
மகாபாரதத்தில் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவியது. திரெளபதியின் சுயம்வரத்தின்போது, மற்றவர்கள் கர்ணனின் பிறப்பைப் பற்றித் தெரியாததனால், தேரோட்டி மகன் என அவனை இழிவாகப் பேச, துரியோதனனே அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டு அங்க தேசத்திற்கும் அரசனாக்குகிறான்.
பின்பு பாரதப்போர் மூண்டபோது கர்ணன் கெளரவர்களின் பக்கம் சேர்ந்து போரிடுகிறான். அர்ச்சுனனைப் போலவே அவனும் மாவீரன். இருவரும் ஒருவரை ஒருவர் போரில் எதிர்கொண்டால் யாரேனும் ஒருவர் கொல்லப்படும் வாய்ப்புண்டு என அறிந்திருந்த சிலருள் அன்னை குந்தியும் ஒருத்தி.
அவள் கர்ணனைச் சந்திக்கச் செல்கிறாள். அவனுடைய பிறப்பின் உண்மையைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள். இக்கதையைக் கூறித் தானே அவனுடைய தாய் என உறுதிப்படுத்தி, அவனிடம் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து போரிட அவர்களின் அண்ணனான கர்ணனை வேண்டுகிறாள்.
அதனை மறுக்கும் கர்ணன் துரியோதனனுக்கும் தனக்கும் இடையேயான நட்பின் ஆழத்தை விளக்க ஒரு சம்பவத்தைக் கூறுகிறான்.
"நானும் துரியோதனன் மனைவி பானுமதியும் குற்றமற்ற ஓரிடத்திலமர்ந்து சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தோம். அப்போது என் பின்பக்கமிருந்து துரியோதனன் வந்தான்; அவனைக் கண்ட பானுமதி எழுந்தாள். ஆட்டத்தில் தோற்பதனைத் தவிர்க்கத்தான் எழுந்திருக்கிறாள் என எண்ணி நான் அவளைப் பிடித்து உட்கார வைக்கப் பார்த்தேன். அப்போது அவள் இடையிலணிந்திருந்த மேகலை அறுபட்டு அதனின்றும் முத்துகள் சிதறி ஓடின.
அப்போது அங்கு வந்த துரியோதனன், "முத்துகளை எடுக்கவோ கோக்கவோ?' என்று கேட்டான். அவன் நண்பனான என்மீது வைத்திருந்த நம்பிக்கை அத்தகையது. அவனுக்காகப் போர் செய்வதே என் செஞ்சோற்றுக் கடனைக் கழிக்கும் செயல், அதுவே அறமாகும், புகழையும் தரும்' என்கிறான்.
இந்த நிகழ்ச்சி வியாச பாரதத்தில் குறிப்பிடப்படவில்லை; கும்பகோணம் பாரதப் பதிப்பிலும் இது பற்றிய செய்தி இல்லை. ஆனால் பெருந்தேவனார், வில்லிபுத்தூரார் ஆகியோர் எழுதியுள்ள பாரத வேண்பா, வில்லிபாரதத்தில் இந்நிகழ்ச்சி பற்றிய வரிகளைக் காணலாம்.
பெருந்தேவனார் பாடியுள்ள பாரத வெண்பாவில் கீழுள்ள கருத்தமைந்த பாடல் காணப்படுகிறது. (உத்தியோக பருவம் - பாடல் 319, 320).
"சொக்கட்டான் ஆட்டத்தில் தான் தோற்றுப் போகப்போவதால் எழுந்துவிட்டாள் எனக்கருதி துரியோதனன் மனைவியின் துகிலை நான் பற்றியிழுத்து அவளை அமரச் செய்ய முயன்றேன். அப்போது அவள் மேகலை அறுந்துவிட, அதனின்றும் சிந்திய முத்துக்களைக் கண்ட அவன் அவற்றை எடுக்கவோ கோக்கவோ எனக் கேட்டான். என்மீது சந்தேகமே கொள்ளாத அந்நண்பனுக்காகப் போரில் என்னுயிரைப் போக்கிக் கொள்ள மாட்டேனா நான்?'
பன்மணிகள் சிந்திப் பரந்து கிடந்ததுகண்
டின்மணிக் கென்புகுந்த தென்னாம-
னான்மணியைக்
கோக்கோ பொறுக்கவோ வென்றானுக்
கென்னுயிரைப்
போக்கா தொழிவனோ புக்கு.
மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை
யான்பிடிக்க
வற்று விழுந்த வருமணிகண்- மற்றவற்றைக்
கோக்கேனோ வென்றுரைத்த கொற்றவற்கெ
னாருயிரைப்
போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு.
வில்லிபுத்தூராரும் இதே கருத்தில் அமைந்த பின்வரும் பாடலைத் தமது பாரதத்தில் (வில்லி பாரதம்- உத்தியோக பருவம்- பாடல் 255) பாடியுள்ளார்.
மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே
மாசறத் திகழும் ஏகாந்த
இடந்தனில் புரிந்தே நானயர்ந்து இருப்ப,
"எடுக்கவோ? கோக்கவோ?' என்றான்;
திடம்ப டுத்திட வேலிராச ராசனுக்குச்
செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கினிப் புகழும்,
கருமமும், தருமமு மென்றான்.
பெருந்தேவனார் எனும் பெயரில் சங்ககாலம் தொட்டுப் பல புலவர்கள் இருந்து வந்துள்ளனர். பாரதம் பாடியோருள் இவர் இரண்டாமவர் என்பர்.
வில்லிபுத்தூராரின் காலம் கிட்டத்தட்ட 14-ஆம் பொது நூற்றாண்டு கருதப்படுகிறது. இவரை ஆதரித்த வரபதி ஆட்கொண்டான் எனும் மன்னனின் வேண்டுகோளின்படி வேதவியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் இவர் எழுதியுள்ளார்.
இரு புலவர்களுமே வடமொழியிலான வியாச பாரதத்தைத் தமிழில் இயற்றினாலும் நட்பின் உயர்வைக் காட்டுவதற்காகவே இங்ஙனம் ஒரு நிகழ்ச்சியைப் புதுமையாகப் புகுத்தியுள்ளனர் என எண்ண இடமிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.