இந்த வாரம் கலாரசிகன் - (21-01-2024)

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கம்பன் விழாவுக்காகப் புதுவை சென்றிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (21-01-2024)

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கம்பன் விழாவுக்காகப் புதுவை சென்றிருந்தேன். வழக்கம்போல, பெரியவர் சுந்தர. லெட்சுமி நாராயணனின் உபசரிப்பிலும் அன்பு மழையிலும் நனைந்தபடி ஹோட்டல் ஜெயராமில் தங்கி இருந்தேன். பேராசிரியர்கள் அழகுநம்பி, அறிவுடை நம்பி ஆகியோர் நம்மிடையே இருந்த காலம் அது. 

கம்பன் கழக விழா நிகழ்ச்சிக்குப் போய்விட்டு, நண்பர் கிருங்கை சேதுபதி, அப்போது தினமணி நிருபராக இருந்த குப்பன் உள்ளிட்டவர்களுடன் எனது அறைக்குத் திரும்பி இருந்தேன். பெரியவர் சுந்தர. லெட்சுமி நாராயணனும், ஏனைய புதுச்சேரி தமிழறிஞர்களும் இணைந்து கொண்டனர். அப்போது போடப்பட்ட விதைதான் "புதிமம்' என்கிற புதுவைத் திருக்குறள் மன்றம். 

ஒட்டுமொத்தத் தமிழினமே வியந்து பார்க்கும் புதுவைக் கம்பன் கழகத்தின் விழாவைப்போல, ஏன் வள்ளுவருக்குப் புதுவையில் விழா எடுக்கப்படவில்லை என்கிற கேள்வியில் இருந்து பிறந்ததுதான் "புதிமம்'. பெரியவர் சுந்தர. லெட்சுமி நாராயணன் ஒன்றை மனத்தில் இருத்திவிட்டால், அது நிறைவேறும்வரை ஓயமாட்டார் என்பதற்கு "புதிமம்' ஓர் உதாரணம். அடுத்த சில மாதங்களில் "புதிமம்' தனது தொடக்க விழாவை நடத்திப் புதுவையில் கால் பதித்து விட்டது.
கடந்த வியாழனன்று "புதிமம்' அமைப்பின் 12-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளப் புதுவை சென்றிருந்தேன். மாலை நேர நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்படும் "புதிமம்' ஆண்டு விழா இனிமேல் குறைந்தது ஒருநாள் நிகழ்ச்சியாகவோ அல்லது இரண்டு நாள் மாநாடாகவோ நடத்தப்பட வேண்டும் என்கிற எனது கோரிக்கையை உடனடியாக ஆமோதித்து அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு விட்டார் புதுவை கம்பன் கழகச் செயலாளரும், புதுவை சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான சிவக்கொழுந்து.

அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் குன்றக்குடி ஆதீனத்தின் அன்றைய ஆதீனகர்த்தர் பிரம்மாண்டமாக நடத்தும் திருக்குறள் மாநாடுகளில், கல்லூரி மாணவனாக நான் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். அதுபோன்ற எழுச்சி மீண்டும் உருவாகாதா என்று நான் மட்டுமல்ல, என் வயதொத்த தமிழார்வலர்கள் பலரின் ஏக்கத்திற்கான விடை, நண்பர் சிவக்கொழுந்தின் மூலம் கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
புதுவை கம்பன் விழா போல, பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் "புதிமம்' சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட வேண்டும்  என்பதற்காக மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிகளைப் பெரியவர் சுந்தர. லெட்சுமி நாராயணனுடன் பார்வை
யாளர்களில் ஒருவனாக அமர்ந்து பார்த்தும், கேட்டும் மகிழ வேண்டும் என்பதற்காகவும் காத்திருக்கிறேன்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். - குறள்: 518

-----------------------------------------------------------------


"புதிமம்' அமைப்பின் 12-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளப் புதுவை சென்றிருந்தபோது, யாரோ ஒருவர் எனக்குப் பரிசாக அளித்த புத்தகம் முனைவர் ஆ.மணியின் "திருக்குறள் - முதல் பதிப்பு'. 

