இந்த வாரம் கலாரசிகன் - (07-07-2024)

நாமக்கல்லில் சிலம்பொலியாருக்கு மணிமண்டபம்: கலாரசிகன் அனுபவம்
இந்த வாரம் கலாரசிகன் - (07-07-2024)

எனது ஓர் ஆதங்கம் சமீபத்தில் தீர்ந்தது. நாமக்கல்லில் அமைக்கப்பட்டிருக்கும் சிலம்பொலியாருக்கு முழு உருவச் சிலையையும், மணிமண்டபத்தையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நாமக்கல் ட்ரினிடி மகளிர் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். கூடவே நாமக்கல் கவியரசு கண்ணதாசன் மன்றத்தின் சார்பில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கத்துக்கு கவியரசு கண்ணதாசன் விருது வழங்கும் விழாவும் நடந்தது. அதற்கும் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

ஒவ்வொரு ஊரிலும் யாராவது ஒருவர் அல்லது ஒரு சிலர் தங்களை இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அற்புதத்தை நமது தமிழகத்தில்தான் பார்க்க முடியும். அவர்களது ஆர்வமும் முனைப்பும்தான் ஊருக்கு ஊர் திருக்குறள் மன்றங்களாக, கம்பன் கழகங்களாக, இலக்கியப் பேரவைகளாக, தமிழ்ச் சங்கங்களாக செயல்படுகின்றன.

நாமக்கல் மாநகருக்குக் கிடைத்திருக்கும் வரம் முனைவர் அரசு பரமேசுவரன். நாமக்கல் நகரில் என்னவெல்லாம் இலக்கிய அமைப்புகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் இயக்குவது முனைவர் அரசு பரமேசுவரனின் ஓய்வு, ஒழிவு இல்லாத தமிழ்ப்பற்று. அவருக்குக் கிடைத்திருக்கும் வரம் என்னவென்றால், நாமக்கல் நகரில் இருக்கும் தமிழ்ப் புரவலர்கள்.

மருத்துவர் குழந்தைவேல், ட்ரினிடி மகளிர் கல்லூரி செயலாளர் செல்வராஜ், கே.நல்லுசாமி, பி.பழனிசாமி, டி.சந்திரசேகரன், ராமசீனிவாசன், நாமக்கல் கம்பன் கழகச் செயலாளர் வ.சத்தியமூர்த்தி, டாக்டர் செழியன் என்று ஒரு மிக நீளமான பட்டியலே போடலாம். நாமக்கல்லில் முனைவர் அரசு பரமேசுவரன் அடுத்தாற்போல என்ன இலக்கிய நிகழ்வை ஒருங்கிணைக்க இருக்கிறார் என்று மேலே குறிப்பிட்ட புரவலர்கள் காத்திருப்பார்கள்.

முனைவர் அரசு பரமேசுவரன் தனது முனைவர் பட்ட ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தது கவிஞர் வாலியின் கவிதைகளை. அதனால்தான் கவிஞர் வாலியின் "பாண்டவர் பூமி' வசன கவிதையை, "பூமி எழுதிய புதுக்கவிதை' என்கிற தலைப்பில் விஸ்தாரமாக (விரிவாக) அலசி ஆராய்ந்திருக்கிறார். நான் "விஸ்தாரமாக' என்கிற சொல்லை பயன்படுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு.

கவிஞர் வாலியின் வசன கவிதை உத்தியின் சிறப்பே மணிப்பிரவாளம்தான். மணியும் பவளமும் கலந்து கோத்த மாலை போன்று, தமிழும் வடமொழியும் கலந்ததுதான் மணிப்பிரவாளம் என்பது. அது குறித்து தமிழண்ணல் குறிப்பிடுகையில், 'மணி } தமிழ்ச் சொல்; பிரவாளம் (பவளம்) } வடசொல். இதுபோல இருமொழிச் சொற்களையும் கலந்து எழுதுவது அழகாக இருக்கும் என சமணர்களாலும் பின்பு வைணவ உரையாசிரியர்களாலும் பின்பற்றப்பட்டது'' என்பார்.

