சேரன் அவையிலும் பாரியின் புகழ்!

பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியதாகும்.
Published on
Updated on
2 min read

பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியதாகும். அதில் முதற்பாடல், புலாஅம் பாசறை என்னும் பெயருடையது. துறை காட்சி வாழ்த்து; வண்ணம்: ஒழுகு வண்ணம்; தூக்கு: செந்தூக்கு.

சேரனின் வென்றிச் சிறப்பொடு சேர்த்து அவன் கொடைச் சிறப்பினை விதந்து பேசுவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது. பாடற் கருத்து வருமாறு:

பலாமரத்திலேயே பழுத்து, வெடித்த பலாப்பழத்தின் இளம்புண் போன்ற வெடிப்பிலிருந்து வழியும் தேனை, வாடைக் காற்று கொண்டு போய்த் தூவும்

நாட்டுக்குரியவன்; பெருவலிமை படைத்தவன். ஓவியம் போன்று வேலைப்பாடுகள் அமைந்த நல்ல மனையில் வாழும் கொல்லிப்பாவையை ஒத்த எழில் நலம் பொலிபவளின் கணவன்.

பொன்னனைய பூக்களையும் சிறிய இலைகளையும் மெல்லிய அடியினையும் கொண்ட உன்னமரத்துக்குப் பகைவன்; அது தழைத்திருந்தால் வெற்றியும் கரிந்து காட்டினால் தோல்வியும் உண்டாகும் என்ற கருத்தைப் பொருட்படுத்தாமல் போருக்குச் செல்பவன். உன்ன மரத்தின் நிமித்தம் பாதகமாக அமைந்தாலும் அது பொய்படுமாறு செய்து போரில் வெற்றி பெறும் வீரன். அவனே எம் தலைவன்.

அவன் யார் எனில், பூசி உலர்ந்த சந்தனம் பொருந்திய அகன்ற மார்பையும் கொடுத்தும் குறையாத பெரிய ஈகையால் மிக்க கொடைத்தன்மையையும் உடையவனான பாரி.

அவன் தன்னுடைய கொடை முரசில் பூசிய மார்ச்சனை என்னும் சாந்து காய்ந்து போகும்படியும் பரிசிலர் வருந்தும்படியும் மீண்டும் திரும்பி வர முடியாத வானுலகம் சென்றுவிட்டான்.

அதனால், "சேரனே, என்னைக் காப்பாற்றுவாயாக!' என்று கூறி இரப்பதற்காக உன்னிடம் நான் வரவில்லை. எம் தலைவன் பாரியைப் பற்றி உன்னிடம் சில கூறவே இங்கு வந்தேன். அவனைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் மிகைப்படுத்தியும் நான் கூற மாட்டேன். அவன் பிறர்க்குக் கொடுத்ததற்காக வருந்த மாட்டான்; "கொடுக்கும் போதெல்லாம் சிறந்த கொடையாளனாவாய்!' என்று உலகோர் உன்னைப் பற்றிச் சொல்லும் நல்ல புகழைக் கேட்டேன். அச்சொற்களே என்னை உன்னிடத்தே உந்திச் செலுத்தி வழிநடத்தியதால், உன்னைக் காண வந்தேன்'' என்கிறார்.

மொத்தம் பதினெட்டு அடிகள் கொண்ட இப்பாடலில் முதல் பத்தடிகளில் பாரியின் புகழையே பேசுகிறார் கபிலர்.

பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்

வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்,

ஓவத் தன்ன வினைபுனை நல்லில்

பாவை யன்ன நல்லோள் கணவன்

பொன்னின் அன்ன பூவின் சிறியிலை

புன்கால் உன்னத்துப் பகைவன், எங்கோ

புலர்ந்த சாந்திற் புலரா ஈகை

மலர்ந்த மார்பின் மாவண்பாரி

முழவுமண் புலர இரவலர் இனைய

வாராச் சேண்புலம் படர்ந்தோன்...

என்பன பாரியைக் குறிக்கும் அப்பாடலடிகள்.

சேரன் வாழியாதனைப் பாடி அவனிடம் பரிசில் நாடி வந்த கபிலர் அவன் முன்னிலையிலேயே பாடலின் செம்பாதிக்குமேல் பாரியின் புகழைப் பாரித்துப் பேசியது மனங்கொள்ளத்தக்கது.

பாரியின்பால், "நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி உகுதற்கு ஒத்த உடம்பும்' உடையவர் கபிலர். பாரி மாண்டதும் தாமும் உடன் உயிர் துறவாது வாழ்ந்தது பாரி மகளிர்க்காகவே என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் உணர்த்தும். அந்தப் பாரி இப்போது உயிருடன் இல்லாத நிலையில் அவன் புகழை வேற்றவையில் பேசுகிறார் கபிலர்.

"நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல்' என்று பிற்காலத்து ஒளவை நட்புக்குச் சொன்ன இலக்கணத்தைத் தான் இங்கு கபிலர் பாடலில் நாம் கண்டு மகிழ்கிறோம். நேயமுடையார் வாழ்வில் எக்காலத்திலும் நிகழும் செயலன்றோ இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com