இந்த வாரம் கலாரசிகன் - 28-07-24

ஆண்டுதோறும் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கபிலர் விழாவின் தேதியை மட்டும்தான் எனக்கு தெரிவிப்பார் டி.எஸ்.தியாகராசன்.
இந்த வாரம் கலாரசிகன்  - 28-07-24
Updated on
2 min read

ஆண்டுதோறும் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் கபிலர் விழாவின் தேதியை மட்டும்தான் எனக்கு தெரிவிப்பார் டி.எஸ்.தியாகராசன். நான் கலந்துகொள்கிறேன் என்பது அவரைப் பொறுத்தவரை முடிவாகிவிட்ட ஒன்று. வழக்கம்போலவே இந்த ஆண்டும் கபிலர் விழா நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்துகொண்டேன்.

இந்த ஆண்டு கபிலர் விருதுக்கு திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் முனைவர் பிரேமா நந்தகுமாரை தேர்ந்தெடுத்திருந்தது. புதுக்கோட்டை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்திக்கு 'ஆவணக் காவலர்' விருதும் சன்மார்க்கத் தொண்டரான ஜீவ.சீனுவாசனுக்கு 'அறப்பணிச் செல்வர்' விருதும் வழங்கி கெளரவித்தது திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

முனைவர் பிரேமா நந்தகுமார் பன்மொழிப் புலமை பெற்ற ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர். மகாகவி பாரதியார் படைப்புகளை முதல்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அச்சிட்ட பெருமை இவருக்கு உண்டு. அதிலிருந்து தொடங்குகிறது இவரது மொழியாக்கப் பயணம். சைவ, வைணவ இலக்கியங்கள், மணிமேகலை காப்பியம் உள்ளிட்ட இவரது ஆங்கில மொழியாக்கங்கள் உலகளாவிய அளவில் பிற நாட்டவர்கள் தமிழ் ஆய்வு செய்ய அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

தொடர்ந்து 47 ஆண்டுகளாக திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் விரைவில் தனது பொன்விழாவைக் கொண்டாட இருக்கிறது. நிகழ்ச்சிகளைத் தொகுத்து விழாவை நடத்தும் பொறுப்பை முனைவர் கிருங்கை சேதுபதியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் பண்பாட்டுக் கழகத்தினர்.

ஆனால், ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான பணம் திரட்டும் பணியை யாரிடம் ஒப்படைக்க முடியும்?

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் என்றில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து இலக்கிய அமைப்புகளும் மிகுந்த சிரமத்துக்கிடையேதான் ஆண்டுதோறும், மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. புதுவை அரசின் அருட்பார்வை இருப்பதால் புதுச்சேரி கம்பன் கழகம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏனைய அமைப்புகளுக்கு அந்த 'அமைப்பு இல்லையே, என் செய்வது'?

வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை இலக்கிய நிகழ்வுகளுக்குப் பங்களிப்பு நல்கினால் மட்டுமே அவை தொடர்ந்து செயல்பட முடியும். தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழ் உணர்வையும் பாதுகாப்பதே இலக்கிய அமைப்புகள்தான். தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு கெளரவிப்பதிலும் அவைதான் முன்னணியில் இருக்கின்றன.

மனதில் பட்டதைப் பதிவு செய்துவிட்டேன். பிரச்னை என்று ஒன்று இருந்தால், அதற்குத் தீர்வு என்பதும் இருக்கும்தானே...

==============

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தால் 'ஆவணக் காவலர்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட புதுக்கோட்டை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி நமக்குப் பாதுகாத்து வழங்கியிருக்கும் அருங்கொடைகளில் ஒன்று யாழ்ப்பாண அகராதி. அவரது சேகரிப்பிலிருந்த இந்தப் புத்தகத்தை மீள் பதிப்பு செய்து, காலத்தின் ஓட்டத்தில் அது கரைந்து மறைந்துவிடாது காப்பாற்றிய பெருமை, என்னுடைய நண்பர் தமிழ் மண் பதிப்பக அதிபர் மறைந்த இளவழகனாரைச் சாரும்.

