்ச்சொல்லாகும். இச்சொல் அணி, அலங்காரம், ஒப்பனை, திங்கள் எனப்பலபொருள் குறித்த ஒருசொல்லாக இருப்பினும் "திங்கள்' என்னும் காலத்தைக் குறிக்கும் பொருளே அதற்குச் சிறப்புடைத்தென்பர்.
தைத்திங்களின் தனிச்சிறப்பு!

தை என்பது நல்ல தமிழ்ச்சொல்லாகும். இச்சொல் அணி, அலங்காரம், ஒப்பனை, திங்கள் எனப்பலபொருள் குறித்த ஒருசொல்லாக இருப்பினும் "திங்கள்' என்னும் காலத்தைக் குறிக்கும் பொருளே அதற்குச் சிறப்புடைத்தென்பர். தொல்காப்பியர் எழுத்ததிகார உயிர்மயங்கியலில் சித்திரை உள்ளிட்ட பன்னிரு திங்கள்களுள் தைத்திங்களானது ஐகார ஈற்றில் (நூற்பா, 84) முடியுமென இலக்கணவிதி வகுத்துள்ளார்.

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் உள்ளிட்ட சங்க நூல்களில் தை என்னும் திங்களைக் குறிக்கும் சொல் ஆழமாகவும் அதிகமாகவும் பதிவு செய்யப் பெற்றுள்ளது. குறிப்பாக அகப்பாடல்கள் தைத் திங்களில் தலைவனது வருகை இன்றியமையாதது என்பதை வலியுறுத்திச் சொல்கின்றது. பழந்தமிழரது குடும்ப வாழ்வில் மார்கழி நோன்பாகிய தைந்நீராடல் மிகவும் சிறப்புடையதென்க. குறிப்பாகத் தைத்திங்கள் பிறப்பு தமிழகக் கன்னிப் பெண்களின் இல்லறத் தொடக்கத்திற்கு ஏதுவான காலமாகும்.

தைத்திங்கள்விழா போகிப் பண்டிகையில் தொடங்குகின்றது. போகியை அடுத்துச் சூரியனுக்கான பொங்கல்விழா, அடுத்தநாள் கால்நடைகளுக்கான மாட்டுப் பொங்கல்விழா, அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் விழா எனப்பல விழாக்கள் தொடர்கின்றன. இவை மட்டுமல்லாமல், தைக்கார்த்திகை, தை அமாவாசை, தைப்பூசம், இரதசப்தமி போன்ற பல சிறப்பு நாள்களும் தைத்திங்களில்தான் அமைகின்றன. தமிழர்கள் தைத்திங்களில்தான் தொடர் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

தைத்திங்கள் பிறப்பு உழவர் வாழ்வில் சிறப்பென்பர். சூரிய வழிபாடு, தானிய வழிபாடு, கால்நடை வழிபாடு, உழவுக்கருவிகள் வழிபாடு, விருந்தோம்பல் பண்பாடு, பால்பொங்கிற்று எனக்கூறும் வாழ்த்தியல் பண்பாடு உள்ளிட்ட பல நற்செயல்களெல்லாம் தைத்திங்களில்தான் நிகழும்.

இந்தியாவின் குடியரசு நாள், தேசியகீதப்பாடல் அங்கீகார நாள், உழவர் நாள், திருவள்ளுவர் நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள், சென்னைப் பல்கலைக்கழகத் தொடக்க நாள் உள்ளிட்ட எத்தனையோ சிறப்பு நாள்கள் தைத்திங்களுக்கு உரியதாகின்றன.

தைத்திங்கள் தொடக்கம் இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி என்ற பெயரால் கொண்டாடப்பெற்று வருகின்றது. அஃதாவது, சூரியன் தனுர் ராசியை விட்டு மகரராசிக்குச் செல்வதை மகரசங்கராந்தி என்ற பெயரால் நாடெங்கும் விழா எடுத்துக் கொண்டாடி வருகின்றனர் இந்தியர்கள்.

