புரப்போர்பொன் னிணங்குகை போல

புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான நெல்லிற்குச் சொல், வரி, விரீகி என வேறு பெயர்களும் உண்டு.
புரப்போர்பொன் னிணங்குகை போல
Published on
Updated on
2 min read

புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான நெல்லிற்குச் சொல், வரி, விரீகி என வேறு பெயர்களும் உண்டு.

நெல் விதைக்கும் நிலத்திற்கு நீர் விட்டு நல்ல நாளில் முதல் முதலாகக் கலப்பையால் உழுது சேறாக்கி அதில் எரு, தழைகள் இட்டும் உழுதலால் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பரம்பு என்னும் பலகை கொண்டு சமன்படுத்துவதை,

பொன்னேரைப் பூட்டிவயல் சேறு

செய்தபின்

போதவெருத் தழைபோட்டுப்

பரம்ப டித்து

(திருவாரூர்ப் பள்ளு, 53:3)

என்னும் பாடலடி கூறும்.

நிலத்தில் விதைப்பதற்குரிய நெல்லை நீரில் ஊற வைப்பர். அது மூன்று நாள் ஊறியவுடன் முளை காணும். அதனை மூன்றாங்கொம்பு என்று வழங்குவர். கொம்பு என்பது நெல்லிலிருந்து முளை வெளிப்பட்டிருத்தலைக் குறிக்கும். அம்முளை கண்ட நெல்லைப் பண்படுத்திய நிலத்தில் விதைப்பர். விதை விதைத்தல் என்பதைத் தென் மாவட்டத்தார் நாற்றுப் பாவுதல் என்று கூறுவர்.

விதைத்த நெல்முளைக்கு நீர் அதிகமாக விட்டால் அழுகுதலும் குறைவாக விட்டால் பழுதாகுதலும் ஏற்படுவதால் அளவுடனே நீர் விடுவர். இதற்கு முளைத்தண்ணீர் விடுதல் என்பர்.

பெருக யாத்தநீர்க் கலங்கல்போய்த்

தெளிந்தபின் முழுதும்

மருவு கால்வழி வடிந்துறக்

கவிழ்ப்பர்கள் மள்ளர்

(காஞ்சிப் புராணம், 102:3,4)

என்னும் பாடலடிகள், நெல்முளைக்கு விட்ட நீர் நிலம் முழுவதும் பரவி அந்நீரோடு வந்த வண்டல் படிந்த பின்னர் எஞ்சிய நீரினை வெளியேற்றுவதைக் குறிப்பிட்டுள்ளன. இங்கு நீர் வெளியேற்றும் வழியான மருவுகால் என்பதை மக்கள் வழக்கில் வடிகால் என்பர்.

நாற்று வளர்ந்த பின்னர் அதனைப் பறித்து வயலில் நடவு செய்தவுடன் வாடி வளைந்து காணப்படும். அது மண்ணில் வேர் பிடிக்க தொடங்கியவுடன் மெல்ல மெல்ல நிமிர்ந்து நேராகும். இதனைக் கூன் நிமிர்தல் எனத் திருப்புடைமருதூர்ப் பள்ளு (107:3) குறிப்பிடும். அந்நாற்றுக்குத் தொடர்ந்து நீர் பாய்ச்சுவதால் வளர்ந்து பசுமை நிறம் கொள்வதைப் பசப்பேறுதல் (முக்கூடற் பள்ளு, 136:1) என்று கூறியுள்ளனர்.

வளர்ந்த நாற்றின் கணுக்களில் தோன்றும் கிளையைத் தூர் என்பர். அதிலிருந்து இலை வெளியே வருதலைக் குருத்தெழுதல் (திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு, 165:2) என்றனர்.

பயிர் விளைச்சல் பெறுவதற்கு நீர் இன்றியமையாததாகும். அதனால் உரிய காலத்தில் பயிருக்கு நீர் பாய்ச்ச வேண்டும் என்பதை, நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் (ஏரெழுபது, 36:2) எனக் கம்பரும், நீரைப் பெறாத பயிர் விளைவு இல்லாமல் போகும் என்பதை, நலங்கெடு நீரற்ற பைங்கூழ் (நான்மணிக்கடிகை, 46:3) என விளம்பி நாகனாரும் எடுத்துரைக்கின்றனர்.

இளங்கதிரிலுள்ள நெல் முற்றியவுடன் சுமை தாங்க முடியாமல் அந்நெற்கதிரின் நுனிப் பகுதி மண்ணை நோக்கிச் சாய்ந்து நிற்கும். இதனைத் தலை கவிழ்தல் (வையாபுரிப் பள்ளு, 189:3) என்று கூறியுள்ளனர்.

முக்கூடற் பள்ளு இயற்றிய புலவருக்கு வளைந்து நிற்கும் நெற்கதிரின் தோற்றம் இரவலர்க்கு வள்ளல் தன்னுடைய கையால் பொன்னைக் கொடுப்பது போல இருந்ததாம். அவர் புரப்போர்பொன் னிணங்குகை போல வணங்கி (முக்கூடற் பள்ளு, 136:3) என்று கூறியுள்ளார்.

நெல்மணி முற்றியவுடன் நெற்கதிர் தலை சாய்ந்து இருப்பது இயற்கையான நிகழ்வாகும். அவ்வியற்கை நிகழ்வில் புலவர் தன்னுடைய குறிப்பை ஏற்றிக் கூறி இருப்பது இன்பத்தைப் பயக்குகிறதல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com