சங்க காலம்: வளமும் வறுமையும்!

'பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என்று நம் தண்டமிழ்த்தாய் பாராட்டப் படுகின்றாள்.
சங்க காலம்: வளமும் வறுமையும்!

'பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என்று நம் தண்டமிழ்த்தாய் பாராட்டப் படுகின்றாள். தமிழர்க்கு சங்கத்தமிழினும் விழுநிதி வேறில்லை 'இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி' என்று சான்றோர் கூறுவர்.

சங்கத்தமிழர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்; யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராகத் திகழ்ந்தனர். 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்று வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தனர். அதனால்தான் சங்க காலத்தைப் பொற்காலம் என்று போற்றுகின்றோம்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் சங்க காலத்தில் வளமும பெருகியிருந்தது; வறுமையும் தலைகாட்டியது. வளமாக வாழ்ந்தவர்கள் வீட்டில் பொன்னும் பொருளும் ஏராளமாக இருந்தன. பட்டினப்பாலை எனும் நூலில் உருத்திரங்கண்ணனார் ஒரு வளம் கொழிக்கும் காட்சியை வருணிக்கிறார்.

ஒரு பெரிய வீட்டின் முற்றத்தில் நெல்லைக் காய வைத்துள்ளனர். அதைப் பறவைகள், விலங்குகள் முதலியன சேதப்படுத்திவிடாமல், இளம் பெண்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்கள் சிறந்த பொன் ஆபரணங்களை அணிந்திருக்கின்றனர். அப்பொழுது கோழிகள், காய்ந்து கொண்டிருக்கும் நெல்மணிகளைக் கொத்தித் தின்ன வருகின்றன. அது கண்ட மகளிர், அக்கோழிகளை அதட்டி விரட்டுகின்றனர்.

அவர்களின் அதட்டலுக்கு அவை அஞ்சாமல், நெல்லைக் கொத்திக்கொத்தி உண்ணுகின்றன. உடனே அம்மகளிர் தங்கள் காதிலே அணிந்திருந்த தங்கக் காதணிகளைக் கழற்றி அக்கோழிகளின் மேல் வீசியெறிந்து விரட்டுகின்றனர். இவ்வாறு கோழிகளை விரட்டுவதற்காக வீசி எறியப்பட்ட பொற்குழைகளை அப்பெண்கள் மறுபடியும் எடுக்கவில்லை (அவர்கள் வீட்டிற்குள் சென்று வேறு தங்கக் காதணிகளை அணிந்து கொள்வர் போலும்).

எறியப்பட்ட பொற்குழைகள் முற்றத்திலேயே கிடக்கின்றன. இவ்வளவு வசதிபடைத்த மக்களிடம் ஏன் இரக்க உணர்வு இல்லை என்று நினைக்கத் தோன்றும்.

ஏன் கோழிகளை விரட்ட வேண்டும்? அவர்கள் கல்நெஞ்சக்காரர்கள் இல்லை. கோழி, நெல்லைத் தின்னும்போதே எச்சம் இட்டுவிட்டால் நெல் அசுத்தம் ஆகிவிடுமே! அதனால்தான் கோழியை விரட்டினர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மாலையில் நெல்லை ஒன்றுதிரட்டி விடுகின்றனர். அப்பொழுது சிறுவர்கள் அந்த முற்றத்தில் சிறுதேர் (நடைவண்டி) உருட்டி விளையாடுகின்றனர். அந்த பொம்மைத் தேரில் குதிரை பூட்டப்படவில்லை. அவர்களுடைய தேர்ச்சக்கரத்தை ஓட விடாமல் கீழே கிடக்கும் பொற்குழைகள் தடுக்கின்றன.

அகல் நகர் வியன் முற்றத்துச்

சுடர் நுதல் மடநோக்கின்

நேரிழை மகளிர் உணங்கு உணாக்கவரும்

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை

பொற்கால் புதல்வர் புரவியின்று உருட்டும்

முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்

இதுபோன்ற வளம் கொழிக்கும் காட்சிகள் சங்க நூல்களில் ஏராளமாக உள்ளன.

அதே சங்க காலத்தில் படிப்போரின் நெஞ்சைப் பிழியும் 'வறுமைக் கோலமும்' புலவர்களின் கண்களுக்குத் தப்பவில்லை. புலவர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப் படை நூலில், புனையா ஓவியமாக, வறுமையில் வாடும் ஓர் இல்லம் வடிக்கப்பட்டுள்ளது.

'குடிசை வீடு; மண்சுவர்; மழைநீர் குடிசைக்குள் ஒழுகியதால் சுவர் எங்கும் பாசிபடர்ந்து உள்ளன. வளையல் அணிந்த குடும்பத்தலைவி பசியால் வாடி மெலிந்திருக்கிறாள். நீண்ட நாள்களாக அடுப்பில் சமையல் நிகழவில்லை. அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. நாய் அடுப்பங்கரையில் குட்டி போட்டு உள்ளது.

கண்கள் திறக்காத வளைந்த செவியினையுடைய நாய்க் குட்டிகள், பசி பொறுக்க மாட்டாமல் தாய் நாயின் மடியை நாடுகின்றன. பால் சுரக்க இயலாத நிலையில், வலி பொறுக்க முடியாமல், தாய் நாய் குரைப்பது பசி மிகுதியால் ஆகும். வீட்டில் இருப்பவர் சமைத்து உண்டனர் எனில், நாய்க்கும் உணவு கிடைத்திருக்கும். ஆனால் அடுப்பை மூட்டி சமையல் செய்து பல நாள்கள் ஆகிவிட்டனவே!

வீட்டில் உள்ளோரின் பசியைத் தணிக்க குடும்பத் தலைவி ஓர் உபாயத்தைக் கண்டறிந்தாள். மழை பெய்ததால் வீட்டின் கொல்லைப் புறத்தில் குப்பைமேட்டில் 'வேளைக் கீரை' நன்கு முளைத்திருந்தன. அவற்றின் இலைகளை மட்டும் நகத்தால் கிள்ளி சேகரித்தாள். செடியோடு பிடுங்கினால் மறுநாள் கீரை கிடைக்காது அல்லவா? மண் சட்டியில் உப்பு கூட சேர்க்காமல் (வீட்டில் உப்பு இல்லை) வெறும் தண்ணீரில் சமைத்து நன்கு வேக வைத்தாள்.

பிறர் யாரும் பார்க்காதபடி தலைவாசல் கதவை மூடினாள். ஏனென்றால் பிறர் கேலி செய்வார்களாம். வீட்டிலுள்ள அனைவரையும் உட்கார வைத்து வேளைக் கீரையைப் பரிமாறுகிறாள், கிணைப்பறை கொட்டுவோனுடைய இல்லத்தரசி என்று புலவர் நத்தத்தனார் பாடுகிறார்.

திறவாக் கண்ண சாய் செவிக் குருளை

கறவாப் பான்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூழி பூத்த புழற்காள் ஆம்பி

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க்குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர்க் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம்

இவ்வாறு சங்ககாலத்தில் நம் முன்னோர் வளமும் வறுமையும் கலந்த நிலையில் வாழ்ந்து காட்டி வேற்றுமையிலும் ஒற்றுமை பாராட்டி வரலாறு படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com