உலகத்திலுள்ள அனைத்து மக்களும் ஜனவரி முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். ஜாதி, சமய, இன, நிற, மொழி, நாடு முதலான வேறுபாடுகளைக் களைந்து உலகப் புத்தாண்டு விழா கொண்டாடப்பெற்று வருகின்றது. முகமதியர்களின் (ஹிஜிரி) புத்தாண்டும் இதிலடங்கும்.

இவ்வாறு, உலக வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகிய ஜனவரித் திங்கள் (உலகப் புத்தாண்டு விழா) நம் தைத்திங்களில் அடங்கியுள்ளது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். அஃதாவது, ஜனவரி முதல் நாள் மார்கழியில் பிறந்தாலும் ஜனவரித் திங்களின் ஏனைய நாட்கள் தைத்திங்களுக்கும் உரிமை உடையது என்பது சிந்திக்கத்தக்கதாகின்றது.

சூரியன் ஓர்ஆண்டின் ஆறு மாதகாலம் வடதிசை நோக்கியும், அடுத்த ஆறு மாதகாலம் தென்திசை நோக்கியும் பயணம் செய்கின்றான். சூரியனின் வடக்கு - தெற்குப் பயணங்களை முறையே உத்தராயணம், தட்சிணாயணம் என்று பெயரிட்டு அழைப்பர். பூமி தன்னைத்தானே சுற்றுவதன்றிச் சூரியனையும் சுற்றுவதால் இக்குறிப்பிட்ட உத்தராயண, தட்சிணாயண காலங்கள் உண்டாகின்றன.

தைத்திங்கள் முதல்நாள் தொடங்கி ஆனித்திங்கள் நிறைவுநாள் வரையிலுள்ள ஆறு திங்கள் உத்தராயண காலமாகும். ஆடித்திங்கள் முதல்நாள் தொடங்கி மார்கழித்திங்கள் நிறைவுநாள் வரையிலுள்ள ஆறுதிங்கள் தட்சிணாயண காலமாகும். சூரியனின் இத்தகைய வடக்குத் தெற்குப் பயணங்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி உள்ளிட்ட பல தமிழிலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சூரியனின் இப்பயணங்களால்தான் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய பருவங்கள் உண்டாகின்றன என்பதையும் தமிழிலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

மேற்குறித்த சூரியனின் இரண்டு பயணங்களுள் வடதிசைப் பயணமாகிய உத்தராயணகாலம் தைத்திங்கள் முதல்நாள் தொடங்குகின்றது என்பது தைத்திங்களுக்குரிய கூடுதல் சிறப்பாகும். மேலும், தமிழர்கள் பல புண்ணியச் செயல்களையும், மங்கல நிகழ்வுகளையும் உத்தராயண காலத்தில்தான் தொடங்குவர். குறிப்பாகத் திருமணம், கல்வி உள்ளிட்ட பல நிகழ்வுகளை உத்தராயண காலத்தில்தான் தொடங்கவேண்டும் என்பது தமிழர் நெறியாகும். அதற்கேற்ப தற்காலத்தில் கல்வி ஆண்டின் தொடக்கம் உத்தராயண காலத்தில் (சூன்-சூலை) அடங்குவது சிந்திக்கத்தக்கது.

உத்தராயண காலத்தில் உயிர்விடுதல் நன்று என பகவத்கீதை குறிப்பிட்டுள்ளது. பாரதக் கதையில் பீஷ்மர் போரில் இறக்கின்ற நிலையில் தட்சிணாயண (மார்கழி) காலம் நிகழ்ந்துகொண்டிருந்ததாகவும், ஆதலால் அக்காலத்தில் உயிர்விடுதல் நன்றன்று எனக்கருதி தம் யோக பலத்தால் உயிரை நிறுத்தி வைத்து உத்தராயண காலம் (தை) தொடங்கிய பின் வந்த அஷ்டமி திதியில் உயிர் விட்டதாக பாரதக் கதையில் கூறப்பட்டுள்ளது.
தை மாதம் பிறந்தால் தங்கள் துயரங்கள் தீர வழி பிறக்கும் என்பது தமிழரின் நம்பிக்கை. நாளை தமிழருக்குத் தைத்திங்கள் பிறக்கப் போகின்றது; தரணியெல்லாம் தமிழர்நலம்சிறக்கப்போகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com