
தவறான காரணங்களுக்காகக் கள்ளக்குறிச்சி இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், அதன் பெயர் கல்லக்குறிச்சி என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது என்னவோ, தமிழுக்கு அப்படியொரு உச்சரிப்பு சாபக்கேடு. க"ள்' க"ல்'லாகவும், க"ல்' க"ள்'ளாகவும் உச்சரிக்கப்படுகிறது.
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செ.வ.மதிவாணனின் கடிதமும், மணிவிழா மலரும், அவர்களது தமிழ்ச் சங்கம் குறித்த விவரங்களும் அனுப்பித் தரப்பட்டிருந்தது. "கள்ளக்குறிச்சி வீதிகளில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது' என்று பரபரப்பாக பேசப்படுவது தவறு; இங்கே "வீதிதோறும் குறள் முழக்கம்தான் கேட்கிறது' என்று சொல்லாமல் சொல்கிறது மதிவாணனின் கடிதம்.
1962-இல் புலவர் செ.வரதராசனாரால் தொடங்கப்பட்ட அமைப்பு "கல்லைத் தமிழ்ச் சங்கம்' வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் திருக்குறள் தொடர் வகுப்புகள் நடத்துவது என்பது அதன் நோக்கங்களில் ஒன்று. 1962-இல், "முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் "மாணவர் திருக்குறள் மாநாடு' நடத்தியதில் தொடங்குகிறது கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பணி.
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் பணிகள் குறித்து மதிவாணன் அனுப்பி இருக்கும் தகவல்களைப் படித்தபோது பிரமிப்பு மேலிட்டது. திருக்குறள் வகுப்புகள் மட்டுமல்லாமல், இலக்கண வகுப்புகளையும், சங்க இலக்கியத் தொடர் சொற்பொழிவுகளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சான்றோர்களை வரவழைத்து நடத்துகிறார்கள். கவிதை இயற்றும் பயிற்சி வகுப்புகள், வெண்பா போட்டிகள் நடத்துவதுடன் "குறள் மணம்' என்கிற திங்கள் இலக்கிய இதழும் புலவர் செ.வரதராசனாரால் நடத்தப்பட்டு வந்தது.
கள்ளக்குறிச்சி நகரில் பள்ளிகளின் நுழைவு வாயில், நகராட்சி அலுவலக நுழைவு வாயில் என்று அனைவரின் பார்வைபடும் இடங்களில் "திருக்குறள் பலகைகள்' நிறுவப்பட்டுள்ளன. நாள்தோறும் குறள் பாக்களையும், அதற்கான பொருளையும் எழுதி வருகிறார்கள்.
அவரது கடிதத்தில் இருந்து நான் இன்னொன்றையும் தெரிந்துகொண்டேன். யாராவது இலக்கியப் பணியில் ஈடுபட்டால், அந்த ஜுரம் மற்றவர்களையும் பற்றிக்கொண்டு அவர்களது இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதுதான் அது.
கல்லைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடர்ந்து சங்கைத் தமிழ்ச் சங்கம், கல்லை கண்ணதாசன் மன்றம், சின்னசேலம் தமிழ்ச் சங்கம், விருகாவூர் தமிழ்ச் சங்கம், தியாக துருகம் கம்பன் கழகம், கல்லக்குறிச்சி கம்பன் கழகம் என்று பல இலக்கிய அமைப்புகள் விழுதுவிட்டுப் படர்ந்திருக்கின்றன.
புலவர் செ.வரதராசனார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் போட்ட விதை இப்போது கள்ளக்குறிச்சியை, இலக்கிய அமைப்புகளின் நகரமாக மாற்றி இருக்கிறது. தமிழ் செழிக்கும் நகரத்தில், நச்சுப் பயிராக கள்ளச்சாராயம் புகுந்து பெயரைக் கெடுத்திருக்கிறதே. "கள்ளக்குறிச்சி என்பதை கல்லக்குறிச்சி' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதன் பெயரில்கூடக் "கள்' இருக்கக்கூடாது!
-----------------------------------------------------------------------------------
சமய இலக்கியங்களில் சித்தர் பாடல்களுக்கு என்று தனி இடமுண்டு. திருமுறைகளில், திருமூலர் சேர்க்கப்பட்டிருப்பதுபோல ஏனைய சித்தர்கள் சிறப்பு பெறவில்லை. ஆனால், அவர்களது பாடல்கள் பல அன்றாட பயன்பாட்டில் இடம்பெறுகின்றன.
