ஆழ்வார்கள் அருளிச்செயலில் இராமசரிதக் குறிப்புகள் நிறையவே உண்டு. எனவே அவற்றையெல்லாம் நிரல்படத் தொகுத்து, "திவ்வியப் பிரபந்தப் பாசுரப்படி இராமாயணம்' என்னும் சிறுநூலினை வழங்கினார் வைணவ உரையாசிரியர்களுள் ஒருவரான பெரியவாச்சான் பிள்ளை. கி.பி. 13}ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் இவர்.
பெரியாழ்வார் பாடிய திருமொழிப் பாசுரம் ஒன்றில் இராமன் வனவாசம் சென்ற செய்தியைப் பின்வருமாறு பேசுகிறார். பெண்கள் இருவர் ஒருவர்க்கொருவர் எதிர்நின்று, "உந்திபற'ப்பதாகப் பேசும் முறையில் அமைந்த பதிகம் அது.
மாற்றுத் தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்றழ
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற!
சீதை மணாளனைப் பாடிப்பற! (3}9}4)
இதில் மாற்றுத்தாய், கூற்றுத்தாய் ஆகியன யார் யாரைக் குறிப்பன என்பதில் கருத்து வேற்றுமை எழுந்தது. "மாறு' என்பதற்கு "ஒப்பு' என்று ஒரு பொருள் உண்டல்லவா? எனவே இது, சுமித்திரையைக் குறிப்பதாகக் கொண்டனர் சிலர். "பெற்ற தாய்க்கு ஒப்பானவளாகிய சுமித்திரை' இராமனை நோக்கி, "கைகேயி பறித்துக் கொண்ட இந்த இராச்சியம் உனக்கு வேண்டா; நீ வனமே போ' என்று சொன்னதாகவும் ஈன்ற தாயாகிய (ஈற்றுத்தாய்) கோசலை, "எம்பிரானே' என்று புலம்பிக் கொண்டே இராமனைப் பின் தொடர்ந்ததாகவும், மனத்தில் சிறிதும் இரக்கமற்றவளாகிய எமன் போன்றவளாகிய கைகேயியின் சொல் கேட்டு இராமன் வனம் போனதாகவும் நாலூர்பிள்ளை போன்ற ஆசார்யர் (குரவர்)கள் இதற்கு விளக்கம் தந்தனர்.
இனி, "மாற்றுத் தாய்' என்பது இராமனைக் கொடுமைக்குள்ளாக்கின மாற்றாந்தாயாகிய கைகேயியைக் குறிக்குமென்றும், கூற்றுத்தாய் யாகத்தீயில் இடும் பொருளின் (ஹவிஸ்) ஒரு பங்கினைப் பெற்ற சுமித்திரையைக் குறிக்குமென்றும் திருவாய்மொழிப் பிள்ளை போன்றோர் கருதினர்.
இவ்விருவகைக் கருத்துகளுள் ஏற்கத் தக்கது எது? சுமித்திரை இராமனைக் காட்டிற்குப் போகச் சொன்னதாக வான்மீகத்தில் குறிப்பில்லை. எனினும் இலக்குவனை நோக்கி, "வனவாசத்திற்காகவே என்னால் பெறப்பட்டவன் நீ. எனவே வனத்தையே அயோத்தியாக நினைத்துக் கொண்டு சுகமே செல்வாயாக' என்று கூறியதாக அந்நூலில் உள்ளது. ஆதலின் அவள் இலக்குவனை நோக்கி "வனமே போ' என்று சொன்னதாகக் கருதுதல் பொருந்தும் என்பர் சிலர்.
இனிக் "கூற்றுத்தாய்' என்பதற்கு, "ஹவிஸ்'ஸின் ஒருபங்கினை (கூறாக)ப் பெற்ற சுமித்திரை என்பதற்குப் பதிலாகக், கூற்றுவனைப் போன்றவளாகிய கைகேயியை அத்தொடர் குறித்ததாகக் கொள்வதே பொருத்தமாகும். "கொடியவளாகிய கைகேயியின் கடியசொல் கேட்டு } கான் தொடுத்த நெறிபோனான்' (484) என்பது பெரியாழ்வார் பாசுரம். அவர் வழியிலேயே,
தாய் என நினைவான் முன்னே
கூற்றெனத் தமியள் வந்தாள் (1597)
என்று கவிச் சக்கரவர்த்தி கம்பர் பாடியிருப்பதையும் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.