புதைப்பதா? எரிப்பதா?

அரியலூர் செந்துறையில் துறவியின் இறுதி சடங்கு குழப்பம்
புதைப்பதா? எரிப்பதா?

அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஒரு பெரியவர் இயற்கையெய்தி விட்டார். அவருக்கு மனைவி மக்கள் இல்லை. துறவியாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். அவரைப் புதைப்பதா? எரிப்பதா? என்ற கேள்வி எழுந்தது. சிலர் புதைக்கத்தான் வேண்டும் என்றனர். சிலர் எரிக்கத்தான் வேண்டும் என்றனர்.

விவாதம் சூடு பிடித்தது. சூட்டைத் தணித்துக் கொள்ள மதுக்கடையிலிருந்து ஒரு பீப்பாயே வந்திறங்கிக் காலியாகிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் ஏற ஏற அந்தராத்மாக்கள் மிகத்தெளிவாக இரண்டையும் செய்யலாமே என்றார்கள். ஒரு பிணத்திற்கு இரண்டையும் எப்படிச் செய்வது என்று பொறுப்புடையவர்கள் குழம்பினார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாண்டி நாட்டில், நம்பி நெடுஞ்செழியன் என்று ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவன் வாழ்நாளில் செய்யாத செயல் இல்லை. இளமகளிரின்பால் காதலுற்று களித்திருந்தான். பூஞ்சோலைகளில் அன்று மலர்ந்திருந்த பூக்களை மாலையாக்கிச் சூடிக்கொண்டான். மார்பில் மணங்கமழச் சந்தனம் பூசினான். தன் பகைவர்களை அவர்களின் சுற்றத்தாரோடு போரில் அழித்தான். நண்பர்களை அரவணைத்தான். யாரையும் இவர்கள் எளியர் என்று அவன் இகழ்ந்ததும் இல்லை. யாரிடத்தும் அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்டதும் இல்லை. அதே சமயம் தன்னிடம் வந்து கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லியதுமில்லை.

புலவர் நிறைந்த அரசவையில், வேந்தர் நடுவே தன் புகழை விளங்கக் காட்டினன். தன் நாட்டுள் புகும் படையை எதிர் நின்று தடுத்தனன். புறங்கொடுத்து ஓடும் படையின் பின் செல்லாது நின்றனன். விரைந்து செல்லும் குதிரையைத் தன் மனம் போல் விரைந்து செல ஊக்கினன். நெடிய தெருவில் தேர் செலுத்தினன். உயர்ந்தோங்கிய களிற்றினை ஊர்ந்தனன். இனியதும் செறிவுடையுதுமான மதுவைப் பலருக்கும் வழங்கினன். பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசி துடைத்தனன். பொருள் விளங்காமல் மயங்க பேசுதலைத் தவிர்த்தனன்.

இவ்வாறு அகத்துறையிலும் புறத்துறையிலும் எல்லாம் குறைவறச் செய்து கோவேந்தனாய் இருந்த அவன் இயற்கையெய்தி விட்டான். இப்போது அவனைப் புதைப்பதா? எரிப்பதா? என்னும் கேள்வி எழுந்தது.

சான்றோர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மன்னர் குலத்தவர் இறந்தால் புதைத்தலும் உண்டு. எரித்தலும் உண்டு என்று. இங்குக் குழுமிய சான்றோருள் ஒரு சாரார், "நம் வேந்தன் முதுமையுற்றே இறந்தனன். முதியவர்களை இறந்தபின் தாழியிலிடுதலே நம் இன வழக்கம். மாமன்னர்களை இவ்வாறே அடக்கம் செய்வது தான் நம் மரபு' என்றனர்.

சான்றோருள் மற்றோரு சாரார், வேந்தனின் உடலைத் தீயிலிடுவதே முறை, பின் அவ்வுடம்பின் சாம்பலைப் புண்ணிய நதியில் கரைத்தலும் தகும். மண், நீர், தீ, காற்று, விசும்பென்னும் ஐந்து பூதங்களிலே சென்று அவன் கலத்தல் வேண்டும். எனவே, நெருப்பிலிட்டு நீரில் கரைத்து மண்ணும் விண்ணும் காணக் காற்றில் அவன் மேனி கலக்குமாக என்றனர்.

சான்றோர் இவ்வாறு கருத்து வேறுபடப் பேசிக்கொண்டிருந்தபோது பேரெயில் முறுவலார் அங்கு வந்தார். அவர்கள் உரைத்தன எல்லாம் கேட்டார்.

""ஐயன்மீர்! புதைப்பதும் எரிப்பதுமா? அவனுக்குப் புகழ் தரப்போகின்றன. அவன் செய்தவற்றை எல்லாம் யார் மறக்க முடியும் அல்லது மறைக்க முடியும்? அப்பெருமகனைத் தாழியில் இடுக அல்லது தீயில் சுடுக. எது செய்யினும் அச்செயலால் அவன் நினைவுகூரப் பெறப் போவதில்லை. அவன் வாழ்ந்த நாளில் செய்த மானமும் வீரமும் கொடையும் பொருந்திய செயல்களன்றோ அவனுக்குரியனவாகப் பேசப் பெறும்..!''

என்றார் அப்புலவர்.

...செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்

இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,

படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே.

(புறநானூறு - 239)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com