சிறுக்கன் - சிறுக்கி; குட்டன் - குட்டி

மகன் - மகள் எனப் பொருள்படும் சிறுவன் - சிறுமி என்னும் வழக்குகள் பழங்காலந்தொட்டே தமிழில் இருந்து வருவன.

மறுவருஞ் சிறுவன் தாயே

(45:4) குறுந்தொகை.

பைந்தொடி மகளிரொடு

சிறுவர்ப் பயந்து

(330:9) நற்றிணை.

தலைவ! யானும்என் மனைவியும்

சிறுவனும்

(1265) பெரிய புராணம்.

நின்சிறுவர் நால்வரினும் கரிய

செம்மல் ஒருவனை

(324) கம்பராமாயணம்.

இவற்றுள் சிறுவனைக் குறிப்பதற்குச் சிறுக்கன் என்ற சொல் ஒன்றும் ஆட்சி பெற்றிருந்ததைப் பெரியாழ்வார் திருமொழி உணர்த்துகின்றது.

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன்

(60) என்றும்

கருஞ்சிறுக்கன் குழல் ஊதினபோது

(278)

என்றும் கண்ணனைச் சிறுக்கன் என்று குறிப்பிட்டுப் பாடுகிறார் அவர்.

இச்சொல்லாட்சி இவரிடம் தவிர வேறு தமிழ் நூல்களில் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. பெரியாழ்வார் பெரும்பாலும் பொதுமக்கள் நாவில் உலவிய உயிருள்ள பேச்சுமொழிச் சொற்களைப் பெய்து பாடியவர்; ஆதலின் இதனை அவர் பேச்சு வழக்கிலிருந்தே பெற்றிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

சிறுக்கன் என்பது வழக்குச் சொல்லாயின் பெண்பாலைக் குறிப்பதற்கு, சிறுக்கி என்பதும் அந்நாளில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பெரியாழ்வாரிடமோ அவருக்கு முற்பட்ட காலத்து எழுத்து இலக்கியங்களிலோ அச்சொல் வழக்கைக் காணமுடியவில்லை.

பெரும்பாலும் இளம்பெண் என்னும் பொருளில் பேச்சு வழக்கில் காணப்படும் இச்சொல், அதே பொருளில்

திருப்புகழ் போன்ற பிற்காலத்து

நூல்களில்,

சிறுக்கிகள் உறவாமோ?

என்று ஆட்சி பெற்றிருப்பதைக் காணலாம்.

என்னடி மின்னல் இடைச் சிறுக்கி?

என்னும் பாவேந்தரின் பாடலும் இப்பொருளை உணர்த்துவதாகவே

உள்ளது.

கோசலை வீட்டுச் சிறுக்கிக்கும் சிறுக்கி

என்று வேலைக்காரி எனும் பொருளில் அருணாசலக்கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையில் (அயோத்தி. 7) இச்சொல் இடம் பெறுகின்றது. அவகெடக்கா சிறுக்கி என்பது பேச்சு மொழியில் காணும் ஒரு வசை மொழியாகும்.

மிகமுந்தைய கால நூல்களில் சிறுக்கி எனும் பெண்பாற்சொல் காணப்படாத போதிலும் பெருக்கி என்பதன் எதிர்ச் சொல்லாகக் குறைத்து எனும் பொருளில் சிறுக்கி எனும் ஆட்சி உள்ளது. போகம் எல்லாம் சிறுக்கி என்பது (45:246) வில்லிபாரதம்.

இனி, சிறுக்கன் போலவே அரிதாகவுள்ள குட்டன் எனும் சொல் பற்றியும் காணலாம். முற்காலத்தில் இளம்பிள்ளைகளைக் குட்டன் எனும் சொல்லாற் குறித்தனர். சேர நாட்டு அரச மரபினரை இளமை கருதியே குட்டுவன் இளம்பொறை, பல்யானைச் செல்கெழு குட்டுவன், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் எனக் குறிக்கும் பெயர் வழக்குகள் தோன்றியிருக்கலாம்.

ஏறு என்பது காளை. அக்காளைபோலும் இளம்பிள்ளையான ஆய்ப்பாடிக் கண்ணனைக் குட்டேறு என்கிறாள் ஆண்டாள். குணுங்கு நாறிக் குட்டேற்றை (638) என்பது அந்த நாச்சியாரின் திருமொழி. அவரின் தந்தையான பெரியாழ்வாரோ,

என் சிறுக்குட்டன் (55) என்றும்,

குட்டன் வந்தென்னைப்

புறம்புல்குவான் (100)

என்றும் பாடுகிறார்.

நாவலம் பெரிய தீவினில் என்னும் பதிகத்தில் வானிளவரசு எனத் தொடங்கும் ஒரு பாசுரத்திலேயே இரண்டு முறை வைகுந்தக் குட்டன் என்றும் கோவலர் குட்டன் என்றும் வாய்க்கு வாய் சொல்லி மகிழ்கிறார் அவர்.

இப்படிக் குட்டன் எனும் சொல் இளம்பிள்ளை எனப் பொருள் குறித்ததாலே, வைகுந்தத்தில் உள்ளாரும் எப்போதும் நோக்கும் இளம்பிள்ளையாய்த் திருவனந்தாழ்வான் மடியிலும் ஸ்ரீசேனாபதியாழ்வான் பிரம்பின் கீழும் பெரிய திருவடி சிறகின் கீழும் அன்றோ இத்தத்துவம் வளர்வது என்று பரமபதத்தில் உள்ள இறைவனைக் குறித்து உரையாசிரியார்களும் ஈடுபட்டு எழுதினர். வைகுந்தக்குட்டன் என்பதற்கு அவர்கள் தரும் உரை விளக்கம் இது.

குட்டன் என்னும் சொல் தொடக்கத்தில் மகனைக் குறித்து வழங்கியது போலவே, குட்டி என்பதும் குழவிப்பருவத்துப் பெண் மகவைக் குறித்ததாகவே வழங்கியிருக்க வேண்டும்.

பார்ப்பும் பறழும் குட்டியும்

குருளையும்

...பறப்பவற்று இளமை ( 1500, 1503)

என்று தொல்காப்பியம் கூறுவதையும் நினைக.

இப்படி நெடிய வரலாற்றுக்குரிய இச்சொற்களுள் பெண்மக்களைக் குறிக்கும் சிறுக்கி, குட்டி எனும் சொற்கள் மட்டுமே நிலைத்து நிற்க, சிறுக்கன், குட்டன் முதலான பழஞ்சொற்கள் தமிழில் வழக்கற்றுப் போனது விந்தையே.

எனினும் மலையாளத்தில் மணிக்குட்டன், முரளிக்குட்டன் என இச்சொற்கள் வழக்கிலிருப்பதாக அறிகிறோம். சிறுக்கன் என்பதும், செருக்கன் என மலையாளத்தில் சற்றுத் திரிந்து வழங்குவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com