தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே

Updated on
2 min read

நமக்குத் தெரியாத ஓர் இடத்திற்கு வழிகாட்ட, நமக்குத் தெரிந்த ஓர் இடத்தைக் கூறி அதிலிருந்து தெரியாத இடத்திற்கு வழி சொல்லிஆற்றுப்படுத்துவது வழக்கம். அப்படியான ஒரு வழிமுறையை நமது பக்தி இலக்கியங்கள் அடிக்கடி கையாள்வதுண்டு.

இறைவனை அடைவதற்கான வழியைச் சொல்ல நாயக நாயகி பாவம் என்று ஒரு முறையை நமக்குக் காட்டியிருக்கிறது. இறைவனை நாயகனாகவும் தன்னைப் பெண்ணாகவும் கொண்டு நாயகனை அடைய முனைவது, நாயகனின் நினைவில் திளைத்திருப்பது, அவனின் அன்பில் கூடி மகிழ்வது, அவனோடே ஒன்றுபட்டுப் போவது என அகம் சார்ந்த, மனிதனின் காதல் இயல்பையே கருவியாகக் கொண்டு கண்டறியாத கடவுளிடம் மனதை ஆற்றுப்படுத்துவது.

அதாவது, இருமை நிலையிலிருந்து இரண்டற்ற இறைநிலை அடைவதற்கு நாயக-நாயகி பாவம் கையாளப்படுகிறது.

சிவஞானபோதம், "அவன், அவள், அது' இவற்றின் தொகுதிதான் இந்த உலகம் என்கிறது. இந்தத் தொகுதி இறைமையில் தொடங்கி இறைமையிலேயே ஒடுங்கும் என்றும் கூறுகிறது.

இந்தத் தத்துவத்தைத்தான் எளிதாக்கி நமது பக்தி இலக்கியம் இறைவன் ஒருவனே நாயகன், மற்ற உயிர்கள் அனைத்தும் பெண்கள் என்றும் இறை மீது காதல் சொல்லக் கற்றுக் கொடுக்கிறது.

நாயன்மார்கள், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், வள்ளலார் எனப்பலரும் இந்த முறையைக் கையாள்கின்றனர். அவர்கள் இதனை ஓர் இலக்கிய உத்தி என்று கருதியதோடு அல்லாமல் இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கான கருவியாகவும் கருதினார்கள்.

நாயன்மார்களின் பாடல்களில் அகத்துறை பாடல்கள் காதல் உணர்வு மிகுந்து தலைவன்பால் மையல் கொள்வதாய் அமைந்துள்ளன. அகத் துறைப் பாடல்களில் தலைசிறந்தது என்று இதனைச் சொல்லி விடலாம்.

திருவாரூர் இறைவனின் பெயரைக் கேட்டாளாம், அவன் வடிவம் பற்றிக் கேட்டாளாம், அவனின் ஊர் எதுவென்றும் அறிந்து கொண்டாளாம், அப்படியே காதல்பெருகி தன்னிலை மறந்து அவன் திருவடிகளே தஞ்சமடைந்துவிட்டாளாம்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம்

கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே

நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

அப்பர் பெருமான் இப்படி இறைவன் மீது காதல் கொண்டார்.

ஆழ்வார்களுள் நம்மாழ்வாரோ தம்மைப் "பராங்குசநாயகி' என்றே கருதிக் கொண்டார்.

திருமங்கை ஆழ்வாரோ "பரகால

நாயகி' எனத் தன்னைச் செய்து கொண்டார். வள்ளலாரின் காதல் இன்னும் கூடஆழமானது.

பொன்னணி பொற்சபையாளர் சிற்சபையார்

என்னைப்

புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும்

புணர்ந்தார்

என்றே கூறுகிறார்.

மாணிக்கவாசகப் பெருமானோ பெண்களின் விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு கவிபுனைகிறார். அந்த விளையாட்டுகளை விளையாடும் பெண்களுள் ஒருபெண்ணாகத் தனையும் நிறுத்திக்கொள்கிறார். இவரது திருக்கோவையார் முழுவதுமே அகத் துறைப் பாடல்கள்தாம்.

திருவளர் தாமரைசீர்வளர் காவிகள்

ஈசர்தில்லை

குருவளர் பூங்குமிழ்கோங்குபைங் காந்தள்

கொண்டுஓங்கு தெய்வ

மருவளர் மாலையொர்வல்லியின் ஒல்கி

அனநடைவாய்ந்து

உருவளர் காமன்தன்வென்றிக் கொடி

போன்றுஒளிர்கின்றதே

இயற்கையின் காரணமாகத் தலைமகனும் தலைமகளும் சேர்வது இயற்கைப் புணர்ச்சி. தன்னுடைய பாங்கர்களோடு தலைமகன் வேட்டையாடுதல் தொழில் காரணமாகச் செல்லுகின்றபோது, ஊழின் காரணமாக, அவர்களை விட்டுப் பிரிந்து, தனி வழியில் செல்ல இவனைப் போலவே, தலைமகளும் தன் தோழியரை விட்டுத் தனியே நிற்க அவளை அவன் காண்பதே காட்சி.

இவை மானுடக் காதல் போலவே இருந்தாலும் பேரின்பம் நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டுவன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com