வீடணனும் கும்பகர்ணனின் குணக்கேடும்

இராமனிடம் கும்பனின் இறுதி வேண்டுகோள்
வீடணனும் கும்பகர்ணனின் குணக்கேடும்

வால்மீகியை அடியொற்றி கம்பர் இராமாயணம் பாடினாலும் நன்னூல் கூறும் வழி, தேவைக்கேற்பப் புதியன புகுத்துரைத்தலாய்ச் சிற்சில இடங்களில் செய்தளித்த மாற்றங்கள் காப்பியப் பொருளை ஏற்றமுடையதாகச் செய்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அந்த வகையில் வான்மீகத்தில் இல்லாததான ஒன்று போர்க்களத்தில் கும்பகர்ணனும் வீடணனும் சந்திப்பதான காட்சி. உச்சமாகப் போர் நடக்கையில், கும்பகர்ணனின் தன்மையை வீடணன் பலபடக் கூறியதைக் கேட்ட சுக்ரீவன், "கும்பனை நம்பால் சேர்த்துக் கொள்ளல் தகும்' என இராமனிடம் கூற, வீடணனே கும்பனை அழைக்கச் செல்கிறான்.

அங்ஙனம் வீடணன் வரவை கும்பனிடம் கூறியோர், "ஐய ! வீடணன் உன்பால் வந்தனன்' என்றதும் கும்பன் வரம்பிலா உவகை கூர்ந்து சிந்தையால் களித்தான் என்கிறார் கம்பர்.

உடன்பிறந்த தம்பி வந்ததால் உவகைக் கண்ணீர் சிந்தி, "நீ ஒருவன் உய்ந்தாய் என மகிழும் என்முன் தெளிவிலார் போல் மீள வந்தது ஏன்?' என்றான் கும்பன்.

கும்பனின் கூற்றில் உடன்பிறப்பின் பாசக் குழைவு உள்ளதோடு பேசத் தொடங்குகையில், "அமுதுண்பாய் நஞ்சுண்பாயோ?' என்றும் வினவினான். மேலும் இராமன்பால் சென்றதால் பிறப்பெனும் புன்மை தீரவழி கண்ட நீ சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்? என்று அன்பால் கடிந்தும் உரைத்தான்.

இங்ஙனமெல்லாம் கூறியதற்கும் மேலாக, "எமனிடம் செல்லும் எம் போன்றோர்க்கு எள் நீர் தெளிக்கும் கடமையை நீயன்றி யாரே செய்வார்?' எனக் கும்பன் கூறியதும், உடன் பிறப்பின் பாசம் பொங்க அண்ணனாம் கும்பனின் இறப்பை மாற்ற வழி கூறுவான்போல், "இராமன் பால் சரண் புகுந்தால் வீடு அளிக்கும்" என்றான் வீடணன்.

ஈண்டு ஒன்றை நீள நினைந்து சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது, இராவணனும் உடன்பிறந்தவனேயானாலும் அவனை விடுத்துக் கும்பனை இராமனிடம் ஆற்றுப்படுத்த நினைத்தது ஏனெனில் தம்மைப்போல் கும்பனும், இராவணனுக்கு நீதி கூறியும் அவன் கேளாமல் போருக்கு வந்தான் என்பதால் இந்த இராவணனைத் திருத்த முடியாதென்பதைக் கருதி அண்ணனுக்கு உடன்பட்டுப் போருக்கு வந்த கும்பனுக்கு ஒரு வாய்ப்பு நல்கும் விதமாகவே கம்பர் இருவரையும் சந்திக்கச் செய்தார் எனலாம். கும்பனின் மனத்தை மாற்ற வீடணன் பற்பல விதமான அறங்களைக் கூறினான்.

அவற்றுள் இளமை வறிதே ஏக நீ உறங்கினை என்பதல்லால் உற்றது ஒன்று உளதோ? ஆதலால் அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது என், என்று கும்பனின் உள் மனத்தைத் தொட்டுப் பேசுவதாகக் கூறினாலும் கும்பனுக்கு மனம் மாறவில்லை என்பதை வெளிப்படுத்த, கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ, எனத் தான் இராமனிடம் வர இயலாததையும் வீடணனின் நல்வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவுமான அறத்தைக் கூறினான்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம் உடன்பிறந்த மூத்தோனாகிய இராவணன் இராமனால் மடியும்போது தம்பியின்றி மாண்டு கிடைப்பனோ, தமையன் மண் மேல், என்று அண்ணன் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தினான்.