"சித்து' என்பதற்கு "நிறைவு' என்று பொருள். "சிவத்தைக் கண்டவர் சித்தர்' என்பது திருமூலர் கூற்று என்றால், "சிந்தை தெளிந்திருந்தால் அவனே சித்தர்' என்றார் வால்மீகர்.
சித்தர்கள் யோக சாதனையால் இறவாமையுற்றவர்கள்; பூரணத்தை அடைந்தவர்கள்; மூச்சைக் கட்டுப்படுத்தி, மோகத்தை வென்று, ஆசைகளை அகற்றிக்கொண்டு, தங்களை இறைநிலைக்கு வளர்த்துக் கொண்டவர்கள். வேதங்களை, சாத்திரங்களை எல்லையாய் கொள்ளாமல், அவற்றுக்கும் அப்பால் சென்றவர்கள். அவர்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல், வைத்தியத்திலும் தேர்ந்தவர்கள். அதனால்தான், "சித்த மருத்துவம்' உருவானது.
தமிழ் மரபு "பதினெண் சித்தர்' என்கிறது. வடநாட்டு சம்பிரதாயம், 84 சித்தர்கள் என்கிறது. "பதினெட்டு' என்பது, பதினெட்டு சித்தர்களைக் குறிக்கவில்லை; பதினெட்டு சித்திகள் பெற்றவர்களைக் குறிக்கிறது என்று சொல்வாரும் உண்டு. சித்தர்களின் வாழ்வு, காலம் பற்றி நமக்கு கிடைக்கும் ஆதாரங்கள் மிக மிகக் குறைவு.
முழுமையான சித்தர் பாடல் தொகுப்பு என்று எதுவும் இல்லை. அவர்களைப் போலவே அவர்களுடைய பாடல்களும் எந்த வரையறையிலும் உட்படுத்த முடியாதவை. தங்களுடைய பாடல்களை ஒப்பனையற்ற கடுமையான மொழியில் அவர்கள் எழுதி வைத்தனர். வாய்வழியாகப் பகிரப்பட்டு, ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, பல கைகள் மாறிமாறி பல தலைமுறைகள் கடந்த நிலையில், அவற்றில் இடைச்செருகல் அதிகமாகக் காணப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
20-ஆம் நூற்றாண்டில்தான் சித்தர் பாடல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. தஞ்சை சரஸ்வதி மகால், பழனி தேவஸ்தானம், இங்கிலாந்து அருங்காட்சியகம், மேலை நாட்டு நூலகங்கள் என்று அவை சிதறிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முழுமையாகத் தேடிப் பிடித்துத் திரட்டினால்தான் "சித்தர் பாடல்கள்' முழுமையான செம்பதிப்பாய் நமக்குக் கிடைக்கும்.
"பெரிய ஞானக்கோவை', "சித்தர் ஞானக்கோவை', "சித்தர் பாடல்கள்' என்று பல்வேறு தலைப்புகளில் காணப்படுவதால், சித்தர் பாடல்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டன. "அழகர் நம்பி' என்கிற புனைபெயரைத் தாங்கிய சி.எஸ்.தேவநாதன், சித்தர்கள் குறித்துப் பல்வேறு ஆய்வுகளை நடத்தியவர். அவர் 34 சித்தர்கள் பற்றிய விவரங்களுடன், அவர்களது பாடல்களைப் பொருள் விளக்கத்துடன் "சித்தர் பாடல்கள்' என்கிற தலைப்பில் தொகுத்திருக்கிறார்.
கடுமையான உழைப்பின் பயனால் உருவாக்கப்பட்டு இருக்கும் நல்லதொரு தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------
"மலர் மேலே மழைத்துளி' சாந்தி சரவணனின் முதல் ஹைக்கூ கவிதை நூல். விமர்சனத்திற்கு வந்திருந்தது. இணையதளத்தில் இயங்கும் இந்தக் கவிதாயினி, கவிதைத் தொகுப்புடன் களமிறங்கி இருக்கிறார் என்று அவரது "என்னுரை' அறிவிக்கிறது. அதிலிருந்த இந்தக் கவிதைக்குத் தனியாக விளக்கம் தேவையில்லை.
நானும் தங்கையும்
கருப்பு வெள்ளை
புகைப்படமாக
அப்பாவின் டைரியில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.