அன்னம் இடார்க்கு அருளில்லை

திருத்துருத்தி இந்திரபீடம் தவத்திரு கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் ஈசூர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் திருவடித் தொண்டரும், 39-ஆவது பட்டாளம் சுபேதார் மேஜராயிருந்த ஆத்மஞானி தவத்திரு அய்யாக்கண்ணு
அன்னம் இடார்க்கு அருளில்லை

திருத்துருத்தி இந்திரபீடம் தவத்திரு கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் ஈசூர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் திருவடித் தொண்டரும், 39-ஆவது பட்டாளம் சுபேதார் மேஜராயிருந்த ஆத்மஞானி தவத்திரு அய்யாக்கண்ணு தேசிக மூர்த்திகளின் அன்பு மாணவருமாகிய, தே.அ. சாமிகுப்புசாமியால் இயற்றப்பெற்ற நூலே, அன்னதான விளக்கம் என்னும் அரியபெரிய அமுதநூலாகும். 

இந்நூலை மகாவித்துவான் கோ. வடிவேலு செட்டியாரவர்கள் பார்வையிட, சென்னை கோமளேசுவரன் பேட்டையிலுள்ள சச்சிதானந்த அச்சியந்திரச் சாலையினர் 1918- ஆம் ஆண்டில் பதிப்பித்து வழங்கியுள்ளனர்.

நூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பெற்ற அன்னதான விளக்கம் என்னும் இந்நூலை இக்காலத் தமிழுலகிற்குத் திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த குணவானாகிய நல்லாசிரியப் புலவர் வே. சுந்தரகணேசனார் என்னும் நல்லார் தமது மாதொரு பாகனார் அறக்கட்டளை வழியாகப் பதிப்பித்து (2021) வழங்கியுள்ளார். 

மேற்படி நூலாசிரியர் தே.அ. சாமிகுப்புசாமி என்பவரது பிறப்பு, இளமை, உள்ளிட்ட  வாழ்வியல் குறிப்புகளைத் தெரிந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும், இந்நூலின்கண் பல அறிஞர்களால் இயற்றப்பெற்ற சாற்றுகவிகளைக் கொண்டு ஆராய்தோமானால் இவர் இந்நூலை இயற்றிய காலத்தில் சென்னையில் வாழ்ந்துள்ளார் என்பது மட்டும் தெரிய வருகின்றது.

இந்நூல் நூல்வகைப் பாக்களில் வெண்பா வகையில் பாயிரப்பாடல் பத்துடன் சேர்த்து நூற்றியறுபது வெண்பாக்களால் இயற்றப் பெற்றுள்ளது. 

செப்பலோசை தெளிக்கும் இவ்வெண்பா நூலிற்குக் கோவை பூ.சா.கோ. மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சிவத்திரு கு.சோ. முருகன் அரிய உரையெழுதிச் சிறப்பித்துள்ளார். சுருங்கக்கூறின், பண்டு தோன்றிய பழந்தமிழ் நூலொன்று பக்குவமாய் உயிர்பெற்றள்ளது. 

நூலாசிரியர் நூலைத் தொடங்கும் போதே பிறருக்கு அன்னமிட்டு உண்ணாதவர்களின் வீடு வீடாகாது என்றும் அது சுடுகாடாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அவர், அன்னம்இடார் இல்லம் அடவிஇடுகாடு (பாடல் 1) என்று குறிப்பிட்டுள்ளார்.

பசித்தவர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் உலகம் புகழும் வாழ்வு பெறுவார்கள் (பாடல்: 45) என்றும், சோறு சோறு என்று நாள்தோறும் பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் இடுதலே உண்மைப்பேறு என்று வேதங்கள் கூறுவதால் அன்னதானம் செய்வாயாக (பாடல்: 51) என்றும், பல பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால் மட்டும் பாவம் போகாது என்றும், அன்னதானம் செய்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கும் (பாடல்: 67) என்றும் பதிவிட்டுள்ளார்.

பெரியபுராணத்தில் இளையான்குடி மாறனார் அன்னமிட்ட வரலாற்றை நாமெல்லாம் படித்தின்புற்றோம். அக்குறிப்பையும் மாறனாரின் விருந்தோம்பல் சிறப்பையும் நூலாசிரியர் மூன்று (36,131,132) பாடல்களில் பதிவுசெய்துள்ளார். இளையான்குடிமாறனார் பசியால் வந்தவர்களுக்கு அன்னமிட்டு, விருந்தோம்பி அதன் பொருட்டுச் சிவப்பேறு அடைந்தார் என்றும், ஆதலால் உலகீரே அன்னமிடுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.    

  
உயிர்களுக்கு உணவின் இன்றியமையாமையை உணர்த்தவே நமது முன்னோர்கள் இறைவனுக்கு அன்னத்தால் அபிடேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். 

இம்மரபு தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. இம்மரபை நன்குணர்ந்த நூலாசிரியர், அன்னம் அரன் உருவமாம் (பாடல்: 6) என்றும், பரன் உருவம் அன்னவடிவு  (பாடல்: 7) என்றும் பாடிப் பணிந்துள்ளார். மேலும், அன்னம் இடாதவருக்கு இறைவன் அருள் ஒருபோதும் கிடைக்காது என்பதை அன்னம் இடார்க்கு அருள் இல்லை (பாடல்: 8) என்றும் சாடியுள்ளார். இவ்வாறு நூல்முழுதும் அன்னதானச் சிறப்புகள் பதியப்பட்டுள்ளன. 

அப்புண்ணியச் செயலை மனிதராகப் பிறந்த அனைவரும் உறுதியாகச் செய்ய வேண்டும் என்பது இந்நூலாசிரியரின் நோக்கமாகும். ஆதலால், நாம் நூலாசிரியர் நோக்கப்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com