அக அழகே மெய்யழகு

மனித உளம் சொல்லும் மெய்யழகின் கதை

ஒவ்வொரு மனிதரிடமும் புற அழகு, அக அழகு என இருவகையான அழகு இருக்கிறது. புற அழகில் மயங்குபவர்கள் அக அழகைக் கவனிப்பதில்லை. உண்மையில் எது அழகு? புற அழகா, அக அழகா? ஒளவையார் எது அழகு என்பதை,

சுரதந் தனில் இளைத்த தோகை;

சுகிர்த

விரதந் தனில் இளைத்த மேனி

- நிரதம்

கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்

சமரிற் பட்ட

வடுத்துளைத்த கல்அபிரா மம்

என்று பாடுகிறார்.

ஓர் இளம் பெண் தன் நாயகனோடு கூடி வாழ்ந்து இன்புற்றுக் களைத்துப் போய் படுத்திருப்பாள். அப்போது இன்பக் கிளர்ச்சியிலே மலர்ந்த களைப்பு அவளிடம் தோன்றும். அது பெண்மையின் பொலிவான அழகாக இருக்கும். அதுதான் இல்வாழ்வார் போற்றும் சிறந்த அழகு.

இறைவனைப் போற்றும் பக்தியை உடையவர்கள், விரதங்கள் பலவற்றையும் மேற்கொள்வர். அதனால் அவர்களின் மெலிந்த இளைத்த மேனி அழகாய் விளங்கும். வறியவர்க்கு உதவுவது சிறந்த பண்பாகும்.

அந்தப் பண்பாலே உதவி செய்து பொருள் மறைந்து போனாலும் அதுவே சான்றோர்க்கு அழகு.

வீரனுக்கு அழகு போர்க்களத்தில் தான் அடைந்த விழுப்புண். அதனை காயம் என்று எண்ணாது அதனை அழகாகக் கருதுவர் சான்றோர். தம் உயிரை தம்முடைய இனத்தின் நன்மைக்காகக் கொடுத்தவரின் நினைவாக நிற்கும் நடுகற்கள் அழகியதாகவே

நிற்கும்.

இவை ஒளவையார் சொன்ன அழகு. "சிறுபஞ்சமூலம்' என்ற பழந்தமிழ் நூலில் புலவர் காரியாசான் காட்டும் அழகு தனித்துவமானது. அவர் அழகு என்று சொல்லுக்குப் பதிலாக வனப்பு என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

கண் வனப்புக் கண்ணோட்டங்

கால் வனப்பு செல்லாமை

எண் வனப்பு இத்துணையாம்

என்றுரைத்தல் - பண் வனப்புக்

கேட்டார்நன் தென்றல் கிளர்வேந்தன்

தன்னாடு

வாட்டான்நன் றென்றல் வனப்பு (8)

என்ற பாடலில் கண்ணுக்கு அழகு அன்புடன் பார்த்தல், காலுக்கு அழகு பிறரிடம் கெஞ்சிக் கேட்க போகாமை, ஆராய்ச்சிக்கு அழகு பொருளைத் துணிந்து சொல்வது, இசைக்கு அழகு அதனைக் கேட்டு ரசித்தவர் புகழ்வது, அரசனுக்கு அழகு குடிமக்கள் அவனை நல்லவர் என்று சொல்வது என்கிறார்.

ஆக இந்த இரு புலவர்களின் பாடல்களும் அக அழகுக்கே மகுடம் சூட்டுகின்றன.

எனவே புற அழகைக் கண்காணிக்கிற அதே நேரத்தில் அக அழகையும் ஆழமாய்ப் பார்த்தலே அழகு எது என்பதை தீர்மானிக்க உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com