

கண்ணன் என்னும் பெயரினைக் "கிருஷ்ணன்' என்னும் வடசொல்லின் திரிபாகக் கொள்வர் அறிஞர் சிலர். அதற்குக் "கரிய நிறமுடையவன்', "எவர் மனத்தையும் கவர்ந்திழுப்பவன்' என்பது பொருள்.
தமிழ்ச் சொல்லாகவே கொள்ளும்போது, "யாவரிடத்தும் கண்ணோட்டமுடையவன்', "யாவர்க்கும் கண்போல் அருமையானவன்' என்பன பொருளாம். நம்மாழ்வாரோ,
கண்ணில் உள்ளவன்
எங்கும் நிறைந்தவன்
எல்லார்க்கும் கண் ஆனவன்
களைகண் ஆனவன்
(அடைக்கலம் அளிப்பவன்)
என்னும் பொருள்களில் அப்பெயருக்கு விளக்கம் அளிக்கிறார்.
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளானே (2770)
எங்கும் உளன் கண்ணன் (2872)
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கு (2754)
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (2796)
என்னும் பாசுரப்பகுதிகள் முறையே இவற்றிற்கான எடுத்துக் காட்டுகளாம்.
ஆழ்வார் இங்ஙனம் பாசுரமிட்டது கம்பரின் கற்பனை விரிவுக்குப் பெரிதும் இடம் கொடுத்தது.
இதற்கொரு சான்று காட்ட
வீதிவாய்ச் செல்கின் றான்போல்
விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்க ளூடே
வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை
"யாவர்க்கும் கண்ணன்' என்றே
ஓதிய பெயர்க்குத் தானே
உறுபொருள் உணர்த்தி விட்டான் (1068)
என்பது பாடல்.
இராமன் மிதிலை வீதிகளில் உலாச் சென்ற போது வீதியின் இருமருங்கும் நின்று அவனைக் கண்டு மகிழ்ந்த காரிகையரின் கண்கள் வழியே போனானாம். வீதியிற் செல்வான் போல மகளிர் கண்கள் வழியே சென்ற காரணத்தால் உயர்ந்தோர் அவனுக்குக் "கண்ணன்' என்று சூட்டிய திருப்பெயர்க்கு, "எல்லாரின் கண்களிலும் உள்ளவன்' என்னும் தகுந்த பொருளை அனைவர்க்கும் அவன் அறிவித்து விட்டான் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
"கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளானே' என்றும், "கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கு'
என்றும் அருளிச் செய்தவர் நம்மாழ்வாரே.
எனவே இங்கு, "யாதினும் உயர்ந்தோர்' என்று கவிச்சக்கரவர்த்தி குறிப்பிட்டது நம்மாழ்வாரையும் அவரைப் போன்ற பெரியாரையுமே எனக்
கருதலாம்.
நம்மாழ்வாரைப் "பெரியார்' எனப் பரிமேலழகர் தம் குறள் உரை (இறைமாட்சி அவதாரிகை)யில் உயர்த்திச் சொன்னதும் இங்கும் நினைக்கத் தகும்.
நாம் மேலே குறித்த நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கருதியே,
எண்ணருளி ஏழைமை துடைத்துஎழு மெய்ஞ்ஞானக்
கண்ணருள் செய் கண்ணன் (2766)
என்று பின்னரும் இராமபிரானைப் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி பேசக் காண்கிறோம்.
- முனைவர் ம.பெ. சீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.