புதுக்கவிதையின் முதல் படிநிலை வளர்ச்சி என்று வசன கவிதையைக் குறிப்பிடும் முனைவர் அரசு பரமேசுவரன், "பாண்டவர் பூமி' என்கிற கவிஞர் வாலியின் வசன கவிதை காவியத்தை எடுத்துக்கொண்டு ஒரு விரிவான ஆய்வை நிகழ்த்துகின்றார். "வசன கவிதைக் கலை' என்று தொடங்கி அதன் உத்திகள், உத்தி வகைகள் என விளக்கி, பாரதியையும் வாலியையும் அதாவது பாஞ்சாலி சபதத்தையும், பாண்டவர் பூமியையும் ஒப்பிட்டு முனைவர் அரசு பரமேசுவரன் படைத்திருக்கும் நூல்தான் "பூமி எழுதிய புதுக் கவிதை'. ஏராளமான புதுத் தகவல்களுடன், சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் ஒப்பாய்வு.

---------------------------------------------------------------------------------------------------------

நெல்லை மாவட்டத்தில் இலக்கியத் திருவிழாவையும் புத்தகத் திருவிழாவையும் உள்ளடக்கி பொருநை விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவையொட்டி கடந்த நூற்றாண்டில் தொடங்கி இப்போது வரையிலான ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகளைத் தொகுத்தால் என்ன என்கிற சிந்தனை எழுந்தது. அந்த சிந்தனைக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் நாறும்பூநாதன்.

தனது எண்ணத்தை ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயனுடன் பகிர்ந்துகொண்டபோது அவரது ஊக்கமும் இணைந்து முன்மாதிரியான அற்புதத் தொகுப்பொன்று தமிழுக்குக் கிடைத்திருக்கின்றது. அதன் பெயர் 'நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்'.

மகாகவி பாரதியார், வ.வே.சு.ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன் என்று தொடங்கி ஆகச் சிறந்த எழுத்தாளுமைகள் பலர் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து படைப்பாளிகளை வழங்கும் பொருநை நதிக்கரையில் தோன்றியிருக்கும் கதைசொல்லிகளின் பட்டியல் நூற்றுக்கணக்கில் நீளும்.

71 படைப்பாளிகளின் தேர்ந்தெடுத்த கதைகளை கதம்ப மாலை தொடுப்பதுபோல தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் நாறும்பூநாதன் தலைமையிலான குழுவினர். இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது தமிழ் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியைப் பருந்துப் பார்வை பார்க்க முடிகிறது.

---------------------------------------------------------------------------------------------------------

புதுமைப்பித்தன், உமாசந்திரன், வல்லிக்கண்ணன், மீ.ப.சோமு, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தொ.மு.சி.ரகுநாதன், ர.சு.நல்லபெருமாள், தோப்பில் முகமது மீரான், வண்ணநிலவன், மாலன், சோ.தர்மன், தமயந்தி ஆகியோர் எழுதி இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் நான் ஏற்கெனவே படித்து ரசித்தவை. ஏனைய கதைகளைப் படிக்க இந்தத் தொகுப்பு வாய்ப்பாக அமைந்தது.

நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டு சிறுகதைகள்போல, தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் பேசும் உலகின் பிற பகுதிகளிலும் வெளியான ஒரு நூற்றாண்டு சிறுகதைகள் தொகுக்கப்பட வேண்டும். அவை வருங்கால இலக்கிய ஆய்வுகளுக்கு அடிப்படைத் தரவுகளாக இருக்கும்.

விமர்சனத்திற்கு வந்திருந்தது சுந்தர. மகேஸ்வரியின் "வாய்விட்டுச் சிரித்தார் புத்தர்' என்கிற கவிதைத் தொகுப்பு. 'நாள் முழுக்க சைக்கிள் தள்ளி வீடு வருகிற அப்பாவின் வியர்வை வாசமும், மஞ்சள் தேய்த்துக் குளித்து நெற்றியில் ஏற்றிப் பொட்டு வைத்த அம்மாவின் பழைய முகமும் எப்போதெல்லாம் பூத்து மேலெழும்புகிறதோ அப்போதெல்லாம் கவிதை செய்ய நினைத்த நான், தாயானவுடன் என் மகளுக்கான கவிதைகளை நெய்யத் தொடங்கினேன்'' என்கிறது அவரது என்னுரை.

அதிலிருந்த ஒரு கவிதை என்னைத் திடுக்கிட வைத்தது. படித்தவுடன் எனக்குள் குற்ற உணர்வு மேலோங்கியது. என் மகளிடம் வாசித்துக் காட்டினேன். கலகலவென்று சிரித்தாள். அந்த சிரிப்புக்கு அர்த்தம் தேடினேன். சுந்தர. மகேஸ்வரியின் கவிதை வரிகள்தான் அர்த்தம்.

உனக்காகப் புத்தகம்

சேர்க்கும் அப்பாவிற்கு

உன்னை வாசிக்க

நேரமில்லைதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com