வீரமாமுனிவர் 1732-ஆம் ஆண்டில் சதுரகராதி உருவாக்கினார் என்றாலும், அது 1824-இல் தான் முழுமையாக அச்சாகியது. அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் 1842-இல் ஓர் அகராதி உருவாகி அச்சு வாகனம் ஏறியது. யாழ்ப்பாண அகராதி என்பதால் இது யாழ்ப்பாணத் தமிழுக்கான அகராதி என்று கருதிவிடல் ஆகாது. யாழ்ப்பாணம், மலையகம், ஒட்டுமொத்த இலங்கைக்கு என்று தனியாக எந்தவொரு அகராதியும் இல்லை.

தமிழ் மொழியை ஐயந் திரிபற கற்றாலொழிய தமது சமயப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது என்பதை கிறிஸ்தவ மிஷனரிமார்கள் உணர்ந்தனர். அதனை அவர்களது நாட்குறிப்புகளும், கடிதங்களும் தெளிவாகவே புலப்படுத்துகின்றன. மிஷனரிப் பாதிரியார்கள் தங்களது தமிழ்க் கல்வியை வளர்த்துக்கொள்ள உள்ளூர் தமிழறிஞர்களை அணுகினார்கள். ஒரே வழி அகராதியின் தன்மை போன்ற நிகண்டினைப் படிப்பது, மேலை நாட்டவர்க்கு கடினமாக இருந்தது. அவர்களது வழக்கத்திற்கு ஏற்ப அகராதி தயாரிக்கும் முயற்சிக்கு அதுதான் காரணம்.

வட்டுக்கோட்டை மிஷனரி என்னும் பெயருடன் அமெரிக்க மிஷனரிமார்கள் ஒரு பல்கலைக் கழகக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் 1732-இல் நிறுவினார்கள். அவர்கள்தான் முதல்முதலில் அகராதி தொகுக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

1718-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த ஜோசப் நைற் என்பவர் தமிழ் அகராதிக்கான தரவுகளைத் திரட்டத் தொடங்கினார். அந்த பணி நிறைவு பெறுவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டார். அவரது நண்பர் ஒருவர் ஜோசப் நைற் திரட்டியவற்றைப் பெற்று, சாமுவேல் ஹட்சின்ஸ் என்ற மிஷனரி மூலமாக 1742-இல் அதை அச்சு வாகனம் ஏற்றினார். இதற்கு முதலில் வழங்கிய பெயர் பேரகராதி என்பதாகும். இது யாழ்ப்பாணத்து அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கப்பட்டது.

தமிழ் மொழியின் சொல் வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சி இந்த அகராதிதான். இது ஈழத்தில் வெளியான முதல் தமிழகராதி என்பது மட்டுமல்ல, வீரமாமுனிவரின் சதுரகராதியைவிட மேம்பட்டது என்றும் கூறலாம். இந்த அகராதியில் 58,500 சொற்கள் உள்ளன. அதாவது சதுரகராதியைவிட நான்கு மடங்கு சொற்கள் உள்ளன.

சந்திரசேகரப்பண்டிதர், சரவணமுத்துப்பிள்ளை இருவரின் பெரும் பங்களிப்புடன் உருவான இந்த அகராதியை 175 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் உலகுக்கு மீள் பதிப்பு செய்து வழங்கிய இளவழகனாருக்கும், அதற்கு உதவிய 'ஆவணக் காவலர்' ஞானாலயா

பா. கிருஷ்ணமூர்த்திக்கும் தமிழ் உலகம் வாழ்நாள் கடன்பட்டிருக்கிறது.

==============

உணவை வீணாக்கும்போது யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை, அதற்குப் பின்னால் இருக்கும் விவசாயியின் உழைப்பை.. நமக்கு உணவளித்துவிட்டு தனக்கு அரைவயிறு உண்ணும் அந்த கிராமத்து ஏழையை...

எல்லா உணவகங்களிலும், அனைவரின் பார்வையும் படும் இடத்தில் எழுதி வைக்க வேண்டிய வரிகள் 'அசையத் துவங்கியது அறை' என்கிற கவிஞர் க.அம்சப்ரியாவின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இந்தக் கவிதை -

உணவு மேசையில்

மீதம் வைத்த உணவில்

வியர்வை பொங்கப் பொங்க

உழவோட்டிக் கொண்டிருந்தார்

அறிமுகம் இல்லாத ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com