கம்பனின் தமிழமுதம் - 3: பொதிகையில் தமிழ்ச் சங்கம்

கம்பர்
கம்பர்
Published on
Updated on
1 min read

வாலி கொல்லப்பட்டுவிட்டான். மழைக்காலமும் கடந்துவிட்டது. சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதே அடுத்த வேலை. கிட்கிந்தை அரசனான சுக்ரீவன், நான்கு திசைகளிலும் சென்று தேட வீரர்களைப் பிரித்து அனுப்பினான்.

கிழக்கு, மேற்கு, வடக்கு என்று மூன்று திசைகளுக்கும் தனித்தனி குழுக்களை அனுப்பிய சுக்ரீவன், தெற்கு திசைக்கு அனுமன், அங்கதன், சாம்பன் ஆகியோருடன் வேறு சில வீரர்களை அனுப்ப முடிவு செய்தான்.

சீதையை இராவணனே கொண்டு சென்றான் என்றும், அவன் தென்திசை நோக்கியே சென்றான் என்றும் குறிப்புகள் கிடைத்திருந்ததால், அனுமன் தலைமையில் பெரு வீரர்களை தெற்கு நோக்கி அனுப்பினான்.

செல்ல வேண்டிய வழிகள் என்னென்ன என்று அவன் சொல்லி அனுப்பியதாகத் தெளிவாக விளக்குகிறான் கம்பன். வடக்கில் இருந்து தெற்கு நோக்கிய பயணத்தில் இருக்கும் இடங்களை எல்லாம் துல்லியமாகக் கம்பன் சொல்வது வியப்பாகத்தான் இருக்கிறது.

"பல இடங்களைக் கடந்து வேங்கடத்தை அடைவீர்கள்' என்கிறான் சுக்ரீவன். இன்று திருப்பதி என்று அழைக்கப்படும் வேங்கடத்தைக் குறிக்கும் கம்பனின் கவிதை வரி இது;

"வட சொற்கும் தென் சொற்கும்

வரம்பு ஆகி'

"வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும் எல்லையாக இருக்கும் வேங்கடம்' என்று குறிப்பிடுகிறான் கம்பன். "வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' என்று தொல்காப்பியம் கூறுவதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

தொடர்ந்து வழிகளைக் கூறும் சுக்ரீவன், 'சோழ நாடு, மலை நாடு கடந்தால், தமிழ்நாட்டில் நுழைவீர்கள்'' என்கிறான்.

"பிறக்கம் உற்ற மலைநாடு நாடி,

அகன்

தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ'

என்பன கம்பன் வரிகள். "தமிழ்நாடு' என்று கம்பன் தெளிவாகப் பதிவு செய்யும் இடம் இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வரும் சுக்ரீவன், பொதிகை மலையைப் பற்றிக் குறிப்பிடும்போது, இப்படிச் சொன்னதாகக் கம்பன் எழுதுகிறான்:

"தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்

திரு முனிவன்

தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,

என்றும் அவன் உறைவிடமாம்;

ஆதலினால்

அம்மலையை இறைஞ்சி ஏகி...'

'தமிழ்நாட்டில், பொதிகை மலை உண்டு. அகத்திய முனிவர் தோற்றுவித்த தமிழ்ச்சங்கம் அங்கு இருக்கிறது. அகத்திய முனிவர் எப்போதும் வாழும் இடம் அது.

எனவே அந்த மலையை வணங்கிவிட்டு, அப்பால் செல்லுங்கள்!'' என்று கிட்கிந்தை மலையில் வாழ்ந்த சுக்ரீவன் சொன்னதாகக் காட்சி அமைக்கிறான் கம்பன்.

'பொதிகை மலைக்கு சீதையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. தமிழ்மொழி வாழும் அந்த மலையைத் தொழுது வணங்கிவிட்டு உங்கள் தேடுதலைத் தொடருங்கள்!'' என்று சுக்ரீனைச் சொல்ல வைத்து, தனது ஆழமான தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறான்

கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com