ஆசூர் வடகரையும் சீலமங்கைத் தென்கரையும்!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார்.
ஆசூர் வடகரையும் சீலமங்கைத் தென்கரையும்!

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்ற உண்மையை உலகத்தார்க்கு உரைத்தவர் வள்ளுவர். "நெல்லுவகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ணமுடியாது' என்பது நெல்லை மாவட்டப் பழமொழி. 

பள்ளு நூல்களிலேயே தலைசிறந்து விளங்குவதும், முதன்முதலில் தோன்றியதும் முக்கூடற்பள்ளு நூலே. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 

இந்நூலை முதன்முதலில் அச்சேற்றியவர் விருத்தாசலம் தியாகராசக் கவிராயர் ஆவார். உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை என்பது போல உழவர் பெருமக்களையே நாயக-நாயகியாகக் கொண்டு எழுந்த நூல் முக்கூடற்பள்ளு. 

தாமிரவருணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடமாகிய முக்கூடல் என்னும் ஊரை மையமாகக் கொண்டு இந்நூல் இலங்குகிறது. உழவர் பெருமகன் ஒருவருக்கு இரண்டு மனைவியர். அவர்களுக்குள் அடிக்கடி ஓரகத்தி உரசல் (சக்களத்தி சண்டை) நிகழ்வதுண்டு. 

ஒருதடவை சண்டையின்போது இருவரும் தத்தம் பிறந்த ஊரின் பெருமையை பலபட விரித்துரைக்கின்றனர். அப்போது மூத்தவள் தன்னுடைய ஆசூர் வடகரை நாட்டின் வளமையைப் பாடுகிறாள்.

இதோ அப்பாடல்:
மீது யர்ந்திடும் தெங்கிளநீரை
மிடைந்த பூகஞ்
சுமந்து தன் காயைச்
சூதமொன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதந் தன் கனி
தூங்கும் பலாவில்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்க வேசுமந்து
ஒண்குலை சாய்க்கும்
மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்
வளமை ஆசூர்
வடகரை நாடே


அதாவது, மிக உயரமாக வளர்ந்த தென்னை மரங்களிலுள்ள இளநீர் காய்களை, அதற்கிணையாக வளர்ந்துள்ள கமுகு மரங்கள் தாம் தாங்கிக் கொண்டு, தம் காய்களைத் தம்மருகே மா மரங்கள் ஒன்றி வளர்ந்து சுமந்து கொண்டிருக்கக் கொடுத்துக் கொண்டிருக்கும். 

அந்த மாமரங்களோ, தம்மிடையே தூங்கும் பருத்த மாங்கனிகளைப் பலா மரத்திலே சேர்த்து விடும். பலாக்கனியோ, அதனை யடுத்திருக்கும் வாழை மரங்கள் மீது சாய்ந்திருக்க, அதனால் வாழை மரங்கள் சற்றே வளைந்து தம்முடைய குலைகளைச் சாய்க்கும். அப்போது அதனருகே நிற்கும் மாதுளங்கொம்பு அந்த வாழைக் குலையைத் தாங்கிக் கொள்ளும். 

இவ்வாறு தன் நாட்டின் பெருமையை மூத்தவள் மொழிகின்றாள். இந்தப் பாடலில் ஓர் அரிய உண்மையைக் காணலாம். 

மரங்கள் இப்படித் தங்களுக்குள் ஒன்றன் சுமையை மற்றொன்று தாங்கிச் சுமந்து உதவுவது போலவே, அவ்வூர் மக்களும் ஒருவர் துயரை மற்றொருவர் தாங்கிச் சுமக்கும் அன்புடையவராக வாழ்ந்தனர் என்று கவிஞர் கூறுகின்றார். 
இதைவிட சமத்துவ நீதி-சமுதாய நீதிக்கு வேறு சிறந்த உவமை இல்லை என்றே கூறலாம்.

மூத்தவளுக்கு, இளையவள் சற்றும் சளைத்தவள் இல்லை. அவள், உடனே தன் ஊரான சீலமங்கைத் தென்கரை நாட்டின் பெருமையை உள்ளடக்கிய எதிர்ப்பாட்டு ஒன்றைப் பாடுகிறாள்.

பங்க யந்தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின்
பார்சடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள;ளத்
தொடு மந்த மஞ்சள்
அங்கசை ந்திடும் காய்கதிர்ச் செந்நெல்
அளாவி நிற்குமச்
செந்நெலு மப்பால்
செங்க ரும்புக்குக் கைதரும் போல்வளர்
சீவல மங்கைத்
தென்கரை நாடே
என்பதுதான் அப்பாடல்

இப்பாடலின் பொருள்: தாமரை மலரானது தன் தலையை நீட்டி வரப்பிலே வளர்ந்திருக்கும் இஞ்சியின் பச்சை இலையான பெரிய சடையினைத் தடவிக் கொடுக்கும். அங்கே வளர்ந்துள்ள இஞ்சியோ, தனக்கு அருகேயிருக்கும் மஞ்சளின் கழுத்தை மெல்லத் தழுவியவாறே தடவி விடும். 
அந்த மஞ்சளோ, அருகே அசைந்தாடி நிற்கும் செந்நெற் பயிர்களுடன் அளவளாவி இருக்கும். அந்த செந்நெல் பயிர்களோ, அதனையடுத்து வளர்ந்திருக்கும் செங்கரும்புக்குக் கைகொடுத்து நிற்கும். 

இப்படி ஒவ்வொன்றும், ஒன்றுக்கொன்று ஆதரவாக வளருகின்ற செழுமையுடையது எம் சீவலமங்கைத் தென்கரை நாடே யாகும் என்று பெருமிதப் பட்டாள் இளையவள். 

மூத்தவள், ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களின் ஒட்டுறவைக் குறிக்கிறாள். இளையவளோ வயல் வளத்தோடு ஒட்டி உறவாடும் பல்வகைச் செடி கொடிகளை முன்னிறுத்திப் பாடுகிறாள். 

இப்பாடலிலும் ஒற்றுமை, சமூகநீதி, சமுதாய நீதி ஆகியன ஊடும் பாவுமாக, உள்ளுறைப் பொருளாக மிளிர்வதைக் காணலாம். 

இவ்விரு பாடல்களும் பெயர் தெரியாத அந்தக் கவிஞரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன எனலாம். "காய்மாண்ட தெங்கின் பழம் வீழ' என்று தொடங்கும் சீவகசிந்தாமணிப் பாடலை இவ்விரு பாடல்களுக்கும் முன்னோடியாகக் கொள்ளலாம். 

ஆனால், சீவசசிந்தாமணிப் பாடலில், மரங்கள் அருகருகேயுள்ள மரங்களைத் தாக்கி உருக்குலையுமாறு செய்து விடுகின்றன. ஆனால் முக்கூடற்பள்ளு பாடல்களில் அருகருகேயுள்ள மரங்கள் ஒன்றையொன்று தாங்குவதுடன், உறுதுணையாகவும் இருக்கும் நயத்தினைப் படித்து மகிழ்வோமாக! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com