இந்த வாரம் கலாரசிகன் - (03-03-2024)

வேலூர் கவிக்கோ அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு 'கவிக்கோ' விருது வழங்கப்படுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (03-03-2024)

வேலூர் கவிக்கோ அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு 'கவிக்கோ' விருது வழங்கப்படுகிறது. கவிஞர்கள் சுரதா, மீரா, நா. காமராசன், மு.மேத்தா, இன்குலாப், ஈரோடு தமிழன்பன், புலமைப்பித்தன், முத்துலிங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் குறிப்பிடத்தக்க 22 கவிஞர்கள் 'கவிக்கோ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் 2022-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. மார்ச் 6-ஆம் தேதி புதன்கிழமை மாலையில் வேலூர் சத்துவாச்சாரி சோலை அரங்கத்தில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது.

விழாத்தலைமை பெரும்புலவர் வே. பதுமனார். 'கவிக்கோ' விருது வழங்குபவர் விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன். விருது பெறுபவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா. விழாவில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட முடியுமா? தடையேதும் இடையில் வராமல் இருந்தால், விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஒரு கேள்வி. அதை ஐயப்பாடு என்றும் கூறலாம். 2022-ஆம் ஆண்டுக்கான விருது ஓராண்டுக்கும் மேல் தாமதமாக இப்போது வழங்கப்படுவது ஏன்? இதுபோன்ற விருதுகள் அந்தந்த ஆண்டே வழங்கப்படுவதுதானே நியாயம்?

அரசு விருதுகள்தான் இரண்டு, மூன்று ஆண்டுகள் சேர்த்து வழங்கப்படுகின்றன என்றால் தனியார் இலக்கிய அமைப்புகளும் அந்தத் தவறான நடைமுறையைப் பின்பற்றுவது சரியல்ல என்பது எனது கருத்து.

*********************

இந்திய ஆட்சிப் பணியிலும், காவல்துறையிலும் பணியாற்றி ஓய்வுபெறும் அதிகாரிகளில் சிலர், மிக முக்கியமான பொறுப்புகளை வகித்திருப்பதுடன், பல இக்கட்டான சூழல்களைத் திறம்பட எதிர்கொண்ட அனுபவசாலிகளும்கூட... ஒரு சில அதிகாரிகள், முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களுடனும், பரபரப்பான நிகழ்வுகளுடனும் தொடர்புடையவர்கள். அவர்களது அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த வகையில் தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் தலைவர் வால்டர் தேவாரம் குறிப்பிடத்தக்க அதிகாரியாக மட்டுமல்லாமல், ஆளுமையாகவும் வலம் வந்தவர். அவரது வாழ்க்கைப் பயணம்

கரடுமுரடானது மட்டுமல்ல, கண்டிப்பும், துணிச்சலும் ஒருசேர இணைந்த அனுபவமும்கூட. இன்றுவரை, முன்மாதிரியாகப் பேசப்படும் காவல்துறை அதிகாரிகளில் ஒருவராவார் வால்டர் தேவாரம்.

அவர் தனது வரலாற்றை 'மூணாறிலிருந்து மெரினா வரை' என்று தலைப்பிட்டு சமீபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். அந்தப் புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. நண்பர்கள் சொன்னபோதும், காவல்துறையினர் கேட்டுக்கொண்டபோதும் எழுதுவதற்குத் தனக்கு உந்துதல் கிடைக்கவில்லை என்கிறார் தேவாரம். கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்தபோது, வால்டர் தேவாரத்தின் மன உந்துதல் இந்த தன் வரலாற்றுப் பதிவுக்கு வழிகோலி இருக்கிறது.

வால்டர் தேவாரம் தனது 34 ஆண்டு காவல்துறை பணியில் ஐந்து முதல்வர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். ஆரம்ப காலம் என்பதால், பக்தவத்சலம், அண்ணாவிடம் நேரடித் தொடர்பு இல்லை என்றும், அதற்குப் பிறகு முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மூவரிடமும் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.

