அரசே! வேறு தொழில் தெரியாதே!

செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று சேர வேந்தன் ஒருவன் சேர நாட்டைச் சிறப்புடன் ஆண்டான். சேரநாடு மலை நாடு.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று சேர வேந்தன் ஒருவன் சேர நாட்டைச் சிறப்புடன் ஆண்டான். சேரநாடு மலை நாடு. குன்றும் மலையும் பாறையும் மோத்தைக் கற்களும் நிலப்பரப்பெங்கும் நிறைந்திருக்கும் நாடு. அங்கு வாழும் மக்கள் எல்லாரும் கடும் உழைப்பாளிகள். கையும் காலும் அவர்களுக்கு இரும்புத் தூண்களாய் இருக்கும்.

மக்களே அப்படி என்றால் அவர்களை ஆளும் தலைவன் எப்படி இருப்பான்! கொல்லர் இரும்படிக்கும் தகடு போன்ற மார்பும், போரில் வேலைச் சுழற்றியும் அம்புகளை எறிந்தும் வாளாற் பொருதும் தழும்பேறிக் காய்ந்துவிட்ட கைகள். தலை முதல் கால் வரையில் அவனிடம் மென்மை புலப்படும் உறுப்பொன்றும் இல்லை. கையால் யாரையாவது அவன் பற்றினால் அவர்கள் எலும்புகள் முறிந்து போகும்; இரத்த நாளங்கள் குழைந்து போய்விடும்.

இப்படிப்பட்ட முரட்டு வேந்தனிடம் ஒரு பண்பு உண்டு. யாரையும் பாராட்டுவதென்றால் அவர்களின் கையைப் பற்றிக் குலுக்குவான். இன்றைக்கும் மனிதர்க்கு மனிதன் கை குலுக்கும் பழக்கம் அவனிடமிருந்து வந்திருக்குமோ! அப்படி அவனால் கை குலுக்கப்பட்டவர்கள் உறுதியாக விளக்கெண்ணைய் மருத்துவரிடம் தான் போய் இடம் பிறழ்ந்த சதையையும் எலும்பையும் சரி செய்து கொண்டிருப்பார்கள்.

செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கேள்விப்பட்ட கபிலர் என்னும் பெரும்புலவர், அவனைக் காண விரும்பினார். பறம்பு மலையில் வாழ்ந்த கபிலர், பாரியின் பெண்மக்கள் இருவரையும் பார்ப்பனச் சான்றோரிடம் அடைக்கலமாகக் கொண்டுபோய் ஒப்புவித்துவிட்டுச் சேரநாடு சென்றார்.

சேரன் அவையில் அவ்வேந்தன் பலராலும் போற்றிப் புகழப்பெற்று மலிந்திருந்த நேரத்தில் அவனைக் கண்டு கபிலர் மனமகிழ்ந்தார்.

'அரசே! உன் புகழ்மிக்க வாழ்க்கையைக் கண்டு போகவே வந்தேன். நீ வாழ்வாயாக!' என்று தொடங்கிப் பத்துப் பாடல்களைப் பாடினார்.

வேந்தன் அரியணையில் இருந்து இறங்கி வந்தான். 'புலவரே!' என்று மென்மையாய் அழைத்துத் தன் இரும்புக்கரத்தை நீட்டினான். கபிலருக்குத் தெரியாது அவன் கை எப்படிப்பட்டதென்று. அவரும் கையை நீட்டினார்.

சேரனின் இரும்புக்கரம் கபிலரின் கையைத் தொட்டவுடன் அதன் இயல்பை உணர்ந்தான். பஞ்சினும் மெல்லிய தசை; கனிந்த பழத்திலும் குழைந்த மென்மையான விரல் பகுதிகள். சேரன் இறுக்கிப் பிடிக்கவில்லை. மெல்லவே கை குலுக்கினான். குலுக்கிவிட்டுக் கேட்டான், 'புலவரே, என்ன உங்கள் கைகள் பூவைவிட மென்மையாக உள்ளனவே?' என்றான்.

'அரசே! உன் கைகள் அங்குசம் கொண்டு யானைகளைக் செலுத்தியவை. வாளால் பகைவர் மார்பில் வடுப்பதித்தவை. கோட்டை மதில்களைப் பெருமரங்களால் இடித்துத் தகர்த்தவை. மலைகளைத் தகர்த்த மாண்புடையவை. அவை வலியனவாக இருப்பதில் வியப்பேது? ஆனால் என் கைகள் எந்தக் கடுமையான தொழிலையும் செய்து அறியாதவை.

ஆட்டுத்தசையும் சோறும் கலந்த பெருந்திரளை அள்ளி அள்ளி உண்டு என் உடம்பு வியர்த்ததே தவிர வேறு தொழில் எதுவும் செய்து வியர்த்ததில்லை. எனக்கு வேறு தொழில் தெரியாதே! அதனால் என் கைகள் பஞ்சைவிட மெல்லியனவாகிவிட்டன!' என்றார்.

வேந்தன் இது கேட்டு கை குலுக்கவில்லை; புலவரைக் கைகுவித்து வணங்கினான்.

வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை...

கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது

பிறிதுதொழில் அறியா ஆகலின் , நன்றும்

மெல்லிய பெரும தாமே! புறநானூறு (14)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com