புத்தகம் வழங்குபவர்கள், மறக்காமல் தங்களது பெயரையும், தொடர்பு எண்ணையும் எழுதி, தேதியுடன் கையொப்பமிட்டுக் கொடுப்பதை வழக்கமாக்க வேண்டும். அப்போதுதான் இன்னார், இன்ன தேதியில், இந்த நிகழ்ச்சியில் நமக்குத் தந்த புத்தகம் என்று தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, பெறப்படுகிறவரின் பெயரை எழுதி மறக்காமல் கையொப்பமிட்டுக் கொடுக்கும் புத்தகத்தை அசிரத்தையாகக் கையாள மாட்டார்கள். முடிந்தவரை பாதுகாப்பார்கள்.

முனைவர் ஆ.மணி இதுவரை 40 ஆய்வு நூல்களைத் தமிழுக்கு வழங்கிப் பெருமை சேர்த்திருக்கிறார். செம்மொழித் தமிழாய்வுக்காக 2013-இல் குடியரசுத் தலைவரின் "இளம் அறிஞர்' விருது பெற்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்டால் பாராட்டப்பட்டவர். பயிற்றுவித்தலையும் ஆய்வையும் தவமாகக் கொண்டு இயங்கும் தகைசால் பேராசிரியர் முனைவர் ஆ.மணி.

பழந்தமிழ் நூல்களில் முதல்முறையாக அச்சுவாகனம் ஏறிய பெருமை திருக்குறளுக்கு உண்டு. 1794 இல் திருக்குறள் வீரமாமுனிவரால் மொழிபெயர்க்கப்பட்டு கிண்டர்ஸ்லியால் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், திருக்குறளை முதல் முறையாகத் தமிழில் பதிப்பித்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் என்பதைப் பதிவு செய்கிறது முனைவர் ஆ.மணியின் இந்த நூல். 1812-இல் இரண்டு பகுதிகளாக அம்பலவாண கவிராயர் வெளியிட்ட பதிப்பு திருக்குறள் மட்டுமல்லாமல், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகிய மூன்றும் ஒருசேர இடம்பெற்றதாக அமைந்திருந்தது.

"இக்காலத்தில் நூன்முகம், பதிப்புரை, பொருளடக்கம் இல்லாமல் வருகின்ற நூல்களைக் காணமுடிகின்றது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அம்பலவாண கவிராயர் பதிப்பில் முறையாக பதிப்புரை, வரலாறு எழுதும் மாண்பினைக் காண்கிறோம். ஓலைச் சுவடிகளைத் தொகுக்கும்போது உடனிருந்தவர்களையும் நன்றி மறவாமல் குறிக்கிறார். அது மட்டுமல்லாமல், மூலபாட ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு பதிப்பித்திருக்கிறார்' என்கிறார் முனைவர் ஆ.மணி.

அம்பலவாண கவிராயர் பதிப்பில் தரப்பட்டிருக்கும் வரிக் கையட்சரத் தொகை அட்டவணை போன்று, இதுகாறும் வெளிவந்திருக்கும் திருக்குறளின் நூற்றுக்கணக்கான பதிப்புகள் எவற்றிலும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், முதல் பிரதியில் பல பிழை திருத்தங்களுக்குப் பிறகுதான் அச்சேறி இருக்கிறது அந்த முதல் பதிப்பு என்பது மட்டுமல்ல, அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூல பாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது இந்த நூல்.
அம்பலவாண கவிராயர் 1812-ஆம் ஆண்டில் பதிப்பித்த திருக்குறள் புத்தகம் குறித்த இன்னொரு வியப்பான செய்தியும் உண்டு. 1835-ஆம் ஆண்டு வரை அச்சுத்தடைச் சட்டம் இருந்திருக்கிறது என்பதுதான் அது. அதையும் மீறி அவர் பதிப்பித்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசு அதைக் குற்றமாகக் கருதி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

-----------------------------------------------------------------


காலச்சுவடு இலக்கிய இதழ் 2024 புத்தகக் காட்சி சிறப்பிதழ் வெளிக்கொணர்ந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கிறது இந்தக் கவிதை. காஸாவில் வசிக்கும் ஆங்கிலத்திலும், அரபி மொழியிலும் எழுதும் கவிஞர் மொஸாப் அபு தோஹா. அவரது "காஸாவில்...' என்கிற கவிதை இது.

காஸாவில்
மூன்று கால்களால் நடக்கிறோம்
வலக் கால்
இடக் கால்
அச்சக் கால்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com