
சங்ககாலத் தமிழகம் எந்நேரமும் போர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. படுகளத்தில் ஒப்பாரிக்கு இடமேது? எனவே,
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவ தன்றுஇவ் வுலகத்து இயற்கை! (புறநா.76)
என்று பாடினார் இடைக்குன்றூர்கிழார். தமிழ் மண்ணில் பிறந்த ஆடவன் ஒவ்வொருவனுக்கும் வாளேந்திப் போர் புரிதலே கடன் என்று அந்நாளில் கற்பிக்கப்பட்டது.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
கறிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
என்னும் பொன்முடியார் பாட்டு (புறநா.312) இதற்குப் போதிய சான்றாகும். முன்பு ஒரு நாள் நடந்த போரில் தந்தையையும், அதன் பின்னர் தன் கணவனையும் இழந்த பெண்ணொருத்தி, "செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி'த் தன் ஒரே மகனையும் போர்க்கோலம் செய்து "களம் செல்க' என விடுத்ததாக ஒக்கூர் மாசாத்தியார் (புறநானூறு 279) பாடுகிறார். எனவே தான் சங்க காலத்தை வீரயுகம் (ஹெரோயிக் ஏஜ்) என்று அறுதியிட்டனர் அறிஞர்.
அந்நாளில் "போர்' என்ற சொல்லைக் கேட்டவுடனேயே அதனைப் பெரிதும் வேட்டு நின்றனர் வீரர்கள். அத்தகையோரைப் "போர் எனிற் புகலும் புனைகழல் மறவர்' என்று புகழ்கிறார் (புறநா.31) கோவூர் கிழார். (புகலும் - விரும்பும்).
"போரின் பொருட்டு நாடு பல கடந்து தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளதே' என்று வீரர் யாரும் சொன்னதே இல்லையாம்.
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்லேம் அல்லேம் என்னார்
என்று வீரர்களின் கூற்றாகவே இதனைப் புலப்படுத்துகிறார் அவர்.
அதே நலங்கிள்ளியை, அவர் பாடிய மற்றொரு புறநானூற்றுப் பாடலில் (68), "பறவைகள் காட்டும் தீநிமித்தம்' (புட்பகை) காரணமாக அரசன் தன்வீரர்களைப் போருக்கு ஏவாத நிலையில், வாளாவிருக்க முடியாத வீரர்கள், "இது உட்பகையோ' என்று காண்போர் எண்ணுமளவுக்கு, "நமக்குள் நாமே போர்புரிவோம்' என்று தம்முடைய பூரித்த தோள்களைத் தட்டுவராம்.
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப
என்று புலவர் இதனைக் காட்சிப்படுத்துகிறார். அரசன் ஒருவனின் படையைச் சேர்ந்த வீரர்கள் இப்படித் தமக்குள்ளே போர் செய்வது விளையாட்டுப் போராகத்தானே இருக்க முடியும்! இத்தகைய போர்கள் நடந்ததற்கான சான்றினைப் பத்துப்பாட்டுள் ஒன்றான பட்டினப் பாலையிற் காணலாம்.
முதுமரத்த முரண்களரி
வரிமணல் அகன்திட்டை
இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலிமாக்கள்
கடல் இறவின் சூடுதின்றும்
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்
வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல் பூச்சூடியும்
நீல் நிற விசும்பின் வலன்ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்
பெருஞ்சினத்தால் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம் பினோர்
கல்லெறியும் கவண் வெறீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தை (59-74)
இவ்வடிகளின் பொருள் வருமாறு:
"அவர்கள் செய்வது விளையாட்டுப் போர் என்பதால், பல ஆண்டுகள் நின்று முதிர்ந்த மரங்களையுடைய மணற்பரப்பைக் களமாக அமைப்பார்கள். அந்த மணற்பரப்பு வரிகளையுடையதாகவும் அகன்ற திட்டை(மேடு)களை உடையதாகவும் இருக்கும். அங்கே வலிமை பொருந்திய பரதவர்கள் தம் சுற்றத்தாரோடு பெருங் கூட்டமாகக் கூடுவர். நெய்தல் நிலத்து வீரர்கள் கடலில் உள்ள இறால் மீனின் தசையைச் சுட்டுத்தின்பார்கள். வறண்ட மணலில் உள்ள அடும்பின் மலர்களை அணிந்து கொள்வார்கள். மருதநிலத்து மறவர்களோ கையிலுள்ள ஆமையின் தசையை வேகவைத்து உண்பார்கள். நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களைச் சூடுவார்கள்.
மருவூர்ப் பாக்கத்து வீரர்களும் பட்டினப் பாக்கத்து வீரர்களும் நீல வானத்தில் தானாக ஒளிரும் விண்மீன்களுடன் கலந்து வலமாக எழுந்து சுற்றிவரும் சூரியனிலிருந்து ஒளிபெறும் கோள்மீன்கள் போலக் கலந்திருப்பார்கள். அவர்கள் அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடிக் கைகளும் போர்க் கருவிகளும் உடலிற் படுமாறு தீண்டிப் போர்புரிவார்கள். பெருஞ்சினத்துடன் இருக்கும் அவர்கள் புறமுதுகிடாமல் ஒருவருக்கொருவர் தோற்காமையால் மீண்டும் தம் வலிமையை அளக்க முற்படுவார்கள். அதற்காகப் பனைமரங்களில் இலக்குவைத்துக் கவண்கற்களை எறிவார்கள். அக்கற்களுக்கு அஞ்சி அங்கே வாழும் பறவைகள் அவ்விடத்தை விட்டு நீங்கும். அவர்கள் கவண்கற்களை எறிந்ததால் ஏற்பட்ட புள்ளிகளைக் கொண்ட பனைமரங்களையுடையது காவிரிப்பூம்பட்டினம்.'
இவ்வாறு வீரர்கள் செய்யும் விளையாட்டுப் போர் பற்றிக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப் பாலையில் விவரித்திருக்கிறார். இந்த விளையாட்டுப் போரின் நோக்கம் எதுவாக இருந்திருக்கும்? ஒன்று மகிழ்ச்சியுடன் கூடிய பொழுது போக்கு; மற்றொன்று பகைவர்களை எதிர்கொள்வதற்கான படைப்பயிற்சியாகவும் அவர்கள் அதனைக் கருதியிருக்கலாம் அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.