"வீடணனே ! நீ பிரிந்து போய்விட்டாய். ஆனால் நானோ உடன்பிறப்பான சாதியால் வந்த தொடர்பால் புலை உறு மரணம் எய்தல் எனக்குப் புகழ் என்பதால் அண்ணன் இராவணன் இராமனால் இறக்கும்போது தம்பியின்றி மாண்டு கிடப்பானோ' என்பதாகக் கூறியது சகோதர வாஞ்சையின் உச்சம் ஆகும்.

இந்நிலையில் வீடணன் பிரியாவிடையாகச் செல்லும்போது பார்த்த கும்பனின் கண்கள் உதர நீர் கொட்டுவது போலக் கண்ணீர் வடித்தான் என்றார் கம்பர்.

சென்ற வீடணன் இராமனிடம் கும்பனின் எண்ணத்தைக் கூறப் போர் உச்சம் அடைந்தது. இராமனால் கும்பன் கைகள் இழந்ததோடு காலும் அறுபட்டான்.

இருப்பினும் வாயினால் மலைகளைக் கவ்விப் போரிட்ட நிலையில் அவனது உள்மனம் உந்துதலாக இராமனிடம் ஒன்றைக் கூறலுற்றான்.

"இராமா ! என் தம்பி உம்மை அடைந்தான், அவனைக் காக்கக் கடவாய்! அவன் சாதியால் வந்த சிறு நெறியறியான் என்பதால் அவனை நானே மீண்டும் உமக்கு இன்று அடைக்கலப்படுத்துகின்றேன். ஏனெனில் உடன்பிறப்பின் பாசம் உணராதவனாகிய தகவிலாத இராவணன் கொஞ்சமும் தாமதிக்காமல், தம்பி என்றும் கருதாமல், போரில் அவனைத்தான் முதலில் கொல்லத் திட்டமிட்டுள்ளதால் போரின்போது உன்னையோ, உன் தம்பி இலக்குமணனையோ அனுமனையோ ஒருபோதும் என் தம்பி விட்டுப் பிரியாதபடி பார்த்துக் கொள்வாயாக' என்றான்.

கும்பனின் கூற்றில், அண்ணனைத் தகவு இல்லான் என்றும் "நம்பீ (இராமா), என் தம்பியாம் வீடணனைக் காணின் இறையும் நல்கானாகக் (சிறிதும் தாமதிக்காமல்) கொல்லும்' என்றும் கூறியதாக உள்ளது ஏற்புடைத்தா எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அதாவது போர்க்கோலம் செய்துவிட்டானுக்கு (அண்ணன் இராவணனுக்கு) உயிர்கொடாது அங்குப் போகேன் என்றும் தம்பியின்றித் தமையன் மாண்டு கிடப்பனோ என்றும் வீடணனிடம் கூறிய கும்பன் அண்ணனான இராவணன் எதிரி தன் எதிரி எனக்கருதிப் போருக்கு வந்தவன் இராமனிடம் தன் அண்ணனைப் பற்றித் தகவிலான் என்றதோடு அண்ணனுக்கு முதல் எதிரியே வீடணன்தான் என்பதாகக் கருதிய இராவணனின் உள்ளக் கிடக்கையைக் காட்டிக் கொடுத்ததென்பதும் போர் ரகசியத்தைக் கசியவிட்ட விதி மீறலன்றோ.

ஏனெனில் வீடணனிடத்திலேயே, "தகவிலானாகிய நம் அண்ணன் உன்னைத்தான் கொல்ல உள்ளான் என்பதால் நீ போரில் யாரையும் விட்டுத் தனியே பிரியாமல் கூட்டாக இரு' எனக் கூறியிருந்தால் அண்ணன் தம்பிக்குள் பேசிக்கொண்டதான பங்காளிப் பேச்சாக ஆகியிருக்கும், ஆனால், அண்ணன் எதிரி தன் எதிரி என உடன் பிறப்புப் பாசக் குன்றின் உச்சத்தில் இருந்த கும்பன் போருக்கு வந்து இராமனிடம் தகவில்லாமல் உரையாடினான்.

உடன்பிறப்புப் பாசத்தின் உயர்ந்த இடத்திருந்தும் உள்ளத் தடுமாற்றத்தால் இராமனிடம் பேசிய பேச்சால் கும்பனின் அறியாமை சிறிதாக வெளிப்பட்டு விட்டதன்றோ.

குன்றின் அனையாரும் குன்றுவர்

குன்றுவ

குன்றின் அனைய செயின் (965)

என்ற குறட்கருத்தின்படி கும்பன் பெருமை குன்றலுக்கு இலக்காகிவிட்டான் என்பதன்றோ கருத்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com