கீழ்வெண்மணி படுகொலை சம்பவத்தின்போது, அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் வால்டர் தேவாரம். இந்தப் புத்தகத்தில் கீழ்வெண்மணி சம்பவம் குறித்த அவரது பதிவுகள், ஆய்வு மாணவர்களுக்கு முக்கியமான பல தரவுகளை வழங்குகிறது. அந்த சம்பவத்தின் பின்னணி, சமூக சூழல், அதை அரசும், காவல்துறையும் எதிர்கொண்ட விதம், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் போன்ற அனைத்தையும் மிகவும் துல்லியமாகப் பட்டியலிடுகிறார் அவர்.

வால்டர் தேவாரம் என்று சொல்லும்போதே அனைவரின் நினைவிலும் வருவது அவர் தருமபுரி நக்சலைட் தீவிரவாதத்தை எதிர்கொண்ட விதம். நக்சல் இயக்கம் குறித்த விரிவான பதிவுகளுடன், வேலூர் சரகத் துணைத்தலைவராக அவர் எப்படி நக்சல் பிரச்னை நிகழ்ந்த வட ஆற்காடு, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் அந்த பிரச்னைகளை எதிர்கொண்டார் என்பதையும் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மூணாறிலிருந்து தொடங்கிய வால்டர் தேவாரத்தின் வாழ்க்கை, சென்னை மெரினாவில் அவர் தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவர் அலுவலகத்தை அடைந்தது வரை மட்டுமல்லாமல், அதற்குப் பிறகான நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார். பணி ஓய்வுபெற்ற 26 ஆண்டுகளுக்குப் பிந்தைய வால்டர் தேவாரத்தின் நினைவுப் பின்னோட்டம்தான் 'மூணாறிலிருந்து மெரினா வரை'...

புத்தகம், காவல்துறை அதிகாரி ஒருவரின் அறிக்கைபோல இருக்கிறதே தவிர, சுவாரஸ்யமான தன் வரலாற்றுப் பதிவாக இல்லை என்பது குறை. இதைத் தேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் கொடுத்து, தன் வரலாற்றுப் பதிவாக்க வேண்டும் என்பது அவருக்கு எனது வேண்டுகோள்.

************************

இந்திய இலக்கிய உலகின் முக்கியமான ஒரு ஆளுமை குன்வர் நாராயண். கவிஞராக மட்டுமல்லாமல் புனைவு எழுத்தாளராகவும், விமர்சகராகவும் பரவலாக அறியப்படுபவர் அவர்.

அவருக்கு 1995-ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருதும், 2001-ஆம் ஆண்டில் 'கபீர் சம்மான்' விருதும், 2005-ஆம் ஆண்டில் 'ஞானபீடம்' விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன எனும்போது, அந்தத் தலைசிறந்த கவிஞர் குறித்து அதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது?. நவீன சர்வதேசப் பார்வையை, அணுகுமுறையைக் கொண்ட இந்திய அறிவு ஜீவிகளில் ஒருவர் அவர்.

குன்வர் நாராயணனின் 'கோயி தூஸ்ரா நஹி' எனும் 100 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு அவருக்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுத்

தந்தது. அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் எம். கோபாலகிருஷ்ணன். அதில் இடம் பெற்றிருக்கிறது 'மனிதனின் முகம்' என்கிற இந்தக் கவிதை-

'கூலி' என குரல்கொடுத்தவுடன்

எனக்குள் எதுவோ திடுக்கிட்டது

ஒருவன் வந்து என்னருகில் நின்றான்

பொருட்களை தலைமேல் சுமத்தி

எனது சுயமரியாதைக்கு பத்தடி முன்னால்

நடக்கலானான் அவன்

முகத்தைப் பார்த்து ஒருபோதும்

அவனை

அடையாளம் கண்டதில்லை நான்

அவனது சிவப்பு உடையில்

குத்தப்பட்டிருக்கும்

அந்த எண்ணைக் கொண்டுதான்

அறிவேன் நான்

இன்று என் சுமைகளை

நானே தூக்கிக்கொண்டபோது

நினைவில் எழுந்தது

ஒரு மனிதனின் முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com